ரூ.80-ல் இருந்து ரூ.1600 கோடி வர்த்தக வளர்ச்சி - ‘லிஜ்ஜட்’ அப்பளமும் அசாத்திய பெண்களும்!
ஏழு பெண்களின் முன்னெடுப்பில் 1960-களில் தொடங்கிய ‘லிஜ்ஜட் பாப்பட்’ பயணம் இன்று ரூ.1600 கோடி வர்த்தகத்துடன் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
இன்று பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து அரசியல் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அக்கறையுடன் பேசுகின்றனர். ஆனால், நம் சமூகத்தில் களத்தில் இருந்து எத்தனை பேர் அதற்காக உழைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
- இந்தக் கேள்வி எழும்போது நினைவின் முன் வருகிறது ‘லிஜ்ஜட் பாப்பட்’ (Lijjat Papad) என்ற ஸ்நாக் வணிக நிறுவனம். இதைத் தொடங்கிய ஏழு அட்டகாசமான பெண்கள், மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற லட்சியத்தை நிறைவேற்றி வெற்றியடைந்துள்ளனர். அந்த ஏழு பெண்மணிகள் இவர்கள்தான்:
ஜஸ்வந்தி பென் போபட், பார்வதிபென் தோடானி, உஜம்பென் குண்டாலியா, பானுபென் தன்னா, லகுபென் கோகானி, ஜெயபென் விதாலனி மற்றும் திவாலிபென் லுக்கா. இந்த ஏழு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டனர்.
தங்கள் விதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ககன்லால் பரோக் என்ற நல்ல உள்ளம் படைத்த சமூக சேவகர் கொடுத்த 80 ரூபாய்தான் இவர்களின் வாழ்க்கையில் குத்து விளக்கை ஏற்றி வைத்தது.
அப்பளம் விற்பது நிச்சயம் கடினமான காரியம். அத்தனை சுலபமல்ல. அந்தக் காலங்களில் கணவனை இழந்த பெண்கள், தனியாக விடப்பட்ட பெண்களின் வாழ்வாதாரமே அப்பளம் இட்டு விற்பதாக இருந்து வந்துள்ளது. அது ஒரு பெரிய சவால்.
இவர்களுக்கும் இந்தச் சவால் காத்திருந்தது. வெறும் நான்கு பாக்கெட் விற்பனையில் தொடங்கி, முதல் வருடத்தில் ரூ.6,000 மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்ய முடிந்தது. மிகவும் கஷ்டமான காலம். கடினமான பயணம். இருப்பினும், அவர்களின் தளராத உறுதியும், அயராத முயற்சியும் பலனைத் தரத் தொடங்கின.
லிஜ்ஜட் எனும் பிராண்ட்
1962 வாக்கில் இந்த ஏழு பெண்களும் ரொக்கப் பரிசுப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்த ‘லிஜ்ஜட்’ என்ற பிராண்ட் பெயரை ஏற்றுக்கொண்டனர். விற்பனை கிட்டத்தட்ட ரூ.2 லட்சமாக உயர்ந்தது. லிஜ்ஜட் என்ற பிராண்ட் வீட்டில் புழங்கும் பெயராக மாறுவதற்கான பயணத்தின் தொடக்கத்தை இது அளித்தது.
இப்படியாக படிப்படியாக வளர்ந்த லிஜ்ஜட் பாப்பட் பிராண்ட், ‘மகிளா க்ரியா உத்யோக் லிஜ்ஜட் பாப்பட்’ என்னும் பெண் தொழிலாளர் கூட்டுறவு நிறுவனமாக உயர்ச்சி அடைந்தது. இத்தகைய தனித்துவமான கூட்டுறவு மாதிரியானது பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிமை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு நிதி சுதந்திரத்தை நோக்கி அவர்கள் எடுத்து வைத்த ஒரு முக்கிய படியாகவும் இருந்தது.
லிஜ்ஜட்டின் சுவையான, உயர்தர அப்பளங்களின் ருசியும் புகழும் பரவப் பரவ, அதற்கான தேவை சந்தைகளில் உயர்ந்தது. ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சில பெண்களில் இருந்து, இப்போது 45,000-க்கும் மேற்பட்ட பெண்கள் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரிய பெண்கள் சார்பு நிறுவனமாக உயர்வடைந்தது.
இன்று ‘லிஜ்ஜட் பாப்பட்’ இந்தியா முழுவதும் 82 கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சர்வதேச சந்தைகளிலும் இறங்கியுள்ளது.
அயராத உழைப்புக்கு வெகுமதி
இந்தப் பெண்களின் அயராத உழைப்பு மற்றும் பங்களிப்புக்கான குறிப்பிடத்தக்க அங்கீகாரமாக, இணை நிறுவனர்களில் ஒருவரான ஜஸ்வந்திபென் போபட், 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உற்பத்தித் துறையில் லிஜ்ஜட் பாப்பட் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இந்த அங்கீகாரம் பெரிய அளவில் வலியுறுத்தியுள்ளது.
லிஜ்ஜட் பாப்பட் வெற்றிக் கதை என்பது உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் ஆற்றலுக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக விளங்குகிறது.
ஏழு பெண்மணிகள் தங்கள் கனவுடன் எளிமையான ஒரு தொடக்கத்தை ரூ.1,600 கோடி வர்த்தகப் பேரரசாக மாற்றி, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நிதி சுதந்திரம் அளித்திருக்கிறார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத சாதனையே.
லிஜ்ஜட் பாப்பட் என்பது வெறும் சிற்றுண்டி வகை அல்ல... நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் பெண்களின் அசைக்க முடியாத புத்தெழுச்சி, தன்னெழுச்சி ஆகியவற்றின் குறியீடே!
மூலம்: Nucleus_AI
Edited by Induja Raghunathan