லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப் - நீட் தேர்வு மூலம் டாக்டர் கனவை நனவாக்கிய தர்மபுரி கான்ஸ்டபிள்!
லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப் பிடிக்க இருக்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர். நீட் தேர்வு மூலம் அவருக்கு டாக்டர் கனவு நனவாகி இருக்கிறது.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமே தனது எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆளுக்கு ஆள் இது வேறுபடுமே தவிர, கனவுகளே இல்லாத நபர்களை நாம் பார்க்கவே முடியாது.
ஆனால், கனவு காணும் அனைவருக்குமே அந்த கனவு நிஜமாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. வீட்டுச் சூழ்நிலை, பொருளாதார கஷ்டம், போதிய மதிப்பெண் இல்லை என ஏதாவது ஒரு காரணத்தினால், கனவினை பரணில் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, கிடைத்த பாதையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் அதிகம்.
நம் கனவுகளுக்கு எப்போதுமே காலக்கெடு இல்லை. மனது வைத்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் கனவை தூசி தட்டி எடுத்து, நனவாக்க முடியும். இதற்கு புதியதோர் உதாரணமாகி இருக்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ்.
லத்தி பிடித்த கையில் இனி இவர் ஸ்டெதஸ்கோப் பிடிக்க இருக்கிறார். 2016ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய சிவராஜ், தற்போது நீட் தேர்வு எழுதி மருத்துவ மாணவர் ஆகி இருக்கிறார்.
மருத்துவக் கனவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான சிவராஜ். இவரது பெற்றோர் பெயர் மாணிக்கம் மற்றும் இன்பவள்ளி. பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சிவராஜுக்கு சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 915 மதிப்பெண்கள் பெற்றதால், அப்போது அவரால் மருத்துவராக இயலவில்லை. .
எனவே, அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பிஎஸ்சி வேதியியல் படிப்பை முடித்தார் சிவராஜ். அதன்பிறகு, போலீஸ் தேர்வு எழுதிய அவர், கடந்த 2020ம் ஆண்டு அதில் தேர்வாகி, போலீஸ் பணியில் சேர்ந்தார். ஆவடி சிறப்புக் காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தபோது, அவருக்குள் இருந்த டாக்டர் கனவு அப்படியே இருந்துள்ளது.
எனவே, எப்படியும் டாக்டராகியே தீர்வது என முடிவெடுத்த அவர், போலீஸ் பணி செய்து கொண்டே நீட் தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய சிவராஜுக்கு, போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. அம்முறை நீட் தேர்வில் அவர் 268 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இருப்பினும் மனம் தளராத சிவராஜ் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள்
மே மாதம் நடந்த இந்தாண்டிற்கான நீட் தேர்விலும் மீண்டும் கலந்து கொண்டார் சிவராஜ். தமிழகத்தில் இருந்து 1.50 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், தனது கடின உழைப்பால் இம்முறை வெற்றியை தன் வசமாக்கினார் சிவராஜ். இம்முறை அவர் நீட் தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றார்.
நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் பாஸாகும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின் மூலம், கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு சிவராஜுக்கு கிடைத்துள்ளது.
“சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் பாஸாகும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதால், மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் கடந்தாண்டு ஏற்பட்டது. எனது தம்பியும் தற்போது படித்து வருவதால், அவரது உதவியுடன் நீட் தேர்வுக்கு தயாரானேன்,” என்கிறார்.
”பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருமே என் மனதிற்கு விருப்பமானத் துறையைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது,” எனக் கூறுகிறார் சிவராஜ்.
மேலும், தற்போது போலீஸாக அரசுப் பணியில் இருப்பதால், தனது மூத்த அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று, தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் சிவராஜ் மாணவராக சேர இருக்கிறார்.
ஒருமுறை இருமுறை முயற்சி செய்து பார்த்து விட்டு, சில இடங்களில் நீட் தேர்வு பயத்திலேயே பல மாணவர்கள் தவறான முடிவு எடுக்கும் நிலையில், மருத்துவத் துறைக்கு சம்பந்தமே இல்லாத போலீஸ் பணியில் சேர்ந்தபோதும், மனம் தளராமல், தனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராகி, இன்று தனது இலக்கில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார் சிவராஜ்.
தனது இந்த வெற்றி மூலம் நீட் தேர்வோ, மருத்துவக் கனவோ, எதுவாக இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும் என சிவராஜ் நிரூபித்திருக்கிறார்.
நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழைத் தொழிலாளிகளின் வாரிசுகள்; வறுமையை முறியடித்து வெற்றியை சூடியது எப்படி?