Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

பஸ் விபத்தில் கை இழந்த இளைஞர் தொடங்கிய குறைந்த விலையில் செயற்கைக் கைகள் தயாரிக்கும் நிறுவனம்!

ரிஷி கிருஷ்ணா, நிரஞ்சன் குமார் இருவரும் இணைந்து நிறுவியுள்ள Symbionic ஸ்டார்ட் அப் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட் செயற்கை கைகளை குறைந்த விலையில் வழங்குகிறது.

பஸ் விபத்தில் கை இழந்த இளைஞர் தொடங்கிய குறைந்த விலையில் செயற்கைக் கைகள் தயாரிக்கும் நிறுவனம்!

Thursday October 07, 2021 , 3 min Read

பொதுவாக ஒரு விபத்து நடந்தால் அதில் பாதிக்கப்படுபவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வெகு காலம் ஆகும். அதிலும் கை, கால்களைத் துண்டிக்கும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுவதுண்டு.


ரிஷி கிருஷ்ணாவும் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டார். பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்தபோது பேருந்து விபத்துக்குள்ளானது. வலது கையைத் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

1

ரிஷி கிருஷ்ணா கையை இழந்தபோதும் மனம் தளரவில்லை. தன்னுடைய பிரச்சனைக்கு தானே சரியான தீர்வை உருவாக்கி தொழில்முனைவராகவும் உயர்ந்து, வளர்ந்து நிற்கிறார்.

கை துண்டிக்கப்பட்டவர்களின் வலியையும் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரிய உணர்வையும் போக்கி ஆறுதலளிக்கும் வகையில் ஸ்மார்ட் செயற்கை உறுப்பு வழங்க விரும்பினார். இதற்காக Symbionic என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினார்.

”என்னுடைய கை துண்டிக்கப்பட்ட பிறகு சந்தையில் கிடைக்கும் செயற்கை கைகள் வாங்க நினைத்தேன். அதைப்பற்றி விசாரித்தேன். அப்போதுதான் அதன் விலை 20 லட்ச ரூபாய் என தெரியவந்தது,” என்கிறார் ரிஷி.

20 லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி தேவைப்படுவோர் வாங்க முன்வரலாம். ஆனால் அதையும் தாண்டி அதை வாங்கும் நோக்கம் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

“செயற்கைக் கைகளைப் பொருத்திப் பார்த்தேன். வசதியாக இல்லை. எனவே அகற்றிவிட்டேன். என்னைப் போலவே பெரும்பாலானோர் ஒரு கட்டத்தில் இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலைமை வந்துவிடுகிறது,” என்கிறார் ரிஷி.

பலருக்கும் இதே பிரச்சனை இருக்கும் நிலையில் இதற்கான தீர்வை உருவாக்கினால் பலர் பயன்படுத்துவார்களே என்று ரிஷி யோசித்துள்ளார். இந்த யோசனை அவரை தொழில்முனைவர் ஆக்கியுள்ளது.

2
ரிஷி தன்னுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஒரு செயற்கைக் கையை முதலில் வடிவமைக்கத் தீர்மானித்தார். நண்பர்களை ஒன்றிணைத்தார். கல்லூரி பிராஜெக்டாக எடுத்துக்கொண்ட இந்த முன்னெடுப்பு ஸ்டார்ட் அப் முயற்சியாக மாறியது.

மற்ற தயாரிப்புகளில் காணப்பட்ட சிக்கல்கள்

சந்தையில் கிடைத்த செயற்கை கைகளில் கீழ்கண்ட பிரச்சனைகள் இருந்ததை ரிஷியின் அனுபவம் உணர்த்தியது:


  • விலையுயர்ந்ததாக இருந்தன. ஸ்மார்ட் திறன் கொண்ட, தரமான செயற்கை கையின் ஆரம்ப விலையே 10 லட்ச ரூபாய்.


  • சந்தையில் கிடைப்பவை அனைத்தும் ஒரே அளவில் இருந்தன. ஒவ்வொருவரின் உடலமைப்பும் மாறுபடும் என்பதால் வசதியாக இருப்பதில்லை.


  • சிக்னல்களை துல்லியமாகப் பெற்றுக்கொள்வதில்லை.


இவையே மக்கள் இவற்றை ஒதுக்குவதற்கான முக்கியக் காரணங்கள் என்பதைத் தெரிந்துகொண்டார்.

Symbionic - வசதியான தயாரிப்பு

Symbionic ஸ்டார்ட் அப் வழங்கும் செயற்கை கை தனித்தேவைக்கேற்ப கிடைக்கிறது. இதனால் இதைப் பயன்படுத்துவோருக்கு பொருத்தமாகவும் வசதியாகவும் இருக்கும். உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இவற்றை மாற்றிக்கொள்ளமுடியும் என்பதால் வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெரும்பாலான பிராண்டுகள் ஸ்மார்ட் செயற்கை உறுப்புகளை மெட்டல் பாகங்கள் கொண்டு தயாரிக்கின்றன. இதனால் நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வலி ஏற்படுகிறது. ஆனால் Symbionic பயோ-கிரேட் பிளாஸ்டிக் மற்றும் இதர இலகுவான பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் பயன்படுத்த வசதியாக இருப்பதுடன் நீடித்து நிலைக்கின்றன.

குறைந்த விலை

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் உற்பத்தி செலவு குறைவு. மெட்டல் பாகங்களுக்கு மாற்றாக பயோகிரேட் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் இந்த ஸ்மார்ட் செயற்கை கைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.


தற்போது சந்தையில் கிடைக்கக்கூடிய செயற்கை கை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால் 8 லட்ச ரூபாய் ஆரம்ப விலையாக உள்ளது. மேலும் இவற்றிற்கு விற்பனைக்குப் பிறகான சேவை கிடைப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால், பயனர்களின் தனித்தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் Symbionic செயற்கை கை 2 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கின்றன. உற்பத்தி செலவை மேலும் கட்டுப்படுத்தி விரைவில் 1 லட்ச ரூபாய்க்கு கிடைக்கச் செய்ய ரிஷி திட்டமிட்டுள்ளார்.

செயல்திறன்

செயற்கை கைகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் நிலையில் சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகளை வாங்கி அவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்படும் வரையில் பொறுமை காப்பதில்லை என்கிறார்.


ஆரம்பத்தில் சற்று சிரமம் இருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவற்றின் செயல்திறன் மேம்படும் என்கிறார் ரிஷி.

”தயாரிப்புகளின் செயல்திறன் சிறப்பாக இருந்தால் மட்டுமே பயன்படுத்துவோர் உற்சாகமாகத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்,” என்கிறார்.

இதற்காக ரிஷி இணை நிறுவனர் நிரஞ்சன் குமாருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாதிரி வகை அறிதல் (pattern recognition), செயலி சார்ந்த பேட்டர்ன் கண்காணிப்பு அமைப்பு போன்ற அம்சங்களை இணைத்துள்ளார்.

கைகளின் மணிக்கட்டில் சுழலும்தன்மை, ஒவ்வொரு விரலுக்கும் தனிப்பட்ட முறையில் கட்டுப்பாடு, செயல்படக்கூடிய கட்டைவிரல் என உடலின் இயல்பான செயல்பாடுகளின்படியே செயற்கை கைகளை வடிவமைத்துள்ளார்.

மற்ற தயாரிப்புகளைப் பழகுவதற்கு மாதக்கணக்கில் ஆகும். ஆனால் Symbionic தயாரிப்பைப் பயன்படுத்திப் பழகுவதற்கு 10 நாட்கள் போதும் என்கிறார் ரிஷி. இதற்குக் காரணம் இந்த ஸ்டார்ட் அப்பின் செயலி. இதன் மூலம் கண்காணிக்கமுடியும் என்பதால் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது.


முழுமையாக அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை தொடர்ந்து தயாரிப்பை மேம்படுத்த இருப்பதாகவும் ரிஷி குறிப்பிடுகிறார். அதேபோல் தயாரிப்பை விரிவுபடுத்தவும் விரும்புகிறார்.

3

வணிக மாதிரி

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் Symbionic தயாரிப்புகள் வணிக ரீதியாக விற்பனைக்குக் கிடைக்க உள்ளன.


ஆரம்பகட்டமாக நேரடியாகப் பயனர்களுக்கே விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் மருத்துவர்களுடன் இணைந்து பயனர்களைச் சென்றடைவதற்காக பணிகளும் நடந்து வருகின்றன.


ரிஷி தனது குழுவினருடன் இணைந்து ஆன்லைன் பயிற்சி மற்றும் மறுவாழ்வு தளத்தை உருவாக்கி வருகிறார். Symbionic பரிசோதனை முயற்சிக்காக என்ஜிஓ-க்களுடன் இணைந்துள்ளது.


இந்த ஸ்டார்ட் அப் BIRAC நிறுவனத்திடமிருந்து 30 லட்ச ரூபாய் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது. கூட்டுநிதி பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“தயாரிப்பைப் பயன்படுத்துபவர்களின் தேவைகள் முழுமையாக உள்வாங்கப்பட்டு Symbionic வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒரு ஐ-போன் வாங்கினால் எத்தனை மகிழ்ச்சியடைவார்களோ அந்த அளவிற்கு இந்தத் தயாரிப்பை வாங்குபவர்கள் மகிழ்ச்சியடையவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்கிறார் ரிஷி.

ஆங்கில கட்டுரையாளர்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: ஸ்ரீவித்யா