கொரோனாவால் இறந்தவர் உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்யும் ரோபோ ஆம்புலன்ஸ்!
இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யும் நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ள தமிழக நிறுவனங்கள்.
கொரோனா வைரஸ் மனிதர்களிடையே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. இந்தப் பெருந்தொற்று ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு வேகமாகப் பரவி வருவதால் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகிறது.
இந்த வைரஸ் தொற்று பாதித்த பெரும்பாலானோரிடம் அறிகுறிகள் ஏதும் தென்படாத காரணத்தால், சக மனிதர்களை வைரஸ் தொற்று சுமந்து வருபவர்களாகவே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தானியங்கி செயல்பாடுகளுக்கான தேவை
உயிருடன் நடமாடும் மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர்களின் நிலை கற்பனைக்கும் எட்டாத வகையில் மோசமாக உள்ளது.
உறவினர்கள் சூழ அவரவர் மதக் கலாச்சாரப்படி சகல மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வழியனுப்பி வைக்கப்படும் சடலங்கள், இன்று குழிகளுக்குள் தூக்கி வீசப்படுகின்றன. புதைப்பதற்கு இடம் மறுக்கப்படுகிறது. உடல்களைக் கையாள மக்கள் அஞ்சுகின்றனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோக்களைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது.
இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள்கூட உடலைப் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யத் தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கும் தொற்று பரவிவிடும் என்கிற அச்சமே இதற்கு முக்கியக் காரணம்.
எனவே இறந்தவர்களின் உடல் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவேண்டும். அதேசமயம் உடலைக் கையாள்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் ஒருசேர தீர்வுகாண்பது அவசியமாகிறது.
இந்தியாவின் முதல் ஆம்புலன்ஸ்
எம் ஆட்டோ (Mauto) நிறுவனம், ஜாபி ரோபோ (Zafi Robot) ஆகிய நிறுவனங்கள் இரண்டும் ஒன்றிணைந்து இந்தச் சூழலை மாற்றியமைத்து தீர்வுகாணும் வகையில் ஒரு புதுமையான இயந்திரத்தை வடிவமைத்துள்ளன.
இவர்கள் இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யும் நவீன இயந்திரத்தைக் வடிவமைத்துள்ளனர். இந்தக் கருவி மூன்று சக்கர ஆம்புலன்ஸுடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் உடலை இந்த இயந்திரத்தில் வைத்தால் கம்ப்ளீட் அடானமஸ் சிஸ்டம் (Complete Autonomus System) மூலம் மனிதர்களின் உதவியின்றி இந்த இயந்திரம் அடக்கம் செய்துவிடும்.
“இறந்தவர்களின் உடலை அனைவரும் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் உடலை தக்க மரியாதையுடன் அடக்கம் செய்ய முடியவில்லை. இதைக் கண்டு மனம் வருந்தினோம். இதற்கு புதுமையான தீர்வை ஆராய்ந்தோம்,” என்கிறார் எம் ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ யாஸ்மின் ஜவஹர் அலி.
எம் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் மன்சூர் அலிகான் கூறும்போது,
“மாசில்லா தமிழகம் திட்டத்தை உருவாக்குவதன் முன்னோட்டமாக எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தினோம். அதைத் தொடர்ந்து இன்றைய சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் நடத்தும் விதமாக மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆம்புலன்ஸை சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம். இந்தியாவிலேயே இதுபோன்ற ஆம்புலன்ஸ் அறிமுகமாவது இது முதல் முறை,” என்றார்.
ஜாபி சேவியர் ரோபோ என்கிற தானியங்கி ஸ்ட்ரெச்சர் இணைக்கப்பட்ட எம் ஜாபி ரெஸ்க்யூவர் ஆம்புலன்ஸ் (M zafi Rescuer Ambulance) இந்தியாவின் முதல் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ் ஆகும்.
கொரோனா நோயாளிகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து மாத்திரைகள் வழங்குவதற்காக செவிலியர்கள் செல்லும் போது நோயாளி, உதவியாளர்கள் இடையேயான சந்திப்புகளை குறைக்கும் விதமாக Zafi ரோபோக்களை ஏற்கனவே வடிவமைத்துள்ளனர் நிறுவனம் Zafi Robot. இந்த ரோபோக்களை மருத்துவமனைகளில் செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை அங்கீகாரம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்ஸ் செயல்பாடுகள்
இந்த எலக்ட்ரிக் ஆம்புலன்ஸை பெண் ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள். முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆம்புலன்ஸ்களில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிசெய்யப்படும்.
இதில் ஜாபி சேவியர் ரோபோ இணைக்கப்பட்டிருக்கும். இது அனைத்து வகையான நகர்வுகளுடன் தானாகவே ஸ்ட்ரெச்சர் போன்று இயங்கக்கூடியது. இதற்கு மனிதத் தலையீடு அவசியமில்லை. இவை தானாகவே இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவேண்டிய பகுதிக்கு எடுத்துச்செல்லும். அங்கு சென்றதும் அந்த உடல் நல்லடக்கம் செய்யப்படவேண்டிய குறிப்பிட்ட குழிக்குள் தானாகவே உடலை பாதுகாப்பாக இறக்கிவிடும்.
இந்த முயற்சியின் பலனாக இறந்தவர்களின் உடல்கள் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதுடன் வைரஸ் பரவும் அபாயமும் குறையும். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்களின் உயிர் பாதுகாக்கப்படும்.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகம் என்பதால் முதலில் சென்னையில் இந்த ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்பம் உறவுகளை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது போன்றே வேகமாகப் பரவி வரும் பெருந்தொற்று சமயத்தில் மனிதர்கள் விலகி இருக்கவும் உதவி வருகிறது.
ஊரடங்கு சமயத்தில் சாலைகளில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் ட்ரோன்கள், மனிதக் கரங்கள் படாமல் தானியங்கி முறையில் சானிடைசர் வழங்கும் கருவிகள், கொரோனா பரிசோதனைக்கு உதவும் வகையில் சளி மாதிரியை சேகரிக்கும் ரோபோக்கள், மருத்துவமனையில் நோயாளிகளிடம் மருந்துகளையும் உணவுப்பொருட்களையும் கொண்டு சேர்க்கும் ரோபோக்கள் இந்த வரிசையில் சமீபத்திய அறிமுகம்தான் இந்த ஆம்புலன்ஸ். இதுபோன்ற புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மனிதகுலத்திற்குப் பேருதவியாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது.