'வேலை இழந்தும் நம்பிக்கை இழக்கவில்லை’ - பிரியாணி கடை திறந்த 5 ஸ்டார் செஃப்!
மும்பையின் தாதர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அந்த சிறிய விளக்கு. டிசர்ட் பேண்ட்டுடன் நின்றுகொண்டிருக்கிறார் அந்த இளைஞர். அருகே பல பெரிய கடைகள், உணவகங்கள் இருக்கும் நிலையில், ஒரு சிறிய கடையை நடத்தி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கிறார் அக்சய் பார்க்கர்.
யார் இந்த அக்சய் பார்க்கர்?
கொரோனா வீசிய அலையில் கடுமையாக பாதிக்கபட்டு வாழ்வாதாரத்தை இழந்தவர்களுள் ஒருவர் தான் இந்த அக்சய். 7 ஸ்டார் ஹோட்டல்களிலும், சொகுசு கப்பல்களில் தலைமை சமையலராக அதாவது செஃப்-ஆக இருந்தவர். கொரோனா தொற்றின் காரணமாக வேலையை இழந்தார்.
அடுத்த என்ன செய்வதென்றே தெரியாமலிருந்தவருக்கு, யோசனை தோன்றியது. நாமே சுயமாக கடை ஒன்றை நடத்தலாமே என்று. அந்த யோசனையின் எதிரொலிதான் தாதர் பகுதியில் இருக்கும் பிரியாணி கடை.
@Beingmalwani என்ற பேஸ்புக் பக்கத்தின் மூலமாக அக்சய் கதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வேலை இழந்தும், பல்வேறு தடைகளைக்கடந்தும் அக்சய் எப்படி நம்பிக்கையுடன் தன் வாழ்க்கையில் நடைபோடுகிறார் என்பதை விளக்கும் வகையில் இருந்தது அந்தபதிவு. இதைப் பார்த்த பலரும் அக்சய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பலர் உணவின் விலை குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.
“கொரோனா காலத்தில் வேலை இழந்து சோர்ந்துவிடாமல், தொடர்ந்து நம்பிக்கையுடன் தொழிலில் களமிறங்கியுள்ள அக்சய்க்கு வாழ்த்துகள்,” என்று உத்வேகம் அளித்துள்ளனர்.
அக்சய் ‘Taj Flight Service’ மற்றும் ‘Princess Cruises’ல் 8 வருடமாக செஃப்-ஆக பணிபுரிந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த அவரை நிரந்தரமாக்க நிறுவனங்கள் முன் வரவில்லை.
தி பெட்டர் இந்தியா-க்கு பேட்டியளித்து அக்சய்,
“எனது பெற்றோர் இப்போது சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். மாவு ஆலைகள் மூடப்பட்டதால் என் தந்தை வேலையை இழந்துள்ளார். பல ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இப்போது மீண்டு வருகிறார். நான் மாதத்துக்கு ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதித்தேன். ஆனால், என்னுடைய அனைத்து சேமிப்புகளையும் என் பெற்றோரின் மருத்துவச் சிகிச்சைக்காக செலவழித்துவிட்டேன்.
அவர்கள் பல்வேறு காரணங்களால் மெடிக்கல் இன்ஸூரன்ஸ் பாலிசிக்கு தகுதி பெறமுடியாமல் நிராகரிக்கப்பட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்பட்டது, என்றார் அக்சய்.
வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால் போதும், மீண்டு வந்துவிடலாம். யார் கண்டது அக்சயின் அந்த சாலையோரக்கடை நாளை நட்சத்திர ஹோட்டலாக மாறி, அவரைப்போல வேலையிழந்த பல செஃப்-களுக்கும் அவர் வேலை கொடுக்கலாம்!
தகவல் உதவி - தி பெட்டர் இந்தியா | தொகுப்பு: மலையரசு