தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் 3 குழந்தைகளுக்கு தாயான லண்டன் பெண்!
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய் பால் மூலம் செயின், காதணிகள், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை தயாரித்து வருகிறார்.
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய் பால் மூலம் செயின், காதணிகள், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை தயாரித்து கோடிகளில் வருவாய் ஈட்டும் தொழில்முனைவர் ஆகியுள்ளார்.
பெற்றொருக்கு முதல் குழந்தை பிறப்பு என்பது எப்போதுமே மறக்க முடியாத ஒன்று. முதல் குழந்தைக்கு பயன்படுத்தும் தொட்டில், பால் சங்கு, கால் கொலுசு, காப்பு, முதல் பல், தலைமுடி என அனைத்தையுமே நினைவாக எடுத்து வைப்பார்கள். இப்போதெல்லாம் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அதுக்குத் தேவையான தொட்டி, ஆடை, டைப்பர்கள், உள்ளாடைகள் முதல் அதன் முதல் நியூ பார்ன் போட்டோ ஷூட் வரை புக் செய்து வைத்துவிடுகிறார்கள்.
முன்பெல்லாம் குழந்தையின் தொப்புள் கொடியை எடுத்து தாயத்துக்கு செய்து போடுவார்கள், தற்போது தாய் பாலில் நகைகள் செய்வது நியூ ட்ரென்டிங்காக மாறியுள்ளது. ‘என்னது தாய் பாலில் நகைகளா?’ என விசித்திரமாக நினைக்கலாம். ஆம், மேற்கத்திய நாடுகளில் தாய் பாலில் நகைகள் செய்து அணிவது, குழந்தை பிறப்பை கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவைப் போற்றி பாதுகாக்கவும் பயன்படுகிறது.
3 குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி ஒருவர், தாய் பாலில் இருந்து நகைகள் வடிவமைத்து கொடுத்தே கோடிகளில் வருமான ஈட்டி வருகிறார்.
தாய் பாலில் நகைகள் தயாரிக்கும் லண்டன் பெண்:
லண்டனில் உள்ள பெக்ஸ்லி பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு தாயான சஃபியா, அவரது கணவர் ரியாத் உடன் இணைந்து ‘மெஜந்தா ஃப்ளவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வாழ்வின் சிறப்பான தருணங்களின் போது பயன்படுத்தப்படும் மலர்களை விலைமதிப்பற்ற நினைவுப் பொருட்களாக மாற்றித் தருகிறது.
‘மெஜந்தா ஃப்ளவர்ஸ்’ நிறுவனம் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், இன்று வரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் தாய் பாலைக் கொண்டு நகைகளை வடிவமைக்கும் வகையில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் 1.5 மில்லியன் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் 15 கோடி அளவு வருவாய் இருக்கும் என இந்நிறுவனம் கணித்துள்ளது. தாய் பாலைக் கொண்டு நகைகள் தயாரிக்கப்படுவதாக, கொரோனா லாக்டவுனின் போது தம்பதி படித்த கட்டுரை ஒன்று, தங்களது தொழிலை விரிவுபடுத்தும் புது ஐடியாவாக மாறியுள்ளது.
இதுகுறித்து சஃபியா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
"இது தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை வழங்குகிறது மற்றும் அந்த நேசத்துக்குரிய பிணைப்பைக் கொண்டாடுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
தாய்மார்கள் இதைச் செய்வதன் மூலமாக சுமார் 30 மில்லி தாய் பாலை விலைமதிப்பற்ற நினைவுகளாக மாற்றி, ரத்தினம் போல் பாதுகாக்க முடியும்.
தாய்ப்பால் எளிதில் கெட்டுப்போகக் கூடிய திரவம். அதனை வைத்து நகைகள் செய்வது என்பது உண்மையில் சாதாரணமான விஷயம் அல்ல. தாய்ப்பாலை விலைமதிப்பற்ற நகைகளாக மாற்ற மெஜந்தா ஃப்ளவர்ஸ் நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளது. அதன் மூலம், தாய் பால் அதன் அசல் நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
”அதாவது தாய் பாலில் உள்ள திரவத்தை நீக்கிவிட்டு, அதனுடன் நிறமற்ற பிசினை கலந்து நகைகள் உருவாக்கும் முறையை சஃபியா கண்டறிந்துள்ளார். இதன் மூலம் நகைகள் நீண்ட நாட்களுக்கு பொலிவை இழக்காமல், நீடித்து இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
தாய் பாலில் இருந்து நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் மோதிரங்கள் ஆகிய நகைகள் செய்ய சஃபியா திட்டமிட்டுள்ளார்.
தகவல் உதவி: டைம்ஸ் நவ்