ஆட்டோ பயணத்தை எளிதாக்க செயிலி சேவையை துவங்கியது 'மக்கள் ஆட்டோ’
தமிழ்நாட்டில் ஆட்டோ சேவையில் ’ஓலா’, அதையடுத்து உபர் போன்ற பெருநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் முன்னரே மக்கள் ஆட்டோவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் மன்சூர். நம்ம ஆட்டோ என மீட்டர் கட்டணத்தில் செயல்படும் ஆட்டோ சேவையை துவங்கிய இவர் தற்போது ’மக்கள் ஆட்டோ’ என தொழில்நுட்ப உதவியோடு பல சேவைகளை இணைத்து முன்னேறியுள்ளார்.
தொழில்ரீதியான இவரது ஆட்டோ பயணத்தை மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு படிக்கலாம்.
2014ல் 100 வண்டிகளுடன் துவங்கிய இந்நிறுவனம் இன்று 5000க்கும் மேலான ஆட்டோக்களை இணைத்து வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் டாக்ஸிகளை போல் கால் சென்டரில் மூலம் இயங்கி வந்த மக்கள் ஆட்டோ, கடந்த மார்ச் மாதம் முதல் "MAuto" என செயிலி மூலம் இயங்கத் துவங்கிவிட்டது.
“இந்தியாவின் முதல் கம்புயுடரைஸ்டு ஆட்டோ சேவை மக்கள் ஆட்டோ தான். 2015 முதல் மொபைல் செயிலி சேவையை துவங்க முயற்சித்து இப்போது துவங்கியுள்ளோம்,” என்கிறார் மன்சூர்.
செயிலி மூலம் புக்கிங்கை கொண்டு வந்தாலும், கால் சென்டர், சமூக வலைதளம் மூலம் ஆட்டோக்களை புக்கிங் செய்யும் வசதியையும் தொடர்கிறார்கள்.
"இந்த செயலியின் மற்றொரு சிறப்பம்சம், இதில் தமிழ் மொழியில் ஆட்டோ புக்கிங் செய்யமுடியும் என்பதே. இது ஓலா, உபர் ஆப்களில் இல்லாததால் MAuto செயலி மூலம் ஆங்கிலம் தெரியாத மக்கள் எவரும் சுலபமாக ஆட்டோவை புக் செய்து அழைத்திட முடியும்,” என்கிறார் மன்சூர்.
தற்பொழுது ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயிலி மூலம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இவர்களுடன் எப்படி போட்டி போடுவீர்கள்?
“எங்களுடைய கருத்துப்படிவம் மற்ற செயிலி சேவைகளில் இருந்து மாறுபட்டது. மற்ற நிறுவனங்கள் போல் ஏதோ ஒரு வகையில் கணக்கிடாமல் அரசாங்கம் கிமீக்கு நிர்ணயித்த விலையையே நாங்கள் கணக்கிடுகிறோம்.”
அதவாது முதல் 1.8 கிமீ-க்கு ரூ.25, அதன் பின் ஒவ்வொரு கிமீ-க்கும் ரூ.12 என மீட்டர் கணக்குப்படியே வசூலிக்கின்றனர். இதுவே தங்களின் தனிப்பட்ட விற்பனைப் புள்ளி என்கிறார் மன்சூர்.
மேலும் இந்தியாவில், இரண்டாம்படியாக பயன்படுத்தும் ஆட்டோ சேவையை இன்னும் சரியாக எவரும் சீரமைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர்கள் மேல் உள்ள அதிருப்த்தியாலும், அதிக கட்டணத்தாலும் பலர் டாக்சிக்கு மாறிவிட்டதாக குறிப்பிடுகிறார் மன்சூர். இதனால் பல ஆட்டோ ஒடுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, எனவே இதை சீரமைக்கும் நோக்கிலே Mஆட்டோ இயங்கும் என தெரிவிக்கிறார் மன்சூர்.
“சென்னையில் மட்டுமே பத்து லட்சம் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பம் இயங்கி வருகிறது. இவங்களுக்கான பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு 5 வருடம் பல யுத்திகள கையாண்டு செயலி சேவையை வெளியிட்டுள்ளோம்...”
மேலும் இந்த செயலியில் ஆண்கள், பெண்கள் என இரண்டாக சேவையை பிரித்துள்ளனர். செயிலியை பதிவிறக்கம் செய்யும்பொழுதே பெண்கள் என்றால் அதற்கேற்றவாறு செயிலியின் அமைப்பும் சேவையும் மாறும். கல்லூரி மாணவர்கள் என்றால் அதுக்கு தனி சலுகை போன்ற புது வசதிகளையும் இவர்கள் இணைத்துள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பை கருதி ’உமன் பிரைட்’ என்னும் விதியின் கீழ் 1000க்கும் மேலான பெண் ஆட்டோ ஓட்டுனர்களை இணைத்துள்ளார் மன்சூர். இதன் மூலம் பெண்களின் பாதுக்காப்போடு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என்கிறார்.
தற்பொழுது தமிழகத்தில் மட்டும் இயங்கி வரும் இவர்களது சேவை கூடியவிரைவில் தேசிய அளவில் கால் பதிக்க உள்ளது. இதற்காக நிதி திரட்ட முயன்ற மன்சூர், சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திடம் முதலீட்டை பெற்றுள்ளார். மேலும் தங்களது நிறுவனத்தை ஃபிரான்சைஸ் மாடல் மூலம் விரிவாக்க உள்ளார் மன்சூர். தேசிய அளவில் இவர்களது சேவையை துவங்குவதற்காக மக்கள் ஆட்டோவை “M ஆட்டோ” என பெயர் மாற்றியுள்ளார்.
“எங்களது முக்கியமான மார்க்கெட்டிங் யுத்தி என்னவென்றால்; ஒன்று மீட்டர் கட்டணம் மற்றொன்று பாதுகாப்பான பயணம். சர்வதேச நிறுவனங்கள் இருந்தாலும் நம்மைச் சேர்ந்த நிறுவனம் வேண்டும் என்று பல ஒட்டுனர்கள் எங்களுடன் இணைகிறார்கள்,” என்கிறார் மன்சூர்.
மன்சூரின் முக்கிய நோக்கம் ஆட்டோ சேவையை சீர் அமைப்பது, மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிப்பது மற்றும் அரசாங்க மீட்டர் கட்டணத்தை மட்டுமே வசூலிப்பது. இதன் மூலம் எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் முன்னேறி வெற்றி காணலாம் என முடிக்கிறார் மன்சூர்.
செயிலி பதிவிறக்கம் செய்ய : MAuto