தமிழகத்துக்கு 2 கோடி ரூபாய் அள்ளித் தந்த சாம்சங் நிறுவனம்!
பிரபல தென் கொரிய நிறுவனமான சாம்சங், தமிழகத்துக்கு மட்டுமல்ல, பிரதமரின் நிவாரண நிதிக்கும் கோடிகளில் நன்கொடை அளித்துள்ளது.
கொள்ளை நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கே சவால் விடுகிறது. இந்த நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான மருந்தும் கண்டிபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் தயார்நிலையில் இல்லை. இவையே நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.
மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வந்தாலும் இவை பயன்பாட்டிற்கு வருவதற்கு மாதக்கணக்கில் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்தக் கொடிய வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு பெருநிறுவனங்களும் தனிநபர்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விநியோக்க இந்நிறுவனம் மளிகைப் பொருட்களையும் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கியதுடன் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அவசரச் சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM-CARES) 15 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.
“தமிழகத்தில் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள எங்களது உற்பத்தி தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம். அத்துடன் இந்த இக்கட்டான சூழலை சமாளிப்பதில் சாம்சங் நிறுவனம் எவ்வாறு பங்களிக்கமுடியும் என்பது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று சாம்சங் இந்தியா கார்ப்பரேட் துணைத் தலைவரான பீட்டர் ரீ குறிப்பிட்டார்.
கட்டுரை: ஸ்ரீவித்யா