நீட் தேர்வில் வென்றும் கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மலைக்கிராம மாணவி - கிடைக்குமா உதவி?
நீட் தேர்வில் 581 மதிப்பெண்கள் எடுத்தும் பொருளாதார வசதி இல்லாததால் கிடைத்த மருத்துவ இடத்தில் சேர முடியாமல் தவிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த மாணவி சுஜிதா.
பல மாணவர்களின் டாக்டர் கனவை சில நேரங்களில் சாத்தியமாக்குகிறது நீட் நுழைவுத்தேர்வு. நீட் தேர்வில் தோல்வியுற்று சில மாணவமலர்கள் கருகிக் கொண்டு இருக்கின்றனர்.
581 மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருந்தாலும், பொருளாதார சூழலால் தன்னுடைய கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் போய் விடுமோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி சுஜிதா.
கொடைக்கானல் அருகே உள்ள மேல்பள்ளம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சுஜிதா. மருத்துவ கனவோடு பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
“எங்களுடையது மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கிருந்து சென்று முதன் முதலில் நீட் தேர்வு எழுதும் மாணவி நான். முதல் முறை நீட் தேர்வு எழுதிய போது 432 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போது என்னுடைய அப்பா எனக்கு உறுதுணையாக இருந்தார்,” என்று சொல்கிறார் மாணவி சுஜிதா.
2வது முறை நீட் தேர்வு எழுதத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அப்பா திடீரென இறந்துவிட்டார். அப்பா இறந்த துக்கத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன். அந்த சமயத்தில் சிறிது பிரேக் எடுத்துவிட்டு தேர்வு எழுதிய நிலையில் 472 மதிப்பெண்களை எடுத்தேன்.
கடந்த 5 மாதங்களாக என்னுடைய உறவினர்கள் சேர்ந்து கடன் வாங்கி என்னை நீட் வகுப்பில் சேர்த்துவிட்டனர். 3வது முறை தேர்வு எழுதிய போது 720 மதிப்பெண்களுக்கு 581 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த முறை அப்பா மற்றும் என்னுடைய கனவு நிறைவேறி இருக்கிறது.
“இங்கே இருக்கும் மலைக்கிராம ஊர்களில் மருத்துவமனை வசதி கிடையாது. முக்கியமாக என்னுடைய அம்மா பிறந்த ஊரில் சாலை போக்குவரத்துக் கூட கிடையாது. ஏதேனும் அவசரம் என்றால் கூட தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் பலர் உயிரிழந்தும் கூட போயிருக்கிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையை மாற்றி நான் மருத்துவம் படித்து எங்கள் மக்களுக்கு சேவையாற்றவே மருத்துவராக விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் சுஜிதா.
நீட் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்துள்ளது. ஆனால், குடும்பத்தில் பொருளாதாரத்திற்கான வேராக இருந்த இவரின் தந்தை சந்திரசேகர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தாய் மற்றும் சகோதரியுடன் சுஜிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மருத்துவ இடம் கிடைத்த போதும் பொருளாதாரச் சூழ்நிலையால் அடிப்படை கட்டணம் கூட தன்னால் கட்ட இயலாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார் இவர்.
மலைக்கிராமத்தில் அடிப்படை கல்வியே எட்டாத கனியாக இருக்கும் நிலையில் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் நீட் தேர்வெழுதி வெற்றி பெற்றாலும் கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவிக்கு அரசு உதவ வேண்டும் என்று அவரின் உறவினர்களும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : சன் நியூஸ்
லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப் - நீட் தேர்வு மூலம் டாக்டர் கனவை நனவாக்கிய தர்மபுரி கான்ஸ்டபிள்!