'மேக் இன் இந்தியா’– இந்தியாவில் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பைத் தொடங்கிய சாம்சங்!
சாம்சங், இந்தியாவில் நொய்டா தொழிற்சாலையில் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புப் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப ஜாம்பவான் சாம்சங் அதன் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் நொய்டா தொழிற்சாலையில் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புப் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
நொய்டாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்த தென்கொரிய நிறுவனம், புதிய 4ஜி சார்ந்த ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 28,490 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“எங்களது கேலக்சி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷன் குறைந்த விலையிலானது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். கேலக்சி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி உடன் சேர்த்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக எங்களது ஒட்டுமொத்த 18 ஸ்மார்ட்வாட்ச் வகைகளையும் இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்,” என்று சாம்சங் இந்தியா மூத்த துணைத் தலைவர் மோகன்தீப் சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
இந்தத் தயாரிப்புகள் தொடர்பான உற்பத்தித் திறன் குறித்தோ அல்லது முதலீடு குறித்தோ இந்நிறுவனம் எந்தவிதத் தகவலையும் வெளியிடவில்லை.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் அதன் நொய்டா தொழிற்சாலையில் ஸ்மார்ட்போன் மற்றும் ரெஃப்ரிட்ஜ்ரேட்டர் தயாரிப்புத் திறனை இருமடங்காக உயர்த்த 4,915 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது.
2018-ம் ஆண்டு இந்நிறுவனம் அதன் மொபைல் தயாரிப்புத் திறனை நொய்டா தொழிற்சாலையில் இருமடங்காக உயர்த்தி 120 மில்லியன் யூனிட்கள் வரை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.
சாம்சங் நிறுவனத்தின் 4ஜி ஸ்மார்ட்வாட்ச் வகைகளில் கேலக்சி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி அலுமினியம் எடிஷனும் ஒன்று. சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புகள் மூன்று அளவுகளிலும் (42mm, 44mm, 46mm) இரண்டு தனித்துவமான வடிவமைப்புகளிலும் கிடைக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் 18 ஸ்மார்ட்வாட்ச் வகைகள் 19,900 ரூபாய் முதல் 35,990 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேலக்சி வாட்ச் ஆக்டிவ்2 4ஜி ஸ்மார்ட்வாட்சில் இ-சிம் இணைப்பு இருக்கும். பயனர்கள் அழைப்புகள், மெசேஜ், நோடிஃபிகேஷன் ஆகியவற்றைப் பெற உதவும். ஜுலை 11-ம் தேதி முதல் சில்லறை வர்த்தக ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் போர்டல்களில் கிடைக்கும்.
இந்திய ஸ்மார்ட் அணிகலன்கள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் 80.6 சதவீதம் வளர்ச்சியடைந்து வருவதாகவும் மார்ச் 2020 வரையிலான காலாண்டில் 4.2 மில்லியன் யூனிட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் IDC ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
வாட்ச் பிரிவு ஒவ்வொரு ஆண்டும் 43.3 சதவீதம் வளர்ச்சியடைவதாகவும் மேற்குறிப்பிட்ட காலாண்டில் நாட்டில் 2,09,400 வாட்ச் அனுப்பப்பட்டுள்ளதாகவும் IDC ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
தகவல்: பிடிஐ