கனடா பிரதமரை அசர வைத்த ஆங்கில நூல்; பேனா முனையால் உலகை வென்ற கிராமத்து இளைஞர்!
ஆன்லைனில் அருண்மொழிவர்மன் வெளியிட்ட இந்த புத்தகத்துக்கு இரண்டே நாட்களில் அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட14 நாடுகளில் உள்ள பலர் நூலை படித்துவிட்டுப் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
வாளின் வலிமையால் நாடுகளை வென்ற கதைகளை நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஆனால் பேனா முனையால் ஓர் தமிழக கிராமத்து இளைஞர் நாடுகளைத் தன்வசமாக்கிய சம்பவம் சமீபத்தில் நடைப்பெற்றுள்ளது.
மனிதன் சாதிப்பதற்கு பணமோ, படிப்போ, குடும்பச்சூழலோ தடையாக இருக்க முடியாது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்று நிரூபித்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்கொடுத்தவணிதம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த அருண்மொழிவர்மன் என்ற இளைஞர்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது, தந்தை இறந்து விட்டதால் பிளஸ் 2 வுக்கு பிறகு கல்வியைத் தொடர முடியாமல் 2004ம் ஆண்டு சென்னைக்கு வேலைக்குச் செல்லவேண்டிய சூழல். தாய் மற்றும் தங்கையை காப்பாற்றும் கடமை. குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு. ஆனாலும், தொடர்ந்து கற்க வேண்டும். வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற வெறி மட்டும் ஓர் ஓரத்தில் இருந்தது.
2011ல் வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து, இருந்த் கொஞ்ச நிலத்தில் விவசாயம் பார்த்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற தைரியத்தில் வந்துவிட்டேன். இதற்கிடையே பெங்களூரில் உள்ள ஓர் கல்லூரியில் எம்பிஏ மனித வள மேலாண்மை படிப்பை முடித்தேன்.
தொடர்ந்து ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளுக்குச் சென்றேன். அத்தோடு நிற்காமல் தினசரி ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன்.
அப்போது ஓர் நாள் நூலகத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி என்ற நூலை படித்தேன். அப்போதுதான் எனக்குள் இருந்த எழுத்தார்வம் துளிர் விட்டது. அன்றுதான் நானும் ஓர் எழுத்தாளராக மாறவேண்டும் என முடிவு செய்தேன்.
இதையடுத்து, தொடர்ந்து ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதினேன். நான் எழுதிய 39 கட்டுரைகளை தொகுத்து Reflection of humen Relations என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் உள்ள ஓர் பதிப்பகம் மூலம் e-book ஆக வெளியிட்டேன்.
இந்த e-book-ஐ கலிபோர்னியாவில் ஓர் கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரியும் எனது நண்பரான ரஞ்சித்குமார் வாசித்துவிட்டு, Online chennal மற்றும் பல்வேறு இணைய தளங்களில் வெளியிட்டார்.
வெளியிட்ட இரண்டே நாட்களில் அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட14 நாடுகளில் உள்ள பெரும்பாலானோர்கள் எனது நூலைப் படித்துவிட்டு பாராட்டினர். 300 பேர் எனது நூலை பதிவிறக்கம் செய்திருந்தனர்.
இதில் குறிப்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகத்தில் இருந்து என்னை, எனது நூலை வாழ்த்தி e-mail வந்திருந்ததை அறிந்தபோது, வானில் பறப்பது போன்ற உணர்வை அடைந்தேன்.
மேலும், எனது e-bookஐ படித்த நியூயார்க்கில் உள்ள NYU STERN SCHOOL OF BUSINESS என்ற கல்லூரி எனது புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தொடர்ந்து, அவர்களின் கல்லூரியிலேயே என்னை பிஹெச்டி படிக்க அழைப்பும் விடுத்தனர். ஓர் புத்தகம் என்னவெல்லாம் செய்யும் என்பது எனக்கு அன்றுதான் தெரிந்தது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி, டென்மார்க்கைச் சேர்ந்த கல்வியாளர் ஜெஸ்பர், இஸ்ரேல் பேராசிரியர் யுவால் நோவா ஹராரி, நியூயார்க்கில் இருந்து பால் எம்.பேரட், அமெரிக்க பேராசிரியர் டேவ் உல்ரிச், ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஹெப்வொர்த்ன்னு தொடர்ச்சியாக எதிர்பார்க்காத ஆள்கலெல்லாம், 'குட் ஒன்', 'நைஸ் ஒன்'னு பாராட்டினாங்க. ஓர் புத்தகங்களை எத்தனை இதயங்களைத் தொடுகிறது என்பதை அறிந்து பூரிப்படைந்தேன்.
சினிமா நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன், எனது e-bookஐ படிச்சுட்டு பாராட்டினார். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸும், என்னை ’மேன் புக்’ விருது பெற வாழ்த்துகள்'னு பாராட்டினார்.
மேலும், வரும் செப்டம்பர் 20, 21ம் தேதி கம்போடியாவில் உள்ள தமிழ் அமைப்பு சார்பில் அங்கு நடைபெற உள்ள சர்வதேச தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்திருக்காங்க. 5 நாள் பயணமாக அங்கே போறேன் என்றார்.
ரவீந்திராநாத் தாகூரின் நூலைப் படித்து ஏற்பட்ட எழுச்சியால் எழுத்தாளராகவேண்டும் என சாதாரணமாகத் தொடங்கி எனது எழுத்துப் பணி, என்னையும், தமிழையும் உலக நாடுகளின் மத்தியில் உயர்த்தும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இந்த நூல் அளித்த கட்டுக்கடங்காத உற்சாகத்தால் அடுத்த ஆறே மாதத்தில் தனது இரண்டாவது நூலான 'quotable quotes'ஐ வெளியிட்டுள்ளார் அருண்மொழிவர்மன். இந்த நூலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார். தொடர்ந்து தனது 3ஆவது நூலாk 'Creations of mind'னு ஓர் புத்தகத்தை எழுதி வருகிறார்.
மேலும், நடிகர் பொன்வண்ணன் எழுதி வரும் வரலாற்று நூலான, 'ஆழி சூழ் ஆதி' எனும் புத்தகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளார் அவர்.
உலக நாடுகள், மற்றும் அவற்றின் தலைவர்கள் என எனது நூலை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், நான் பிறந்த மண்ணில் தமிழகத்தில் யாருக்கும் என் நூல் குறித்து தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
அதற்குக் காரணம் நான் ஆங்கிலத்தில் நூல் எழுதியதுதான். எனவே, இனிவரும் காலங்களில் தமிழக மக்களிடம் சென்று சேரும் வகையில் தமிழில் தன்னம்பிக்கைக் கட்டுரை, கதைகள், வரலாற்று நூல்கள் போன்றவற்றை எழுதலாம்னு முடிவு எடுத்து இருக்கிறேன் என்றார் அருண்மொழிவர்மன்.
இவர் தீவிரமாக குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தன்னை தயார் செய்து வருகிறார். விரைவில் என்னை ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக பார்க்கலாம் என்கிறார் கண்களில் நம்பிக்கை மின்ன…
Writing is power, Reading is Life எனும் தனது மேற்கோளையே தனது வாழ்வில் குறிக்கோளாக கொண்டு வாழந்துவரும் அவர், தன்னைப் போல எழுத்தாளராக விரும்பும் இளைஞர்கள் நிறைய வாசிக்கவேண்டும். மேலும் இளைஞர்களிடம் கிரியேட்டிவ்வான சிந்தனைகள் இருக்கவேண்டும், அப்போதுதான் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துக்கள் எழுத்துக்களாக வெளிவரும் என்கிறார்.
விரைவில் ஓர் அரசு அதிகாரியாகி மக்களுக்குச் சேவை புரியவும், தனது நூல்களின் வாயிலாக மக்கள் மனதில் ஓர் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் இவரைப் போன்ற இளைஞர்களைத்தான் இந்தியா தேடிக் கொண்டிருக்கிறது.