ஒழுகும் வீடு... ஓயாத உழைப்பு... யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த தொழிலாளியின் மகன்!
ஏழைத் தொழிலாளியின் மகனான பவன் குமார் UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 239 ரேங்க் பெற்று சாதனை படைத்ததன் பின்னணியில் ஓர் உத்வேகக் கதை.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான பவன் குமார், UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 239 ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று அனைவருக்குமான உத்வேகமாகத் திகழ்ந்துள்ளது பற்றியதுதான் இந்த வெற்றிக் கதை.
குமார் தனது வெற்றியை தனது எளிய மண் வீட்டில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண் தன் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், மண் வீட்டில் பவன் குமார் தன் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்குவது பதிவாகியுள்ளது. அதனுடன் ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண் பதிந்த கருத்து:
“பவன் வீடு. சிவில் சர்வீஸ் தேர்வில் 239-வது ரேங்க் பெற்றுள்ளார். கடின உழைப்பாளிகள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே எழுதிக் கொள்கிறார்கள்.”
இந்த நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிரப்பட்ட வீடியோ வைரல் ஆனது.
ஆனால், பவன் குமாரோ தன் பெற்றோர், சகோதரிகள்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்கிறார். பவன் குமாரின் தந்தை முகேஷ் குமார் ஊடகம் ஒன்றிற்கு கூறும்போது, “பவன் குமார் மற்றும் எங்கள் மகள்களின் கல்வியைப் பேணி வளர்க்க நாங்கள் அனைத்து வகையான சாதாரண வேலைகளையும் செய்தோம்” என்றார். மேலும் அவர் கூறியது:
“நாங்கள் மிகவும் சிரமப்பட்டு பணத்தை சேமித்தோம். அதனால், பவன் நன்றாக தயார் செய்தான். பிள்ளைகளை படிக்க வைத்ததால் வீட்டை சீரமைக்க முடியவில்லை. மழையின்போது எங்கள் கூரை கசிந்து வீட்டினுள் ஒழுகும். ஒரே இடத்தில் அமர்ந்து இரவைக் கழிப்போம். ஆனால், பவன் படிப்பதில் பிடிவாதமாக இருந்தான். அடிக்கடி இரவில் உணவில்லாமல் பட்டினி கிடந்தோம். ஆனால், இன்று கடவுள் ஆசீர்வாதம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளது.”
பவன் குமாரின் தாய் சுமன் தேவி கூறும்போது, “காஸ் சிலிண்டர் வாங்க எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இன்னும் சாதாரண அடுப்பைப் பயன்படுத்துகிறோம். நான் கூலி வேலையில் கடினமாக உழைத்தேன். பவன் குமார் வீட்டில் அமைதியாகப் படித்தான். செல்போனைப் பயன்படுத்திப் படித்தான்” என்றார்
பவன் குமார் தன் மூன்றாவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றார். அது குறித்து ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சியிடம் அவர் கூறியது: “கடினமான தேர்வு, பாடங்கள் பரந்துபட்டது. ஆனால், பாஸ் செய்ய முடியாது என்று கூறுவதற்கில்லை.
எங்கள் குடும்பம் ஏழைக் குடும்பம். அதனால், கோச்சிங் எல்லாம் வைக்க வசதி இல்லை. கோச்சிங்கும் தேவையில்லை. நானாகவேதான் படித்தேன். இணையத்தை பயன்படுத்தினேன். விடா முயற்சிதான் முக்கியம்” என்றார் பவன் குமார்.