கேன்சரில் தந்தை, மாரடைப்பில் பயிற்சியாளரையும் இழந்து 30 வயதில் ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி!
விளையாட்டு வீரர்கள் என்றாலே சிறு வயதிலிருந்து உழைத்து, 20களில் அவ்விளையாட்டுத் துறையில் நுழைந்து சாதனை படைக்க வேண்டும் என்பதே பெரும்பாலும் இருக்கும் நடைமுறை, ஆனால் இதுப்போன்ற பழையக் கூற்றுகளை உடைக்கும் விதம் தனது 30வது வயதில் இந்தியாவிற்காக ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார் கோமதி மாரிமுத்து.
கத்தார் நாட்டின் தோஹாவில் ஆசிய தடகளப்போட்டி நடந்து வருகிறது, இதில் பெண்களுக்கான 800மீ ஓட்டபந்தயத்தில் கலந்துக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு ஆசியப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் தங்கம் இதுவே.
பள்ளி படிக்கும்பொழுதே தடகள போட்டிகளில் விருப்பம் ஏற்பட்டு கலந்துக் கொண்ள்வார் கோமதி. அதன் பின் 20களில் முழு மூச்சாக தன் பயிற்சியை துவங்கி 2 முறை சர்வதேச போட்டியில் வெற்றிக்காணாமல் விலகினார். இன்று தனது 3வது சர்வதேச போட்டியில் 30 வயதில் இந்தியாவிற்கு தங்கம் வென்று சாதித்துள்ளார்.
ஆனால் இந்த வெற்றி அவருக்கு சுலபமாக அமையவில்லை, தந்தையை இழந்து, பயிற்சியாளரை இழந்து தன்னம்பிக்கை மற்றும் உழைப்பினால் மட்டுமே வெற்றி மகுடத்தை பெற்றுள்ளார்.
“முழு நேரம் விளையாட்டில் கவனம் செலுத்து, அதில் முன்னேறு என்று ஊக்குவிக்க எனக்கு யாருமில்லை. குடும்பத்தைக் காக்க எதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தேன். பின் என் தோழி ஊக்குவித்ததால் பயிற்சி எடுக்க துவங்கினேன்...” என்கிறார்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கோமதிக்கு ஒரு சகோதரரும், சகோதரியும் உள்ளனர், இவர் குடும்பம் இவருக்காக உழைத்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்தது. குடும்ப நிதிநிலைக்காக கல்லூரி முடிந்ததும் பெங்களூரில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணியில் அமர்ந்தார் கோமதி. இருப்பினும் தன்னால் முடிந்தவரை பயிற்சியை எடுத்துக்கொண்டு வந்தார்.
அப்பொழுது 2013ல் புனேவில் நடைப்பெற்ற சாமிப்யன்ஷிப் போட்டியிலும், இரண்டு வருடங்களுக்கு பிறகு சீனாவில் நடந்த போட்டியிலும் கலந்துக்கொண்டு 7வது மற்றும் 4 இடத்தை பிடித்து வெற்றியை நழுவவிட்டார்.
தோல்வியைத் தழுவினாலும் அடுத்தமுறை தங்கம் வென்றாகவேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார், ஆனால் 2016 இறுதியில் புற்றுநோய்க்கு தன் தந்தையை இழந்தார், அதைத் தொடர்ந்து சில மாதங்களில் கோமதிக்கு பெரும் காயம் ஏற்பட்டது.
சிக்கலுக்கு பின் சிக்கல் ஏற்பட கோமதியின் குடும்பம் இவரை மட்டுமே நம்பியிருந்தது, இதில் இருந்து கோமதி மீண்டு எழுவதற்குள் இவரின் பயிற்சியாளரும் மாரடைப்பில் இறந்தார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில்,
“தாமதமாக பயிற்சிகள் துவங்கி அதிலும் காயம் ஏற்பட்டால் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் இதனாலே 2017 இல் நடந்த ஆசியப்போட்டியில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை,” என்றார்.
இவ்வளவு துயரங்களுக்கு பிறகும் சோர்வடையாமல் பயிற்சி எடுத்து இந்தாண்டு மார்ச் மாதம் நடந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்போது ஆசியப்போட்டியில் 2:02.70 நொடிகளில் 800 மீட்டர் ஓடி தங்கம் வென்றுள்ளார்.
தன் சொந்தமகள் வெற்றிபெற்றதை கூட அக்கம்பக்கத்தினர் சொன்ன பிறகே தெரிந்து கொண்டுள்ளார் கோமதியின் தாயார்.
“ஒரு பாப்பா என்னிடம் ஓடி வந்து டிவியை பார்க்கச் சொன்னார் ஆனால் எனக்கு டிவி போட தெரியாது. அக்கம்பக்கத்தினர் சொல்லியே நான் அவள் வெற்றிப்பெற்றதை தெரிந்துக்கொண்டேன்” என்று புதிய தலைமுறை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ஓர் கிராமத்தில் பிறந்து இதுப்போன்ற மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து விடாமுயற்சியால் இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் நம்ம கோமதி.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்