ஒரு குச்சி; ஒரு குல்ஃபி, ஒரு வருடம் - 24 லட்சம் வருமானம்...
நான்கு பொறியாளர்கள் இணைந்து, 80சதுர அடியில் ஒரு குல்ஃபீ தயாரிப்பு நிறுவனம் துவங்கி, இன்றி ஒரு வருடத்தில் 24 லட்சம் வருமானம் ஈட்டுகின்றனர்.
2017ல் சென்னையைச் சேர்ந்த 4 நண்பர்கள், தொழில் முனைய வேண்டும் என விரும்பினர். ஆனால் எந்தத்துறையில் நுழைவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
நவீன்குமார், கார்த்திக் சுகுமாரன், கார்த்திகேயன் மற்றும் மிதிலேஷ் குமார் ஆகிய நான்கு நண்பர்கள் பொறியியல் முடித்துவிட்டு, பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.
"நிதி, விளம்பரம், மனிதவளம், என பல்வேறு துறைகளில் நாங்கள் பெற்ற அனுபவத்தை ஒரு தொழிலில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக எங்களுக்கு இருந்து வந்தது," என்கிறார் நவீன்.
இவர்கள் கூடி விவாதித்த பொழுது, குல்ஃபீ சென்னை நகரத்தில் பிரபலமாகி வந்ததை கவனித்தனர்.
"சென்னை மக்களுக்கு குல்ஃபீ மிகவும் பிடித்திருந்தது. கோடைக் காலங்கள் மற்றும் வெப்பம் அதிகம் இருந்த நாட்களில் மட்டுமே அவை விற்கின்றன என்ற சூழல் இல்லை. மழை நேரங்களில், இரவுகளில் என அனைத்து நேரத்திலும், காலத்திலும், மக்கள் அவற்றை உண்பதை நாங்கள் கவனித்தோம். சென்னையில் எப்பொழுதும் அவை விற்றன," என்கிறார் நவீன்.
சிறிய மற்றும் நடுத்தர அளவுள்ள நிறுவனங்கள் இத்துறையைப் பற்றி அறிவதற்காக நால்வரும் அணுகினர். அந்த கிளையின் துணை அலுவலர் அவர்களுக்கு அரசுத்துறையில் வளர்ந்து வரும் தொழில்முனைவர்களுக்கு உள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் என்ன என்பதை விளக்கியுள்ளார்.
"அந்தத் தகவலைப் பெற்று, நால்வரும் தலா 10,000 முதலீடாக வைத்து, 80 சதுர அடியில் ஒரு இடத்தைப் பிடித்து எங்கள் குல்ஃபீ உற்பத்தியைத் துவக்கினோம். எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்த காரணத்தால், உடனடியாக தயாரிப்பை ஆரம்பித்து, பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் விற்க ஆரம்பித்தோம்,” என்கிறார் நவீன்.
‘க்ரீன் கேசில் புட் அன்ட் பெவரேஜஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தைத் துவக்கி, அதன் அங்கமாக ‘பூசோ குல்ஃபீ’ ‘Boozo Kulfi' என்ற பெயரில் விளம்பரப்படுத்தினர். அவர்கள் தயாரிப்புக்கு அதிக வரவேற்பு இருந்தது. ஒரே வருடத்தில் நான்கு நண்பர்கள் இணைந்து 24 லட்சம் பெறுமானமுள்ள குல்ஃபீ விற்றுள்ளனர்.
வளர்ந்து வரும் சந்தை :
2011ல் இருந்து 2018 வரை, இந்தியாவில் ஐஸ் கிரீம் சந்தை என்பது 16.9% CAGR வளர்ச்சி கண்டுள்ளது. இதற்குக் காரணமாக இந்தியாவின் வானிலை மாற்றம் மற்றும் வாடிக்கையாளர்களின் உணவுப் பழக்க மாற்றங்கள் உள்ளன. 2024 ஆம் ஆண்டில், இந்த சந்தையின் மதிப்பு 375.8 பில்லியனாக வளரும் என IMARC அறிக்கை கூறுகிறது.
மேலும் பால் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியில், இந்தியா முன்னிலை வகிப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இந்த சந்தையில் குலஃபீ அனைவர்க்கும் பிடித்த ஒரு பொருளாக மாறியுள்ளது. இதில் ரப்பிரி, ஃபலூடா, மற்றும் மட்கா குலஃபீ ஆகியவை தற்பொழுது அதிகம் கிடைக்கின்றன.
இது Boozo kulfiக்கு சாதகமாக அமைந்தது. பின்னர் வளர்ந்து வரும் தேவையை சரிக்கட்ட 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தனர். உற்பத்தியையும் 1000 சதுர அடி தொழிற்சாலைக்கு மாற்றினர்.
"எங்களுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி என்பது தொழில் கடனுக்கு கிடைத்த அனுமதிதான். உத்யோக் ஆதார் சான்றிதழை கடனுக்கான விண்ணப்பத்தில் நாங்கள் இணைத்த காரணத்தால் அது எளிதாக அமைந்தது. எங்கள் எண்ணம் என்ன, நோக்கம் என்ன, லட்சியம் என்ன என்பதை விளக்கியவுடன், கனரா வங்கியில் இருந்து 26 லட்சம் தொழில் கடனாக எங்களுக்கு கிடைத்தது," என்கிறார் நவீன்.
தொழில் அணுகுமுறை :
பூசோ பிராண்ட் சந்தையில் இன்னமும் புதிய பெயர் தான். நேரடியாக சில்லறை வணிகர்களிடம் சென்று சேர்ப்பதன் மூலம் இதனை சந்தையில் தனித்த பொருளாக மாற்ற நிறுவனத்தின் நிறுவனர்கள் முயன்று வருகின்றனர். எங்கள் போட்டியாளர்கள் அவரவர் சொந்த கடைகள் மூலம் விற்கின்றனர் என நவீன் கூறுகிறார்.
"சில்லறை வணிகர்கள் மூலம் விற்பனையை நடத்துவதால், அதிகமான வாடிக்கையாளர்களை எங்களால் கவர முடிகிறது. அவர்கள் வீட்டு அருகிலேயே எங்கள் குல்ஃபீ கிடைக்கிறது. எங்கள் விலையும், எங்கள் போட்டியாளர்களை விட குறைந்த அளவில் தான் உள்ளது," என மேலும் கூறுகிறார்.
நவீன் மற்றும் அவரது குழு, நேரடியாக சென்று வாடிக்கையாளர்களை சேர்ப்பதன் மூலம் தங்கள் பிராண்டிற்கு நன்மை அதிகம் விளையும் என நம்புகின்றனர். இதற்காக மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், திருவிழாக்கள், கண்காட்சிகள் என தங்கள் கடைகளை அமைக்கின்றனர்.
அடுத்தாக டிஜிட்டல் தளத்திலும் தங்கள் பொருளை விளம்பரம் செய்கின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் பிராண்டிற்கு மக்களோடு ஒரு தொடர்பும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் முதலில் இந்த அணுகுமுறை இதை சாத்தியமாகவில்லை. நிறுவனர்கள் தொழில் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள சிறிதுகாலம் பிடித்தது.
"முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் என்பதால், எவ்வாறு ஒப்பந்தங்களை நிகழ்த்துவது, நிதிநிலைகளை சமாளிப்பது, வரிகள் என்ன என்பன எங்களுக்குப் புரியாது இருந்தது. இவை போன்றவற்றுக்கு பயிற்சி வகுப்புகள் யாரேனும் கொடுத்தால் எங்களைப் போன்ற முதல் தலைமுறை தொழில்முனைவர்களுக்கு உதவியாக இருக்கும்," என்கிறார் நவீன்.
தொழிலில் நேர்மை நாணயம் :
எந்த பயிற்சி வகுப்பிலும், தொழிலில் நேர்மையாகவும், நாணையமாகவும் நடக்க வேண்டும் என்பதை நாம் கற்பிக்க முடியாது.
"எங்களுக்கு பொருள் வழங்குவோரிடம் நாங்கள் எப்பொழுதும் நாணயமாக நடந்து கொள்கிறோம். எதை சொல்கிறோமோ அதையே நாங்கள் செய்கிறோம். அது ஒரு வித நல்ல புரிந்துணர்வை உண்டாக்குகின்றது. இதன் மூலம் கிடைக்கும் நம்பிக்கை பின்னர் வணிகமாக மாறும்பொழுது எங்கள் தரம் என்ன என்பதை அவர்கள் உணர்கின்றனர்," என்கிறார் நவீன்.
வரும் லாபத்தில் ஒரு பங்கை அவசர கால நிதியாக வைக்கும் பழக்கத்தை தாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் குல்ஃபியை வாடிக்கையாளர்கள் சுவைத்த பின்பு அவர்களின் மகிழ்ச்சியான முகத்தை பார்க்கையில் எங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது என நவீன் கூறுகிறார்.
"வளரும் நிலையில், இந்த சந்தையில் உள்ள வாய்ப்புகளானது எங்கள் மூலம் வேலைகளாக மாறுவதை நாங்கள் காண்கிறோம். அடுத்து நாங்கள் கட்டும் வரிகள், இந்தியாவின் வளர்ச்சியில் பங்காற்றுகிறது என நினைக்கும் பொழுதும் சந்தோஷமாக உள்ளது," என்கிறார் அவர்.
கடனிற்கு பொருள்களை இவர்கள் கொடுப்பதில்லை. மேலும் தினசரி, வங்கியில் பணத்தை ஒப்படைக்கும் பழக்கமும் இவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் வங்கியில் தங்கள் தொழிலின் மீது ஒரு நம்பிக்கை உண்டாக்க முடியும் என நம்புகின்றனர்.
"உங்களால் முடிவது என்ன, என்பதை தெளிவாக அறிந்து அதற்கு ஏற்ப உங்கள் நோக்கங்களை வகுத்துக்கொள்ளுங்கள். மேலும் நேரம், முயற்சி, வளர்ச்சிக்கான ஆட்கள் ஆகியவற்றையும் தொழிலுக்காக ஒதுக்குவது அவசியம்," என்கிறார் நவீன்.
இந்த நிறுவனம் மூலம், பால் பொருட்கள் துறையில் பெரிதாக வளரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இந்த பொறியியல் நண்பர்கள். 2023 ஆம் ஆண்டில், தங்களுக்கான ஒரு தொழிற்சாலை அமைத்து, தங்கள் பொருளை வைத்து விற்பது மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும் எனவும் நோக்கம் வைத்துள்ளனர்.
எழுதியவர் : ரிஷப் மன்சூர் | தமிழில் : கெளதம் தவமணி