கொரோனாவில் இறந்தவர்களை தகனம் செய்யும் 8 கேரளப் பெண்கள்!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 8 பெண் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகிறார்கள்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பலரும் பயந்து இருக்கும் இந்த நேரத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 8 பெண் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இளநிலை சுகாதார ஆய்வாளராக இருப்பவர் சைனி பிரசாத். இவர் மற்றும் அர்ச்சனா, சுனிதா, விஷ்னா, ஜிஷா, ராணி, மஞ்சு மற்றும் சந்தியா ஆகிய 8 பேர் அடங்கிய குழு அம்மாநகராட்சிக்குச் சொந்தமான மின் மயானத்தில் கோவிட்-ல் உயிரிழந்தவர்களை எரியூட்டுகின்றனர்.
உரிய பாதுகாப்புகளோடு, பிபிஇ கவசம் அணிந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களை இடுகாட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்கின்றனர் இந்த பெண்கள் குழு. அங்கு முறைப்படி அவர்களின் சடலங்களை அடக்கம் செய்கின்றனர். இறந்தவர்களின் குடும்ப வழக்கத்தின் படி, மரியாதை செலுத்திய பின்னரே, சைனி மற்றும் குழுவினர் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.
இது வரை 25 உடல்களை இந்த குழுவினர் அடக்கம் செய்துள்ளனர். துணிவுடன் இச்செயலை செய்து வரும் சைனி பேட்டி ஒன்றில் பகிர்கையில்,
“நெருக்கடியான காலகட்டத்தில் இந்தப் பணியைச் செய்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. கொரோனாவில் இறந்தவர்கள் அருகில் உறவினர்கள் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இறப்பவர்களுடன் நான்கு பேராவது இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் எங்கள் குழுவினர் இறந்தவரை உறவாக நினைத்து இதைச் செய்கிறோம். அரசு வழிகாட்டுதல்படியே இறுதி சடங்கை செய்கிறோம்,” என்றார்.
சைனி மற்றும் அவரது குழுவினர் தகுந்த பாதுகாப்பை மேற்கொண்ட பின்னரே இந்த பணியை செய்து வருகின்றனர்.
“தொடக்கத்தில் சற்று பதட்டமாக இருந்தது. உறவினர்கள் இல்லாதவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்தோம். பின்னர் பலருக்கும் உதவியாய் இதைச் செய்து வருகிறோம். கோவிட் குறித்தான பயம் இப்போது எங்களுக்கு இல்லை,” என்றார் ஜிஷா.
இதற்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம், வடகரை நகரசபையில் பணி செய்துள்ளார் சைனி பிரசாத். அங்கும் ஆதரவின்றி இறக்கும் பலரது உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். அரசுப் பணி என்பது சம்பளத்துக்கான விஷயம் மட்டுமல்ல.
ஆத்ம திருப்திக்காகவும்தான் என்ற லட்சியத்தோடு வாழும் சைனி பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்குச் சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தகவல் உதவி: மாத்ருபூமி, இந்து தமிழ்