இந்தியாவில் TikTok தடை நிபந்தனைகளுடன் நீக்கம்: நீதிமன்றம் விதித்த விதிமுறைகள் என்ன?
டிக்-டாக் தடைக்கு எதிரான வழக்கு பதிவானதை தொடர்ந்து, சில நிபந்தனைகளை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவற்றை பின்பற்றினால் மட்டுமே இந்தியாவில் டிக்-டாக் தொடர்ந்து இயங்கமுடியும் என தீர்ப்பளித்துள்ளது.
வீடியோ-பகிரும் செயலியான டிக்-டாக்'கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையால் நீக்கப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக விசாரணை வேண்டும் என டிக்-டாக்கை நடத்தும் பைட்-டான்ஸ் நிறுவனம் அளித்த மனுவை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. ஏப்ரல் 24க்குள் விசாரணையை நடத்தி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் இடைக்கால உத்தரவிட்டிருந்தது. அதன் விளைவாகவே, டிக்-டாக் மீதிருந்த தடை இன்று நீக்கப்படுவதாக சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, டிக் டாக் சார்பாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வெளியிட்டனர்.
TikTok அடிப்படையில் பயனர்கள் உருவாக்கும் கண்டெண்டை வைத்தே இயங்கும் செயலி. நீதிமன்றத்தின் அறிவுரையாளராக இயங்கிய மூத்த வழக்குரைஞர் அர்விந்த் தட்டர் சமர்ப்பித்த கருத்துக்களையும் அமர்வு ஆய்வு செய்தது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இடைநிலை விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை அர்விந்த் எடுத்துரைத்தார்.
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமையின் கீழ் வரும் சட்டப்பிரிவு 19 (1) (a) இணைய வெளியில் பேசும் உரிமையை பாதுகாக்கிறது என்ற தட்டர், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் ஒன்றை நாம் நீதித்துறை வழியே அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என்று முன்னிலைப்படுத்திக் காட்டினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகளின் அமர்வு சில விதிமுறைகளை விதித்து, அவற்றை டிக்-டாக் பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்றத் தவறினால் மீண்டும் தடை விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
என்ன நிபந்தனைகள்?
சிறுவர் சிறுமியர் பெண்கள் பங்கேற்கும் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேட்டை உண்டாக்கும் வீடியோக்களை எல்லாம் டிக்டாக்-ல் பதிவேற்றக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிக்-டாக் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஐசக் மோஹன்லால்
டிக்-டாக்’கில் உள்ள பாதுகாப்பு தொழில்நுட்பம் அந்தத் தளத்தில் பதிவேற்றப்படும் ஆபாச வீடியோக்களை நிராகரித்துவிடும் என உறுதிச் சான்று ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
தடை வந்தது எப்படி?
ஏப்ரல் 3 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்தியாவில் டிக்-டாக்’கை தடை செய்ததில் இருந்து தான் டிக்-டாக் அபாயகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. உடனேயே, டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் டிக்-டாக் தடைக்கு ஸ்டே ஆர்டர் வேண்டுமென உச்ச நீதிமன்றத்திடம் மனு கொடுத்தது.
டிக்-டாக்கின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரம் 15 அன்று, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடையாணை கொடுக்க மறுத்தது. மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதற்கு அடுத்த நாள், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
ஏப்ரல் 16 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், ஒரு சுயாதீன அறிவுரையாளரை இது குறித்து ஆய்வு செய்ய நியமித்து, ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
ஏப்ரல் 17 ஆம் தேதி, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தங்கள் ப்ளே ஸ்டோர்களில் இருந்து டிக்-டாக் ஆப்பை நீக்கியது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களிடம் டிக்-டாக்கை இந்திய செயலி ஸ்டோர்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டது என செய்திகள் வெளியானதை தொடர்ந்து இது நடந்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பைட்-டான்ஸ் பதிவு செய்த மனுவை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது என நேரடியாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையை ஆய்வு செய்த ராய்டர்ஸ் நிறுவனம், இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதால் அதன் தாய் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு $500,000 நஷ்டம் என தெரிவித்திருக்கிறது. மேலும், டிக்-டாக் தடை அமல் செய்யப்பட்டிருந்தால் பைட்-டான்ஸ் நிறுவனத்தில் 250 பேர் தங்கள் வேலையை இழந்திருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.