’அன்பே மருந்து’ என்ற கருத்தை மக்களிடையே பரப்பும் புற்றுநோயால் கணவரை இழந்த பெண் தொழில்முனைவர்!
நித்தேஷ் பிரஜாபட்டிற்கு பெருங்குடல் புற்றுநோய் நான்காம் நிலையில் இருப்பது கண்டறியப்பட்ட பிறகே அவர் டிம்பிள் பர்மாரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோயாளிகளுக்கு ஆதரவளித்து தேவையானத் தகவல்களை வழங்க 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ’Love heals cancer' அறிமுகப்படுத்தினர்.
புற்றுநோயானது அந்நோய் பாதித்தவர்களை மட்டுமல்லாது அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் நிலைகுலையச் செய்துவிடுகிறது. வறண்ட தொண்டை, மூட்டு வலி, பசியின்மை, பலவீனமான உடல் போன்ற உபாதைகளுடன் இறப்பு குறித்த பயமும் புற்றுநோயாளிகள் மனதில் நிறைந்திருக்கும்.
நித்தேஷ் பிரஜாபட் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு முற்றிய நிலையில் போராடிக்கொண்டிருந்தார். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரும் அவரது மனைவி டிம்பிள் பர்மாரும் இணைந்து புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவுவதில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்கவேண்டும் என தீர்மானித்தனர்.
”தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு, குறிப்பாக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட எண்ணற்ற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும் என்பதே நித்தேஷின் கடைசி ஆசையாக இருந்தது. இந்த நோயை எதிர்த்துப் போராடுபவர்களிடம் சில நேரங்களில் நம்பிக்கையும் தேவையான வளங்களும் இருப்பதில்லை."
’நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என எங்கள் நிறுவனம் வாயிலாக உரக்கச் சொல்ல விரும்புகிறோம்,” என்கிறார் 28 வயதான டிம்பிள்.
2016-ம் ஆண்டு நித்தேஷிற்கு பெருங்குடல் புற்றுநோய் மூன்றாம் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டபோது இந்தக் கொடிய நோயில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை இவ்விருவரும் கண்டறியத் துவங்கினர். புற்றுநோயின் தன்மை, அந்நோய் ஒருவரின் உடலில் பரவும் விதம், மருத்துவ முறைகள், உணவு முறை மாற்றம், யோகா, தியானம், பிரானிக் ஹீலிங், நேச்சுரோபதி உள்ளிட்ட முழுமையான சிகிச்சைமுறைகளைப் புரிந்துகொண்டு டிம்பிளும் நித்தேஷும் புற்றுநோய் தொடர்பாக செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைப் பட்டியலிட்டனர்.
இவ்விருவரும் இந்தத் தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினர். இவர்களது கடினமான பயணத்தில் கூட்டுநிதி வாயிலாகவும் ஐஐடி-ஐஐஎம் கொல்கத்தா முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க் வாயிலாக நிதி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான ஆதரவளித்த எண்ணற்ற நபர்களுடன் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினர்.
விரைவிலேயே ’லவ் ஹீல்ஸ் கேன்சர்’ என்கிற மும்பையைச் சேர்ந்த லாபநோக்கமற்ற நிறுவனத்தைத் துவங்கினார்கள். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த முயற்சி துவங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் 28 வயதான நித்தேஷ் வலைதளத்தை உருவாக்கும் பணிகளை மேற்பார்வையிட்டார்.
புற்றுநோய் மற்றும் தடுப்புமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகளவில் ஏற்படுத்தவேண்டும் என்பதும் நோயாளிகளின் அருகிலிருந்து யாரேனும் ஆதரவளித்து உதவுவேண்டும் என்பதுமே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பவர்களுக்கு ஏற்படும் வலியையும் வேதனையையும் நன்கு புரிந்துகொண்ட டிம்பிள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்.
நித்தேஷ் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்த பிறகு டிம்பிள் நித்தேஷின் விருப்பத்தை முன்னெடுத்துச் சென்று அதற்கான பணிகளைத் தொடர்ந்தார். இன்று இந்தியா முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் தன்னார்வலக் குழுக்களுடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
”நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. அது எங்களது நோக்கமல்ல. தேவை இருப்போருக்கு உதவ விரும்புகிறோம். அவர்களே உண்மையான போராளிகள் என்பதால் அவர்களது கதைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறோம்,” என்றார் ஐஐஎம் கொல்கத்தா முன்னாள் மாணவியான டிம்பிள்.
இத்தனை ஆண்டுகளில் டிம்பிள் உலகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் அதிகமான புற்றுநோயாளிகள் மற்றும் குடும்பங்களைச் சென்றடைந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அன்பு மற்றும் சேவைக்கு முக்கியத்துவம்
மூத்த மகனான நித்தேஷ் மட்டுமே அவரது குடும்பத்தில் வருவாய் ஈட்டி வந்தார். குடும்பத்தின் நிலையை மேம்படுத்த கடுமையாக உழைத்தார். இவர் ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர். ஐஐஎம் கொல்கத்தாவில் படித்துக்கொண்டிருந்தபோது Appeti என்கிற ஆன்லைன் சந்தைப்பகுதியை நிறுவினார்.
2016-ம் ஆண்டு எம்பிஏ முடித்தபோது டிம்பிளை சந்தித்தார். அப்போது டிம்பிள் Zaple என்கிற சொந்த ஸ்டார்ட் அப் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இவ்விருவரும் பணி குறித்து கலந்துரையாடினர். ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவு கனவில் ஒன்றிணைந்த இவர்களிடையே காதல் மலர்ந்தது.
2016-ம் ஆண்டு ஒரு வழக்கமான செக் அப்பின் போதுதான் நித்தேஷிற்கு ஸ்டேஜ் 3 பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் மனமுடைந்துபோனார். ஆரம்பகட்ட அதிர்ச்சியில் இருந்து மெல்ல வெளிவந்து குடும்பத்தின் ஆதரவுடன் சிகிச்சியைத் துவங்கினார். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்கிற நம்பிக்கையுடன் தனது உடல்நிலையையும் அணுகினார்.
“நித்தேஷிற்கு புற்றுநோய் இருக்கும் செய்தியை முதலில் அவரே கேட்டறிந்தார். வளாகத்திற்கு வந்து என்னிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன்,” என்றார் டிம்பிள்.
”மற்ற எம்பிஏ மாணவர்கள் போன்றே இவரும் தனது குறுகியகால மற்றும் நீண்டகால லட்சியங்களைப் பட்டியலிட்டார். நிதித் தகவல்கள், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், உணவு முறை போன்றவற்றை முறையாக குறித்துக்கொண்டார்,” என்று டிம்பிள் நினைவுகூர்ந்தார்.
நித்தேஷின் இந்தப் பயணத்தில் டிம்பிள் உறுதுணையாக இருந்துள்ளார். எம்பிஏ படித்தபோது விரிவுரை அரங்கிற்கு அருகில் நித்தேஷ் மாற்றலாகவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது டிம்பிள் அவருக்கு அருகிலேயே இருக்கத் தீர்மானித்தார்.
”ஒருவர் தனது வாழ்க்கை முடிவிற்கு வருவதை கண்ணெதிரே பார்க்கும்போது வேறு எதுவும் பெரிதாகத் தெரியாது. அன்பு மட்டுமே அனைத்தையும்விடப் பெரிது என்று தோன்றும்,” என்றார் டிம்பிள்.
உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தபோதும் இவ்விருவரும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பட்டமளிப்பு விழா நடந்த நாளில் தங்களது திருமணத்தை நிச்சயம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கடுத்த ஆண்டு அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி என கழிந்தது. எனினும் ஜூன் மாதம் இந்தக் கொடிய நோயை வென்றுவிட்டதாக இருவரும் நினைத்த அதே சமயத்தில் சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகள் வந்தது. இந்த நோய் நுரையீரல், இடுப்பு மற்றும் மற்ற வயிற்றுப் பகுதிகளிலும் பரவியிருப்பது தெரிந்தது. மொத்தம் 12 கட்டிகள் இருந்தது.
தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமின்றி நித்தேஷும் டிம்பிளும் திருமணம் செய்துகொண்டு ஒருவரை ஒருவர் பிரிவதில்லை என வாக்களித்துக்கொண்டனர். திருமணம் ஆன புதிதில் தன் கணவரை நம்பிக்கை மற்றும் அன்பின் துணைகொண்டு குணப்படுத்த முடிவு செய்தார் டிம்பிள். அமெரிக்கா சென்று சிகிச்சை எடுக்க எண்ணினார். இதற்கான நிதி திரட்ட கூட்டுநிதி முயற்சியை மேற்கொண்டார்.
”சிகிச்சைக்காக நித்தேஷும் நானும் முதலில் அமெரிக்கா சென்றடைந்தபோது தொலைந்துபோன சிறு குழந்தை போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. உதவ யாரும் இல்லாமல் நிலைமையை தனியாக சமாளிக்க முடியாமல் போனது. எனினும் பரிச்சயமில்லாத பலர் எங்களிடம் அன்பும் அக்கறையும் செலுத்தினர். நிதியுதவியும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான உதவியும் செய்தனர்,” என்று நினைவுகூர்ந்தார்.
ஐஐடி-ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க் வாயிலாக அறிமுகமான குஜராத்தி குடும்பம் ஒன்று அமெரிக்காவில் இவர்களை தத்தெடுத்துக்கொண்டு தங்கும் வசதி செய்து கொடுத்தது. இந்தியர்கள் அடங்கிய உள்ளூர் பிரார்த்தனை குழு ஒன்று இவர்களுக்கு மளிகைப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கி உதவியது.
”2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நித்தேஷிற்கு வலி இருந்தது. ஆனால் அவர் வேதனைப்படவில்லை. அவரிடம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. அவரிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு காட்டி உதவிய சமூகத்திற்கு தனது நன்றியை திரும்ப செலுத்த விரும்பினார். எனவே ’லவ் ஹீல்ஸ் கேன்சர்’ துவங்கத் தீர்மானித்தோம்,” என்றார் டிம்பிள்.
மக்கள் சேவை
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி கொடிய நோயான புற்றுநோய் நித்தேஷை டிம்பிளிடமிருந்து பிரித்துவிட்டது. டிம்பிள் வாரக்கணக்கில் செய்வதறியாது திகைத்தார். எனினும் தனது அம்மா இந்திரா பர்மாரின் உதவியுடன் தனது கணவரின் கனவை நனவாக்குவதில் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.
டிம்பிள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நோயாளிகளுக்கு ‘லவ் ஹீல்ஸ் கேன்சர்’ மூலம் ஆதரவளித்து அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கி சேவையளிக்க விரும்புகிறார். புற்றுநோயாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கமான மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சைமுறைகள் குறித்த நடுநிலையான தகவல்களைப் பெற உதவவேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கமாகும்.
புற்றுநோய் சார்ந்த உளவியல் மற்றும் ஆன்மீக அம்சங்களை ஆராய்ந்து இதேபோன்ற அனுபவங்களைக் கொண்ட நபர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் ஆதரவளித்துக்கொள்ளவேண்டும் என்று இக்குழுவினர் விரும்புகின்றனர்.
”மனம், உடல், ஆத்மா என சிகிச்சைமுறையை முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என மக்களிடம் வலியுறுத்துகிறோம். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகளை எங்கள் குழு தொடர்ந்து கவனித்து அதன் முடிவுகளை மக்களிடையே பகிர்ந்துகொள்கிறது. புற்றுநோய் தொடர்பான தகவல்கள் அல்லது ஆதரவை எதிர்நோக்கும் எந்த ஒரு நபருக்கும் ஏற்ற தளமாக ’லவ் ஹீல்ஸ் கேன்சர்’ மாறவேண்டும் என விரும்புகிறோம்,” என டிம்பிள் விவரித்தார்.
டிம்பிள் கலிஃபோர்னியாவில் உள்ள புற்றுநோய் குணப்படுத்தும் Commonweal என்கிற லாப நோக்கமற்ற மையத்தில் ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சி பெற்றார். சர்வீஸ் ஸ்பேஸ், அஹமதாபாத்தில் உள்ள காந்தி ஆஷ்ரம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அவருக்கு ஆதரவளித்தது.
Love Heals Cancer
லவ் ஹீல்ஸ் கேன்சர் நோயாளிகள், பராமரிப்பாளர்கள், நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள், தன்னார்வலர்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் போன்றவை அடங்கிய சமூகமாகும். இது உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த Beyond Conventional Cancer Therapies புற்றுநோய் பராமரிப்பு திட்டங்களுடன் இணைந்து ’லவ் ஹீல்ஸ் கேன்சர்’ கீழ்கண்ட சேவைகளை இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு வழங்குகிறது.
1. முழுமையான சிகிச்சைமுறை
புற்றுநோயாளிகளுக்கு புற்றுநோய்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழங்கி உதவுகிறது. இயற்கையான தயாரிப்புகள் மற்றும் மூலிகைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. இது புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளைக் குறைக்க உதவும். தனிநபர்கள் மனதைத் வலுப்படுத்தி நோயை எதிர்த்துப் போராட பயிற்சியளிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையையும் உடற்பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறது. அத்துடன் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக அம்சங்களில் ஈடுபடுத்துகிறது.
2. ஹீலிங் சர்கிள்ஸ்
புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் பாதித்த நோயாளிகளுக்கு உளவியல் மற்றும் சமூக ரீதியான ஆதரவு வட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
”நோய், உடல்நிலை, இழப்பு காரணமாக ஏற்படும் அதிர்ச்சி போன்றவற்றால் நாம் மனமுடைந்து போகும்போது, ‘நாம் எப்படி இதிலிருந்து மீண்டெழுவது?’ என்பதே நமக்குள் எழும் ஒரே கேள்வி,” என்கிறார் டிம்பிள்.
குழுவினர் ஹீலிங் சர்கிள்ஸ் வாயிலாக நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் பணியாற்றி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றனர். சமூகத்துடன் இணைந்து ஒன்றாகப் பணியாற்றி சிகிச்சை சார்ந்த பிரச்சனைகளை நீக்குவதற்கு சிறந்த வழிமுறைகளை ஆராய்கின்றனர்.
3. லவ் ஹீல்ஸ் கேன்சர் உதவி திட்டம்
பங்கேற்பாளர்கள் சிறப்பாக வாழ உதவும் வகையில் இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. புற்றுநோயாளிகளின் பூர்த்திசெய்யப்படாத தேவைகளை பூர்த்திசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். குணப்படுத்துதல், பயோமெடிக்கல், ஒருங்கிணைந்த சிகிச்சைமுறைகள் போன்றவற்றில் உள்ள தேர்வுகளையும் புற்றுநோய் குறித்த உணர்வு மற்றும் ஆன்மீக ரீதியான பரிமாணங்களையும் வழங்குகிறது.
4. வாழ்க்கையின் முடிவு குறித்த உரையாடல்
இறப்பு குறித்து நோயாளியிடமும் அவர்களது குடும்பத்தினருடனும் விவாதிப்பதே இந்த முயற்சியின் நோக்கம். உரையாடல் மூலமும் வெளிப்படையான விவாதங்கள் மூலமும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வாழ்க்கையின் ஒரு பகுதியாக இறப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சம்.
5. மனம் மற்றும் உடல் ரீதியான அணுமுறை
நோயாளிக்கு பராமரிப்பு வழங்கும் சவால் நிறைந்த சூழலை வெற்றிகரமாக கடக்க உதவும் அணுமுறையை இந்தத் திட்டம் வழங்குகிறது. பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள், சமூகங்கள் போன்றவை பராமரிப்பு வழங்குபவர்களாக மாறவும் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான சவால்கள் குறித்து நன்கறியவும் இந்த முயற்சி வாயிலாக பயிற்சியளிக்கப்படுகிறது.
குணப்படுத்துதல்
இளம் வயதிலேயே தன் அன்பிற்குரியவரை இழந்து வாடும் டிம்பிள் நித்தேஷுடன் முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததாகவே உணர்கிறார்.
”எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல. உடன் வாழ்ந்த ஆண்டுகளில் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்,” என்கிறார் டிம்பிள்.
தற்போது மும்பையில் இருந்து செயல்படும் நிலையில் இந்தத் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவடையச் செய்ய திட்டமிட்டுள்ளார் டிம்பிள்.
”அடுத்தவரை குணப்படுத்தும் செயல்முறையில் நீங்களும் குணமடைவீர்கள். மரணம் எவ்வளவு விரைவாக வரும் என்பது எனக்குத் தெரியும். எனவே வாழ்க்கையின் மதிப்பை நான் புரிந்துகொண்டுள்ளேன். ஒவ்வொரு நோயாளிக்கு சேவையளிக்கும் போதும் நித்தேஷிடம் நெருங்கும் உணர்வு ஏற்படுகிறது. அவரது கனவை நிறைவேற்றி இந்தக் கொடிய நோயுடன் போராடும் ஒவ்வொரு நபருக்கு சேவையளிப்பதில் என் வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளேன்,” என்றார் டிம்பிள்.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா