2018ல் புதிய தொழில் ஐடியா மூலம் சாதித்த தொழில்முனைவோர்!
யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்ட தொழில்முனைவோர் கதைகளில் இருந்து சுவாரசிய தொழில்கள் பற்றிய தொகுப்பு.
இந்த வருடத்தின் இறுதி மாதத்தை அடைந்துவிட்டோம், இந்த ஆண்டு முடிய சில நாட்களே எஞ்சி இருக்க, நாம் திரும்பி பார்க்க வேண்டியது என்ன? இந்த வருடத்தில் புதியதாய் என்ன நாம் கற்றுக்கொண்டோம் என்பது தான். அப்படி பார்க்கையில் இந்த வருடம் யுவர்ஸ்டோரி தமிழ் பகிர்ந்த புதிய மற்றும் வித்தியாசமான தொழில்கள் மற்றும் தொழில்முனைவர்களை சற்று திரும்பி பார்ப்போம்.
1. ஆடு வளர்ப்பு வருவாய் ஈட்டும் தொழிலா?
ஆடு மேய்ப்பவர்களை மற்றும் வளர்ப்பவர்களை ஏளனமாய் பார்க்கும் எண்ணத்தை மாற்றி தனது ஃபேசன் டிசைனர் படிப்பை துறந்து ஆடு வளர்ப்பில் சம்பாதிக்கிறார் ஸ்வேதா. ஒருமுறை ஆட்டுப்பண்ணையை பார்வையிட்ட ஸ்வேதாவிற்கு அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட தனது தொழில் பயணத்தைத் துவங்கினார்.
பெங்களூரில் கணவருடன் இருந்த ஸ்வேதா நகரத்தில் இந்த தொழிலை செய்ய முடியாது என்று உத்தர்கண்ட் மாநிலத்தில் தெஹ்ராதூன் பகுதிக்கு அருகில் இருக்கும் ராணிபோக்ரி என்கிற கிராமத்திற்குச் சென்று முதலீடு செய்து ஆட்டு பண்ணை வைத்துள்ளார். 250 ஆடுகளுடன் வணிகத்தைத் துவங்கி, பாரம்பரிய சந்தையில் மற்றும் இணையம் வாயிலாகவும் ஆடுகளை விற்பனை செய்து கடந்த ஆண்டு 25 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார்.
இவரது தொழில்முனைப்பு பயணத்தை மேலும் படிக்க: ஆடு வளர்ப்பில் வருவாய்
2. சொப்பு சாமான் சமையல்; அதுவும் ஒரு தொழில் யோசனை
ராம்குமார்-வளர்மதி தம்பதியனர் மினியேச்சர்களை கொண்டு சமையல் செய்து யூடியுபில் பிரபலம் அடைந்துள்ளனர். சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று யோசித்த ராம்குமார், மனைவியின் யோசனைப்படி ’தி டைனி ஃபுட்ஸ்’ என்னும் யூடியுப் சேனலை துவங்கியுள்ளார்.
சமையல் செய்யும் பாத்திரத்தில் இருந்து, காய்கரி நறுக்கும் கத்தி வரை சகலமும் சிறிய பொம்மை பாத்திரமாகவே இருக்கிறது. முதலீடுகள் எதுவுமின்றி இவர்கள் துவங்கிய இந்த யூடியுப் சேனல் இவர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது.
இவர்களின் புது சிந்தனையைப் பற்றி மேலும் படிக்க: தி டைனி ஃபுட்ஸ்
3. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அடுப்பு
பயோமாஸ் அடுப்புகள் அதிகளவில் புகையை வெளியேற்றுவதைக் கண்ட ஜெயப்பிரகாஷ், இந்த பிரச்சனைக்குத் தீர்வுகண்டு சமையலறையில் பெண்கள் சமைக்கும்போது புகையினால் மூச்சுத்திணறி அவதிப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு உதவுக்கூடிய பல்வேறு வழிகளை ஆராயத் தொடங்கினார்.
அவரின் பல முயற்சிகளுக்கு பிறகு, இரண்டடுக்கு எறியும் முறை அடுப்பை உருவாக்கினார். அவர் தயாரித்த அடுப்பில் வெளியாகும் பயோமாஸ் எரிபொருள் மற்றும் புகை முழுவதுமாக எறிந்து குறைந்த மாசையே உருவாக்குகிறது.
பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் பயன்படுத்தவும் ஏற்ற ஜெயப்பிரகாஷின் ஆற்றல் மிகுந்த அடுப்பு பொன்னிற மஞ்சள் நிறத்துடன்கூடிய நீல நிற பிழம்புகளை வெளியேற்றுகிறது.
இவரது தொழில்முனைப்பு பற்றி மேலும் படிக்க: சுற்றுசூழலிற்கு உகந்த அடுப்பு
4. காதல் மெத்தைகள்; இந்த ஆண்டின் வைரல் கண்டுபிடிப்பு
கௌரவ்சிங்கின் லவ்ரோலர்ஸ் நிறுவனம் 3 விதமான மெத்தைகளை உருவாக்கியுள்ளனர். இவரது கண்டுபிடிப்பின் மூலம் 100-க்கும் மேற்பட்ட காதல் நிலைகளை முயற்சிப்பதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசை பிடிப்புகளுக்கும் வலிநிவாரணியாக செயல்பட உள்ளது இந்த மெத்தைகள்.
இந்த உலகத்திற்கு காமசூத்ரா கொடுத்த இந்தியாவில், தாம்பத்திய உறவில் உலக அளவில் 5வது இடம் பிடித்துள்ள இந்தியாவில், இன்றும் கலவி என்பது பேசக்கூடாத விஷயமாகவும், வேறுபாடுகளும் புதுமைகளும் புகாமல் இருப்பது ஏன் என்பதே அது. இந்த கேள்விக்கு பதில் தேடி, தனது வேலையை விட்டு, $450 மில்லியன் மதிப்புடைய இந்த சந்தையை பிடிக்க தற்போது தனது தொழில் முனைவு மூலம் களமிறங்கியுள்ளார்.
இவரின் இந்த புதுமையான தொழில்முனைப்பு பற்றி மேலும் படிக்க: காதல்-காமம்-தொழில்நுட்பம்
5. ’நூத்துக்கு முட்டை’ எடுத்து தொழிலில் பாஸ் ஆன இளைஞர்கள்!
பள்ளி முடிந்ததும் பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு எதைப்பற்றியும் யோசிக்காமல் பொறியில் கல்லூரியில் சேர்ந்த இளைஞர்களால் உருவானதே இந்த ’நூத்துக்கு முட்டை’ உணவகம். பேச்சுலர்ஸ் இணைந்து சமைத்து டெஸ்ட்டிங் செய்த முட்டை உணவு வகைகளை வைத்தே தொழில் துவங்கி விட்டனர் இந்த நண்பர்கள்.
“எதாவது புதுசா பண்ணணுமேன்னு யோசிச்சிட்டு இருந்தோம். அப்போ ஒரு நாள் நைட்டு இரண்டு மணிக்கு வந்த ஐடியா தான் ‘முட்டை’.”
முதலில் சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைத்து தங்களுடைய ஸ்டார்ட்-அப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். ரோட்டராக்ட் க்ளப்பினால் கிடைத்த தொடர்புகளின் வழியே கல்லூரிகளில் நடக்கும் ஈவண்டுகளில் எல்லாம் ஸ்டால்கள் அமைத்து தங்களின் ப்ராண்டை பிரபலப்படுத்தியுள்ளனர் இவர்கள்.
இவர்களின் முட்டை கதையைப் பற்றி மேலும் படிக்க: நூத்துக்கு முட்டை
6. ஆடு வளர்ப்பில் லாபம் கிடைக்க, முயல் வளர்ப்பில் கிடைக்காதா?
ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பில் பலர் கொடிக்கட்டி பறந்தாலும் முயல் வளர்ப்பு என்றாலே முந்திக் கொண்டு வேண்டாம் என்று மறுப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு மத்தியில் முயன்றால் முயல் வளர்ப்பிலும் முத்தான லாபம் ஈட்டி முன்னேறலாம் என்பதை நிரூபித்து முன்னுதாரணமாக விளங்குகிறார் சபரிநாதன், எக்ஸ் கார்ப்பரேட் ஊழியர்.
முயற்சித்த முதல் ஆண்டில் சறுக்கலே. ஆனால், இன்று 1,400 முயல்களாக பெருக்கெடுத்து இருக்கும் அவருடைய பண்ணையில் இருந்து மாதத்துக்கு 1.5டன் கிலோ முயல்கள் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு முயல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
பண்ணையாளர்ளுக்காக, செல்லப்பிராணிகளுக்காக, கறிக்காக... என்று முயல் விற்பனை செய்யலாம். கறிக்காக மொத்த விற்பனையில் ஒரு கிலோ உயிர் முயல் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்கின்றார்.
முயல் வளர்ப்பில் லாபம் சம்பாதிப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள: சாஸ்தா முயல் பண்ணை.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்