கிராமப்புற பெண்களுக்கு நிதிச் சேவைகளை சுலபமாக்கும் ‘Women’s World Banking’
Women’s World Banking (WWB) தெற்காசியாவின் பிராந்தியத் தலைவர் கல்பனா அஜயன், பெண்கள் சந்திக்கும் சவால்கள், வங்கி அமைப்புகளில் காணப்படும் சவால்கள் போன்றவை குறித்து ஹெர்ஸ்டோரி கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவில் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 46.45 கோடி. இதில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள். ஆனால், இவர்களில் எத்தனை பேரின் வங்கிக் கணக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கின்றன என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
இன்று இந்தியாவின் கிராமப்புறப் பெண்களுக்கு நிதிச் சேவைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றாலும் பணம் சார்ந்த புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதையும் நம்மால் மறுக்கமுடியாது.
“வங்கிகள் என்பது பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கானது என்று பெண்கள் நினைக்கிறார்கள். வங்கிகளின் கிளைகளுக்கு செல்லும்போது சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்று உணர்கிறார்கள். ஆனால், வங்கிகளில் ஏராளமான சேவைகள் வழங்கப்படுவது அவர்களுக்குத் தெரிவதில்லை. மைக்ரோ காப்பீடு, மைக்ரோ பென்ஷன் என்பன போன்ற சேவைகள் ஜன்தன் வங்கி செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே உள்ளன. சரியான பிராடக்டுகள், தகவல் தொடர்பு, பயிற்சி போன்றவற்றை உருவாக்கி இதற்குத் தீர்வு காண்கிறோம்,” என்கிறார் Women’s World Banking (WWB) தெற்காசியாவின் பிராந்தியத் தலைவர் கல்பனா அஜயன்.
பெண்கள் சந்திக்கும் சவால்கள், வங்கி அமைப்புகளில் காணப்படும் சவால்கள் போன்றவை குறித்து ஹெர்ஸ்டோரி கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார் கல்பனா அஜயன்.
மேலும், பொருளாதார ரீதியாக பெண்களுக்கு சக்தியளிக்கவேண்டும். இதற்கு பெண்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
மறைந்த ஆர்வலர் எலா பட் WWB நிறுவன உறுப்பினர். WWB சர்வதேச அளவில் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு. பெண்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியான நிலைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இதற்காக நிதிசார்ந்த தீர்வுகள், நிறுவனங்கள், கொள்கைகள் போன்றவற்றில் முதலீடு செய்கிறது.
பிரபல பெண்கள் உரிமை ஆர்வலரும் Self Employed Women’s Association (SEWA) நிறுவனருமான எலா பட் சமீபத்தில் தனது 89-வது வயதில் உயிரிழந்தார். வழக்கறிஞர், சமூகப் பணியாளர், அடிப்படை வளர்ச்சியின் முன்னோடி என பன்முகத்தன்மை கொண்ட எலா, இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, ஏழை பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போராடியுள்ளார்.
2019ம் ஆண்டு பேங்க் ஆஃப் பரோடா உடன் இணைந்து WWB சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஜன்தன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதில், பெண்கள் கிராமப்புறங்களில் வணிகம்/வங்கி பிரதிநிதியாக (Bsuiness/Banking Correspondent-BC) சேர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிரார்கள். இவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெண் வாடிக்கையாளர்களின் தேவைகள் சிறப்பாக புரிந்துகொள்ளப்பட்டு தீர்வளிக்கப்படும். உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இதை பரிசோதனை செய்த பிறகு, ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் இந்த முயற்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.
BC என்பது வங்கிக் கிளை செயல்பாடுகளின் நீட்சி. இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வங்கி மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்படும். பெண் வாடிக்கையாளர்கள் பெண் ஏஜெண்டுகளிடம் தயக்கமின்றி பேசுவார்கள். இதனால் வங்கியின் பிராடக்ட்ஸ் பற்றி அவர்களிடம் தெளிவாக எடுத்து சொல்லமுடியும்.
இருப்பினும், பெண்களை அத்தனை எளிதாக வங்கி பிரதிநிதிகளாக சேர்த்துக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தினரும் சமூகத்தினரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறைத்து மதிப்பிட்டனர். இந்த கண்ணோட்டத்தை மாற்றுவது கடினமாக இருந்துள்ளது.
“அதிகளவிலான பிரதிநிதிகள் முதல் தலைமுறை தொழில்முனைவோர். நேர மேலாண்மை, புரொஃபஷனலான அணுகுமுறை போன்றவற்றில் அவர்களுக்கு வழிகாட்டல் தேவைப்பட்டது,” என்கிறார் கல்பனா.
நிதிச் சேவைகள் துறை சார்ந்த குழுவினர், பெண் BC-க்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தனர். BC கமிட்டியில் பங்களிக்கவேண்டும் என்று WWB அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
உத்திரப்பிரதேசத்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட அடிப்படை பணிகள் இதுகுறித்த பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள்ள உதவியது என்கிறார் கல்பனா.
கள நிலவரம்
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த BC எண்ணிக்கையில் வெறும் 8-10% மட்டுமே பெண்கள் என்பதை WWB கவனித்தது.
“நாட்டில் 30 சதவீதம் அளவிற்காவது பெண் BC-க்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்தோம்,” என்கிறார் கல்பனா. தொழில்நுட்பம் சார்ந்த சவால்களுக்கு அடிமட்டத்திலேயே தீர்வு காண்பதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்பமுடியும் என்கிறார்.
பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தவும் தங்கள் டிஜிட்டல் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுவதாக கல்பனா தெரிவித்தார்.
”நாங்கள் கூகுள் பே நிறுவனத்துடன் ஆறு மாதகால பிராஜெக்ட் செய்து வருகிறோம். குறைந்த மற்றும் நடுத்தர அளவில் வருமானம் ஈட்டும் தொழில்முனைவோர்களுக்கும் பெண்களுக்கும் எவை தடையாக இருக்கின்றன என்பதைக் கண்டறியவேண்டும் என்றும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கவேண்டும் என்றும் கூகுள் எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது,” என்கிறார் கல்பனா.
டிஜிட்டல் ரீதியாகக் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் அடிப்படை அளவில் மாற்றங்களைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிறார்.
இந்தியாவிற்கு பலனளிக்கும் திட்டம்
நிதி நிறுவனங்கள், NBFC-க்கள் போன்றவற்றில் அனுபவம் மிக்கவர் கல்பனா. அதைத் தொடர்ந்து Edelweiss அமைப்புடன் இணைந்திருந்த சமயத்தில் வளர்ச்சித் துறையில் கால்பதித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் WWB செயல்பாடுகளில் இணைந்தார். தெற்காசியா முழுவதும் WWB செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார். இதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஜன்தன் யோஜனா திட்டத்துடன் இந்தியா சரியான பாதையில் பயணிக்கிறது என்கிறார்.
”இந்தத் திட்டம் மிகச்சிறப்பான மாற்றத்தை கொண்டு சேர்க்கிறது. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரிப்பதற்கும் உதவியுள்ளது,” என்கிறார்.
எம்.எஸ்.எம்.ஈ துறையில் WWB ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளது.
“எலா பட் மரபையே நாங்கள் பின்பற்றுகிறோம். அதனால் இந்திய சிறு தொழில்கள் மேம்பாடு வங்கியுடன் (SIDBI) இணைந்து சுவாரஸ்யமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். நிதி அமைப்பில் பெண் தொழில்முனைவோர் அதிகளவில் அடியெடுத்து வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்கிறார்.
கிராமப்புற பெண் தொழில்முனைவோரிடையே ஒரு முக்கிய விஷயத்தை கவனித்ததாக கல்பனா சுட்டிக்காட்டுகிறார்.
அதாவது, தெரிந்தவர்கள் மூலமாகவோ சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ குழுவாக கடன் பெற்றுக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தனிப்பட்ட முறையில் கடன் வாங்கும்போது ஏராளமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.
மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்கள் பெண்கள். அவர்களது பங்களிப்பு இல்லாமல் ஒருபோதும் வறுமையை ஒழிக்கமுடியாது என்று எலா பட் குறிப்பிட்டுள்ளார். இதை சாத்தியப்படுத்த பெண்கள் அனைவரும் தங்கள் சேமிப்பை சமையலறையிலிருந்து வங்கிக்கு மாற்றவேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா