ஆண்டுக்கு 2,000 கிலோ அரிய வகை காய்கறி வளர்ப்பு; இயற்கை விவசாயியாக மாறிய கோவை இன்ஜினியர்!
கோவையைச் சேர்ந்த அரவிந்தன் என்ற இன்ஜினியர் அழிந்து வரும் பாரம்பரிய காய்கறி வளர்ப்பு மற்றும் விதை சேகரிப்பில் அசத்தி வருகிறார்.
கோவையைச் சேர்ந்த அரவிந்தன் என்ற இன்ஜினியர் அழிந்து வரும் பாரம்பரிய காய்கறி வளர்ப்பு மற்றும் விதை சேகரிப்பில் அசத்தி வருகிறார்.
உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட பூசணி வகைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? கத்தரிக்காயில் 60க்கும் மேற்பட்ட வகைகளும், வெண்டைக்காயில் 10க்கும் மேற்பட்ட ரகங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கேள்விப்படும் போதே ஆச்சர்யமாக தோன்றும் இந்த அரிய வகை காய்கறிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து கோவை இன்ஜினியர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் கலக்கி வருகிறார்.
இன்ஜினியர் டு இயற்கை விவசாயி:
தமிழ்நாட்டின் கரூரில் பிறந்து வளர்ந்த அரவிந்தன், ஜேர்மனியில் பொறியியல் பட்டம் மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். 2012ம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர், கார்ல்ஸ்ரூ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். இவர் தந்தை ஒரு விவசாயி, அப்பாவை போல தானும் ஒரு விவசாயியாக வேண்டும் என்ற எண்ணம் அரவிந்தனிடம் இருந்துள்ளது.
“நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று என் தந்தை விரும்பினார், அதனால் நான் அதற்குத் தயாராக முடிவு செய்தேன். இதற்கிடையில், என் தந்தை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்து வந்தார். அவருக்கு உதவியாக நானும் செயல்பட்டேன். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்தனர். அவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்குவதற்காக, ஆர்கானிக் காய்கறி உற்பத்தியாளர்களை தேடி வந்தோம். ஆனால், பெரும்பாலானோர் விற்கும் காய்கறிகள் உண்மையிலேயே ரசாயன கலப்பு இல்லாத ஆர்கானிக் காய்கறி தானா? என்ற சந்தேகம் இருந்தது. எனவே, நாங்களே சொந்தமாக காய்கறிகளை பயிரிட முடிவெடுத்தோம்,” என்கிறார்.
அரவிந்தன் தனக்கு விவசாயத்தின் மீதிருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக முதலில் பள்ளியின் மொட்டை மாடியில் சிறிய அளவில் காய்கறிகளை நடவு செய்தார். இயற்கை உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதோடு, பயன்பாட்டில் இல்லாத அழித்து வரும் பாரம்பரிய விதைகளைக் கொண்டு காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார்.
ஆனால், அவர் பாரம்பரிய விதைகளை தேடிச்சென்ற போது எளிதாக கிடைக்கவில்லை. எனவே, விதைகளை பாதுகாக்க பள்ளியிலேயே “விதை வங்கி” ஒன்றையும் உருவாக்கினார்.
“எனது வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும் என்ற தூண்டுதலாக ஆரம்பித்தது முற்றிலும் மாறுபட்ட விஷயமாக மாறியது. 2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயற்கை உணவுகளை பயிரிடத் தொடங்கினோம்.”
இளம் தலைமுறைக்கு ஆர்வமூட்டு புதிய திட்டம்:
விவசாயம் செய்ய இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில், அரவிந்தன் அவருடைய பள்ளியில் வேளாண் அறிவியல் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
மேலும், நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கத்துடன், மாடி தோட்டத்தில் செடிகளை நடவு செய்வது, காய்கறிகளை அறுவடை செய்வது போன்ற செயல்களையும் கற்றுக்கொடுக்கிறார்.
“எங்கள் மாணவர்களுக்கு ‘க்ரோ பேக்’களையும் அறிமுகப்படுத்தினோம். குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே செடிகளை விதைத்து அவற்றைப் பராமரிக்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட விதைகள் பின்னர் விதை வங்கியில் சேமிக்கப்படும். இது குழந்தைகள் விவசாயப் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது.”
2,000 கிலோ காய்கறிகள்:
அரவிந்தன் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பயிறு வகைகளை உற்பத்தி செய்து வருகிறார். அத்துடன் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பாரம்பரிய விதைகளையும் சேகரித்து வைத்துள்ளார். தற்போது பள்ளி வளாகத்திற்கு அருகேயுள்ள நிலத்தை வாங்கி அங்கேயும் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். அத்துடன் மாணவர்களை மரம் வளர்க்கவும் ஊக்குவிக்கிறார்.
"தக்காளி, கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், பெருங்காயம், மிளகாய், முருங்கை, பூசணி போன்றவற்றை வளர்க்கிறோம். எங்களிடம் வாட்டர் ஆப்பிள், வெண்ணிலா புளி, தேங்காய் மற்றும் பச்சைப்பயறு மற்றும் புறா பயறு போன்ற சில பருப்பு வகைகள் உள்ளன.”
மாணவர்களின் தேவைக்கு போக மீதமுள்ள காய்கறி, பழங்கள் மற்றும் பயிறு வகைகள் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் தாண்டி மீதமுள்ள உணவு பொருட்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மாணவர்களுக்கு உற்பத்தியுடன், விற்பனை திறனையும் மேம்படுத்தும் விதமாக பள்ளியிலேயே ஸ்டால் அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாகவே மக்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரிய மற்றும் பாரம்பரிய விதைகளை சேகரித்து வரும் அரவிந்தன் அதனை ஒருபோதும் காசுக்கு விற்பது கிடையாது, மாற்றாக அதனை சேகரிக்க விரும்பும் விதை பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். விதைகளை பாதுகாப்பது மட்டுமே தனது நோக்கம் என்றும், அதனை வியாபாரமாக பார்க்கவில்லை, என்றும் கூறுகிறார்.
அரவிந்தன் இதுவரைபல்வேறு விதைகளை சேகரித்து நடவு செய்துள்ளார். 70 வகையான கத்திரிக்காய், 20 வகையான வெண்டைக்காய், 28 வகையான தக்காளி மற்றும் 20 வகையான பயிறு வகைகள் ஆகியவற்றின் விதைகளை சேகரித்து வைத்துள்ளார்.
தகவல் உதவி - பெட்டர் இந்தியா | தமிழில் - கனிமொழி