'உலக தாய்ப்பால் வாரம்'- தாய்ப்பால் குறித்த கட்டுக் கதைகளும், உண்மைகளும்!
தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை தாய்மார்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுகிறது.
தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது. தாய்மார்கள் குறைந்த பட்சமாக ஆறு மாதம் வரையிலாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும் தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ (ஆகஸ்ட் 1 - 7) கொண்டாடப்படுகிறது.
'ஆரோக்கியமான உலகிற்கு தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிக்கவேண்டும்’ என்பதே 2020-ம் ஆண்டிற்கான மையக்கருத்து. தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும் நிலையில் அது குறித்த பல்வேறு தவறான நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளது. இதுபோன்ற தவறான நம்பிக்கைகள் தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதற்கு பெரும் தடையாக உள்ளது. முறையான ஆலோசனைகள் வழங்கப்படுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுமே இதற்கு சிறந்த தீர்வு.
மக்களிடையே பொதுவாக காணப்படும் கட்டுக்கதைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்:
கட்டுக்கதை 1: தாய்ப்பால் கொடுத்தால் மார்பகக் காம்பில் வலி ஏற்படுவது சகஜம்.
உண்மை: குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களுக்கு அம்மாக்களுக்கு சற்று அசௌகரியமான உணர்வு ஏற்படுவது இயற்கையே என்கிறது யூனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம். குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்போது காம்பில் ரத்தம் கசிவதும் இயற்கையே. ஆனால் இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் வலி ஏற்படாது. தவறான நிலையில் உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுப்பது, குழந்தையின் வாயில் மார்பகக் காம்பை சரியாகப் பொருத்தாதது ஆகிய இரண்டும் வலி ஏற்படக் காரணமாக இருக்கலாம். குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கும் விதத்தை மருத்துவர், செவிலியர் அல்லது அனுபவமிக்க தாய்மார்களிடம் கேட்டறியலாம்.
கட்டுக்கதை 2: பல தாய்மார்களுக்கு போதுமான பால் சுரப்பதில்லை
உண்மை: பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்களின் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பால் சுரக்கும் என்கிறது யூனிசெஃப். ஒருவேளை போதுமான பால் சுரக்கவில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்.
- முதலில் மார்பகக் காம்பு முறையாக குழந்தையின் வாயில் வைக்கப்படாமல் இருக்கலாம்.
- அல்லது ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போது குழந்தையால் போதிய பாலை எடுக்க முடியாமல் போகலாம்.
- முறையான இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கலாம்.
இந்த மூன்று சிக்கல்களுக்கும் தீர்வுகண்டு குழந்தைக்குப் போதிய தாய்ப்பால் கொடுக்கப்படுவதை உறுதிசெய்ய மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். இதுதவிர தாய்ப்பால் கொடுக்கும் மாதங்களில் முறையான ஆதரவு, உணவு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியம்.
கட்டுக்கதை 3: உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் தாய்ப்பால் கொடுக்கமுடியாது.
உண்மை: இது உண்மையல்ல. தாய்மார்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் முறையான மருத்துவ ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் தொடர்ந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். இது தற்போதைய கொரோனா தொற்றுக்கும் பொருந்தும். தொற்று இருக்கும் தாய்மார்களும் தாய்பால் கொடுக்கலாம் என WHO பரிந்து தெரிவிக்கிறது. மார்பக திசுக்களில் தொற்று ஏற்படுவது, ஹெபடைடிஸ் ஆகிய பாதிப்புகளுக்கும் இது பொருந்தும். ஏனெனில் தாய்மார்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைக்கும் கிடைக்கும் என்பதால் அதே நோய் தொற்றுக்கு எதிரான குழந்தையின் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள். தொற்று நோயாக இருந்தால் மார்பகத்தில் இருந்து பாலை உறிஞ்சி எடுக்க பயன்படும் பம்ப் மூலம் பாலை எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கட்டுக்கதை 4: தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் கருத்தரிக்க வாய்ப்பில்லை.
உண்மை: தாய்ப்பால் கொடுப்பது நம்பகமான கருத்தடை முறை அல்ல. தாய்ப்பால் கொடுப்பதால் சில பெண்களுக்கு சினை முட்டை வெளிப்படுவது தடுக்கப்படுவதாக அமெரிக்கன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (AAP) தெரிவிக்கிறது. என்றாலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண் கருவுற மாட்டார் என்பதற்கான உத்தரவாதம் ஏதும் இல்லை. அதற்கு மாறாக மற்ற கருத்தடை முறைகள் குறித்து மருத்துவரின் ஆலோசனை பெறலாம்.
கட்டுக்கதை 5: தாய்ப்பால் கொடுத்தால் மார்பகத்தின் வடிவம் கெட்டுவிடும்
உண்மை: தாய்ப்பால் கொடுப்பதைக் காட்டிலும் வயது, உடல் எடை கூடுதல் போன்றவை மார்பகத்தின் வடிவத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் மார்பகங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பிருந்த அதே வடிவம் திரும்பிவிடும்.
தகவல் உதவி: யூனிசெஃப், ஃபர்ஸ்ட்போஸ்ட்