அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுத்து மகிழ்விக்கும் டாக்டர் ஜோடி!
யேல் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளாக பேராசிரியர்களாக பணியாற்றிய தம்பதி துவங்கிய பீப்பிள்4பீப்பிள் முயற்சி இந்தியா முழுவதும் உள்ள 300-க்கும் அதிகமான அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ உதவியுள்ளது.
மைசூருவின் பெரியபாட்னா அருகே இருக்கும் பெக்கரே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்புகளுக்கிடையே கிடைக்கும் இடைவேளையின்போது வகுப்பறையிலிருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடுகிறார்கள். மேலே ஏறுகிறார்கள். குதித்து விளையாடுகிறார்கள். ஊஞ்சலில் விளையாடுகிறார்கள். சறுக்குமரம் விளையாடுகிறார்கள். சமீபத்தில் ’பீப்பிள்4பீப்பிள்’ (People4People) இந்தப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது.
”இதற்கு முன்பு எங்கள் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் விளையாட ஒரு சிறு தரிசு நிலம் மட்டுமே இருந்தது. குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதியை எங்களால் திரட்ட இயலவில்லை. 2017-ம் ஆண்டு சீசா, ஊஞ்சல், சறுக்குமரம் உள்ளிட்டவற்றை பீபிள்4பீபிள் விளையாட்டு மைதானத்தில் நிறுவினார்கள். அப்போதிருந்து குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடிகிறது,”
என்றார் மைசூருவின் பெக்காரேவில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஷ்ணுகுமார்.
இந்தியாவில் பத்தில் நான்கு குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் இல்லை என்று மனித வள மேம்மாட்டு அமைச்சகம் 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாததையும் அவர்களது விளையாட்டு நேரம் பாதிக்கப்படுவதையும் அறிவாற்றல் திறன், சமூக திறன், தசை இயக்கத் திறன் போன்றவற்றை மேம்படுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதையும் உணர்த்துகிறது.
குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியில் உள்ள நடவடிக்கைகளில் கட்டாயம் ஈடுபடுவதை உறுதிசெய்யத் தேவையான முயற்சிகளை பீப்பிள்4பீப்பிள் மேற்கொண்டு வருகிறது. நகரம் முழுவதும் 306 அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கட்டும் பணியை இந்த அறக்கட்டளை மேற்கொண்டது.
டெல்லியின் சஹிபாபாத்தில் இருக்கும் லக்ஷ்யாம் பள்ளி, தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி ஜில்லாவில் இருக்கும் மண்டல பிராத்தமிகா பாடசாலா, நாகப்பட்டினத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி போன்றவை இந்த நிறுவனத்தின் முயற்சியால் பலனடைந்த பள்ளிகளாகும்.
நிறுவனர்கள்
டாக்டர் சுனிதா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் டாக்டர் அர்ஜுன் கல்யாண்பூர் ஆகியோரால் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது பீப்பிள்4பீப்பிள். அதற்கு முன்பு இருவரும் சுமார் பத்தாண்டுகள் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தனர்.
அமெரிக்காவில் இருக்கும் பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் நாள் முழுவதும் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும் என்கிறனர் இந்நிறுவனர்கள். ஆனால் இவர்கள் தங்களது மூன்று வயது பெண் குழந்தையோடு இந்தியா திரும்பியபோது ஒரு சில பூங்காக்கள், தனியார் க்ளப், குடியிருப்பு வளாகங்கள் தவிர வேறு எங்கும் விளையாட்டு மைதானங்கள இல்லாததை இருவரும் கவனித்தனர்.
”இந்தச் சூழலே எங்களை சிந்திக்க வைத்தது. நகரில் நம்மைப் போன்றோரின் குழந்தைகளே விளையாடத் தேவையான சாதனங்களை அணுகமுடியாத நிலை இருக்குமானால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வி மனதில் எழுந்ததும்தான் நாங்கள் அரசுப்பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பீப்பிள்4பீப்பிள் அமைக்கத் தீர்மானித்தோம்.
நான் குழந்தைகளுக்கான இதய சிகிச்சை நிபுணர் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாட்டு மைதானங்களில் ஓடி விளையாடவேண்டும் என்றும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றவேண்டும் என்றும் விரும்பினேன்,” என்றார் சுனிதா.
தாக்கம்
ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலும் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களில் அதிக நேரம் செலவிட விரும்புவார்கள். வெளியே சென்று விளையாடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதுடன் அவர்களது எதிர்வினை மற்றும் கைகளுக்கும் கண்களுக்கும் இடையே இருக்கும் ஒருங்கிணைப்புத் திறனையும் மேம்படுத்தும். ஊஞ்சல், சறுக்குமரம் போன்றவை குழந்தைகள் சமநிலையை உருவாக்கவும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும்.
”இந்தியாவில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் அதிகளவிலான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் அங்கு விளையாட்டு மைதானங்கள் கட்டுவதற்குத் தேவையான வளங்கள் இருப்பதில்லை. நாங்கள் 2007-ம் ஆண்டு இந்தப் பள்ளிகளில் விளையாட்டு சாதனங்களை வழங்குவதற்காகவே இம்முயற்சியைத் துவங்கினோம். அப்போதிருந்து 300 பள்ளி வளாகங்களில் விளையாட்டு சாதனங்களை நிறுவியுள்ளோம். வண்ணமயமான விளையாட்டுகளை தங்களது பள்ளியில் மாணவர்கள் பார்க்கும்போது அவர்களிடம் காணப்படும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது,” என்றார் சுனிதா மகேஸ்வரி.
2016-ம் ஆண்டு தங்களது பள்ளியில் பீப்பிள்4பீப்பிள் விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுத்த பிறகு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறார் பெங்களூருவின் ஹோசாகோட் பகுதியில் இருக்கும் நந்தாகுடியின் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாகுமாரி.
”பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான அணுகியவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. பள்ளி வளாகத்தில் அனைத்து சாதனங்களுடன்கூடிய விளையாட்டுப்பகுதி அமைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். இதை சாத்தியப்படுத்திய பீப்பிள்4பீப்பிள் முயற்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் பிரேமா.
அறக்கட்டளையின் செயல்பாடுகள்
பீப்பிள்4பீப்பிள் பெங்களூருவின் வைட்ஃபீல்ட் மற்றும் ஹோசாகோட் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதன் செயல்பாடுகளைத் துவங்கியது. அதன் பிறகு கர்நாடகாவின் மற்ற பகுதிகளில் விரிவடையத் துவங்கி பின்னர் இந்தியா முழுவதும் செயல்பட ஆரம்பித்தது.
விளையாட்டுப் பகுதி தேவைப்படும் அரசுப் பள்ளிகளைக் கண்டறிவதில் சில வழிமுறைகளைப் பின்பற்றுவற்தாக நிறுவனர்கள் தெரிவித்தனர். விளையாட்டு சாதனங்களை பள்ளிகளில் நிறுவுவதற்கு முன்பு சில தன்னார்வலர்கள் பள்ளியைப் பார்வையிட்டு தேவை இருப்பதை உறுதிசெய்வதுடன் சாதனங்களைப் பராமரிப்பதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறையையும் மதிப்பிடுகின்றனர்.
பள்ளிகளில் விளையாட்டு சாதனங்களை நிறுவுவதற்கான முழு பொறுப்பையும் பீப்பிள்4பீப்பிள் ஏற்றுக்கொள்கிறது. இந்த சாதனங்களைத் தயாரிக்கும் பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது.
”விற்பனையாளர்களின் கடந்தகால செயல்பாடுகள், நிதி சார்ந்த பின்னணி, தொழில்நுட்பத் திறன் போன்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு மைதானத்திற்கான சாதனங்களைத் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்படுகிறது. வடிவமைப்பு முதல் தயாரிப்பை சோதனை செய்வது வரை அனைத்துப் பணிகளையும் விற்பனையாளர்கள் மேற்கொள்வார்கள்,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் சுனிதா.
டெலிரேடியாலஜி சொல்யூஷன்ஸ், RXDX க்ளினிக் போன்ற குழுமங்கள், வொண்டர்லா, பெங்களூர் க்ளப் போன்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நன்கொடையாளர்கள் இடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 25 லட்ச ரூபாய் வரை பீப்பிள்4பீப்பிள் பெறுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக விளையாட்டு சாதனங்களை வழங்குகிறது.
”சாதனங்களை வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அவற்றை பள்ளிகளில் நிறுவுவதற்கும் பீப்பிள்4பீப்பிள் பொறுப்பேற்கிறது. சாதனங்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவு சுமார் 6,000 ரூபாயாகும். இந்தச் செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சாதனங்களை வாங்குவது, அவற்றை நிறுவுவது உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளுக்கு சுமார் 90,000 ரூபாய் வரை ஆகும். நிதி உயர்த்தி இந்தத் தொகையைத் திரட்டுகிறோம்,” என்றார் பிரேமா.
ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு நேரம் என்பது அவசியம். பீப்பிள்4பீப்பிள் போன்ற நிறுவனங்கள் இதை சாத்தியப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் நிதி உயர்த்துவதிலும் உள்ளூர் சமூகத்தினரின் பங்களிப்பு அவசியம்.
ஆங்கில கட்டுரையாளர் : ரோஷ்னி பாலாஜி | தமிழில் : ஸ்ரீவித்யா