அமெரிக்க நிறுவனத்தின் தலைவராக இன்னொரு இந்தியர்: FedEx-இன் சிஇஒ ஆன ராஜ் சுப்ரமணியம் யார்?
இந்தியாவில் பிறந்த ராஜ் சுப்ரமணியம் அமெரிக்க டெலிவரி நிறுவனமான ஃபெடெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்த ராஜ் சுப்ரமணியம் அமெரிக்க டெலிவரி நிறுவனமான ஃபெடெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபிரெட் ஸ்மித் 1971 இல் ஃபெடெக்ஸ் நிறுவனத்தை நிறுவினார் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் கொரியர், இ-காமர்ஸ், பிற சேவை துறையில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இந்நிறுவனம் டெலிவரி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைத்ததோடு, அதனை வழிநடத்தியும் வந்த ஃபிரெட் ஸ்மித், 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தலைமைப் பதவியில் இருந்து விலகி இந்தியாவைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியத்தை தலைமை பொறுப்பில் அமர வைத்துள்ளார்.
யார் இந்த ராஜ் சுப்ரமணியம்?
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ் சுப்பிரமணியம், மும்பையில் உள்ள ஐஐடியின் முன்னாள் மாணவர். ஐஐடி பாம்பே-வில் இரசாயனப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் இரசாயன பொறியியலில் முதுகலைப் படிப்பதற்காக 1987 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். அத்துடன் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் MBA முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ராஜ் சுப்ரமணியம் கடந்த மூன்று ஆண்டுகளாக FedEx Corp இன் தலைவர் மற்றும் COO ஆகவும், 31 ஆண்டுகளாக FedEx நிறுவனத்தின் நம்பமான ஊழியராகவும் இருந்து வருகிறார். ராஜ் சுப்ரமணியத்தின் உழைப்பை பாராட்டும் விதமாக, 1996ம் ஆண்டு அவருக்கு தென்கிழக்கு ஆசியாவிற்கான சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள FedEx நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் 2006ம் அமெரிக்க நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் தலைமை பொறுப்பிலும் அமரவைக்கப்பட்டார்.
தற்போது FedEx கார்ப்பரேஷனின் தலைவராகவும், சிஇஓவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, FedEx Express, FedEx Ground, FedEx Freight, FedEx Services, FedEx Office, FedEx Logistics மற்றும் FedEx டேட்டாவொர்க்ஸ் உள்ளிட்ட அனைத்து FedEx இயக்க நிறுவனங்களுக்கும் ராஜ் சுப்ரமணியத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்க உள்ளது.
"அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் தருணத்தில், ராஜ் சுப்ரமணியம் திறமையான தலைவர் FedEx ஐ மிகவும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் எனக்கு மிகுந்த திருப்தி உள்ளது," என்று ஃபிரெட் ஸ்மித்தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு வெளியானதில் இருந்தே ராஜ் சுப்ரமணியத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றால் எப்போதும் சிலிர்ப்பாக இருக்கும் என்று கேரள முன்னாள் எம்பி சசி தரூர் சுப்பிரமணியத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதலீட்டாளரும், SAP இன் தலைவராகவும் இருந்த சக கேரள-அமெரிக்கரான சஞ்சய் பூனன்,
"வாழ்த்துக்கள் ராஜ்...! நீங்கள் ஒரு ஐக்கானிக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியேறியவர்கள் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுந்தர் பிச்சை மற்றும் 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆன சத்யா நாதெள்ளா, ட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தொகுப்பு: கனிமொழி