பெற்றோரின் நிறுவனத்தில் இணைந்து மகன் உருவாக்கிய ரூ.200 கோடி மதிப்பு ‘MapmyIndia'

By YS TEAM TAMIL|9th Oct 2020
MapmyIndia-வில் உள்ள டிஜிட்டல் வரைபட தீர்வுகளை டாடா மோட்டார்ஸ், ஹுண்டாய், மஹிந்திரா & மஹிந்திரா, பிஎம்டபிள்யூ, ஃபோர்ட், ஜாகுவார், டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்ற ஆட்டோ நிறுவனங்களும் ஃப்ளிப்கார்ட், அமேசான், ஓலா கேப்ஸ் போன்ற நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ரோகன் வர்மா 90-களில் பெற்றோரின் கம்ப்யூட்டர்களையும் அவர்கள் பணியாற்றி வந்த டிஜிட்டல் வரைபடம் பற்றியும் ஆராய்வது வழக்கம். ரோகனின் பெற்றோரான ராகேஷ் வர்மா, ராஷ்மி வருமா CE Infosystems என்கிற நிறுவனத்தின் நிறுவனர்கள். இந்நிறுவனம் டிஜிட்டல் வரைபட தகவல்தளம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்கப் பணியைத் துறந்து புதுடெல்லிக்கு மாற்றலாயினர்.


1995-ம் ஆண்டு CE Infosystems நிறுவனம் தொடங்கப்பட்டபோது அமெரிக்கா போன்று இந்தியாவில் வரைபடங்களைப் புரிந்துகொள்ளும் கலாச்சாரம் இல்லை. ஆனால் ராகேஷும் ராஷ்மியும் இந்தியாவில் டிஜிட்டல் வரைபட சந்தை சிறப்பாக வளர்ச்சியடையும் என்று நம்பினார்கள். 80 சதவீத தரவுகளில் லொகேஷன் என்கிற அம்சம் இடம்பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்த்தனர்.


ரோகனின் பெற்றோர் அமெரிக்காவில் ஜெனரல் மோட்டர்ஸ், ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய சமயத்தில் 50 லட்ச ரூபாய் சேமித்திருந்தனர். இந்தத் தொகையைக் கொண்டே நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

“அமெரிக்காவில் வணிகங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் வரைபடம் பலனுள்ளதாக இருப்பதை என் பெற்றோர் உணர்ந்தனர். அமெரிக்காவில் உள்ளவர்கள் டிஜிட்டல் வரைபடங்கள் மட்டுமல்லாது சாலை மார்க்கமாக பயணம் செய்ய பிரிண்ட் செய்யப்பட்ட வரைபடங்களையும் பயன்படுத்தினார்கள். தொழில்நுட்ப ரீதியான இத்தகைய வளர்ச்சியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த விரும்பினார்கள்,” என்கிறார் ரோகன்.

இவர் 2004-ம் ஆண்டு எலக்டிரிக்கல் என்ஜினியராக தனது பெற்றோரின் வணிகத்தில் இணைந்து படிப்படியாக சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக வளர்ச்சியடைந்துள்ளார்.

1

டிஜிட்டல் வரைபட தகவல்தளம் நுகர்வோர் சந்தையில் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் ராகேஷ் MapmyIndia என்கிற வரைபட போர்டலைத் தொடங்கினார். இது CE Infosystems நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.


இவரது பெற்றோர் வரைபட போர்ட்லை ஆன்லைனில் சோதனை செய்யத் திட்டமிட்டனர். இது நல்ல முறையில் பலனளித்தது. நாட்டில் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையம் சிறப்பாக வளர்ச்சியடைந்ததை அடுத்து டிஜிட்டல் வரைபட சந்தை அபார வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

மின்வணிகம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை தொடர்புடைய ஹைப்பர்லோக்கல் டெலிவரி போன்ற வணிகங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் டிஜிட்டல் வரைபடங்களை இணைக்கத் தொடங்கின. இதனால் தேவையும் அதிகரித்தது.


இத்தகைய தேவைகளை MapmyIndia சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது. நுகர்வோர் செயலிகள், நேவிகேஷன் சாதனங்கள், லைசன்சிங், மேப் ஏபிஐ, ட்ராக்கிங், அனாலிடிக்ஸ் போன்றவை மூலம் வரைபட சேவைகளை வழங்கத் தொடங்கியது.


ஆட்டோமொபைல், மின்வணிகம், வங்கி சேவை, காப்பீடு, விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைசார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் இந்நிறுவனம் தீர்வுகளை வழங்கத் தொடங்கியது.


MapmyIndia-வில் உள்ள டிஜிட்டல் வரைபட தீர்வுகளை டாடா மோட்டார்ஸ், ஹுண்டாய், மஹிந்திரா & மஹிந்திரா, பிஎம்டபிள்யூ, ஃபோர்ட், ஜாகுவார், டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்ற ஆட்டோ நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் ஃப்ளிப்கார்ட், அமேசான், ஓலா கேப்ஸ் போன்ற நிறுவனங்களும் இந்நிறுவனத்தின் வரைபட தீர்வுகளை பயன்படுத்துகின்றன.


டிஜிட்டல் வரைபட தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. உலகளாவிய சந்தையானது 2019-2024 காலகட்டத்தில் 15 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிய-பசபிக் சந்தை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக Mordor Intelligence அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2017-ம் ஆண்டு MapymyIndia ஆண்டு வருவாயாக 200 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக ரோகன் தெரிவிக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் வருவாய் எட்டப்படுவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

தற்போதைய நிதி நிலை குறித்து அவர் தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும் லாபகரமாக செயல்படுவதாகவும் வளர்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.

”நாங்கள் டீப் டெக் நிறுவனம். சுமார் 1,000 ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகின்றனர். இதில் 900 பேர் தரவு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள். 100 பேர் விற்பனை, மார்கெட்டிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்,” என்றார்.

டிஜிட்டல் வரைபட தரவுகள்

லொகேஷன் தரவுகளைக் கொண்ட எந்த ஒரு தகவலும் டிஜிட்டல் வரைபட தரவுகள்களாக கருதப்படும். ரோகன் இதுகுறித்து விவரிக்கையில், “வீடு, வணிகங்கள், சாலைகள் போன்ற இடங்களின் முகவரிகளைக் கொண்ட தரவுகளாக இருக்கலாம். கட்டிடங்கள், சாலைகள், பொருட்களின் 3டி மாதிரிகளின் நிஜ உலக வரைபடத்திலிருந்து இந்தத் தரவுகள் கிடைக்கின்றன.


இந்த வரைபடம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் 360 டிகிரி மற்றும் லைவ் டிஜிட்டல் மாடலை அடிப்படையாகக் கொண்டது.

“தரவுகள் சேகரிப்பு, உருவாக்கம், பிராசசிங் மற்றும் பப்ளிஷிங், அனாலிடிக்ஸ், ஏபிஐ என அத்தகைய மாடல்களை உருவாக்குவது சிக்கலானது. இருப்பினும் நாங்கள் இதை உருவாக்குவதால் ஹைப்பர்லோக்கல் டெலிவரி, பயணப் பகிர்வு சேவை, ரியல் எஸ்டேட் போன்றவை தொடர்பான நூற்றுக்கணக்கான செயலிகள் உருவாக்க முடிகிறது. கிட்டத்தட்ட அனைத்து செயலிகளுக்கும் வரைபடங்கள் பயன்படுத்தப்படுகிறது,” என்றார்.
2

ரோகனுக்கு டிஜிட்டல் வரைபட தரவுகளில் இருக்கும் நிபுணத்துவம் 19 வயதில் தொடங்கியதாகும். ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பொறியியல் முடித்த பட்டதாரியான இவர் தனது பெற்றோரின் நிறுவனத்திற்காகவே MapmyIndia போர்டலை உருவாக்கியுள்ளார்.

“என் அப்பா வரைபட போர்டல் உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். வரைபட போர்டல் பிரபலமடையாததால் இதை உருவாக்குவதில் உள்ள தொழில்நுட்ப சவால் உற்சாகமளிப்பதாக இருந்தது,” என்றார்.

ஆரம்பத்தில் பெருநிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை வரைபட தரவுகளின் உதவியுடன் டிஜிட்டல்மயமாக்கவும் கணிணிமயமாக்கவும் இந்நிறுவனம் உதவியது. ரோகன் வணிகத்தில் சேருவதற்கு முன்பு அவரது பெற்றோர் டாடா ஸ்டீல், கோகோ கோலா போன்ற வாடிக்கையாளர்களுடன் பணியாற்றி வந்தனர்.


அவர் முழுநேரமாக இணைந்த பிறகு MapmyIndia நேவிகேஷன் சாதனங்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் வரைபடம், ஏபிஐ, ஐஓடி சாதனங்கள், இடம் சார்ந்த எண்டர்பிரைஸ் SaaS ஆகியவற்றை உருவாக்கியது.


இதுவரை இந்நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் சொத்துகளை உருவாக்க 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 2006-2015 ஆண்டுகளிடையே லைட்பாக்ஸ் வென்சர்ஸ், நெக்சஸ் வென்சர்ஸ், குவால்கம் வென்சர்ஸ், ஜென்ரின் ஆகிய நிறுவனங்களிடமிருந்து வென்சர் முதலீட்டு நிதி திரட்டியுள்ளது. 2015-ம் ஆண்டு 1,600 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்தின் மைனாரிட்டி பங்குகளை ஃப்ளிப்கார்ட் வாங்கியது.

சிக்கல்கள்

ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் வரைபட தரவுகள் குறித்து புரிந்துகொள்கின்றன. அப்ளிகேஷன் உருவாக்குவதில் டிஜிட்டல் வரைபடங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாததே MapmyIndia சந்திக்கும் மிகப்பெரிய சவால்.

“இந்தப் பிரச்சனை இன்னமும் தொடர்கிறது. டிஜிட்டல் வரைபடம் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான செயலிகள் இருப்பதையும் வரைபடம் என்பது டீப் டெக்னாலஜி தொடர்புடையது என்பதையும் மக்கள் உணரவில்லை. இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை,” என்கிறார் ரோகன்.

கூகுள் மேப் சேவை சந்தையில் அறிமுகமானபோது MapmyIndia-வின் ஜிபிஎஸ் சாதனங்கள் மற்றும் இதர சேவைகள் பாதிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் போன்களில் கூகுள் மேப் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான மாற்றை நுகர்வோர் ஆராயவேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

3

“ஜிபிஎஸ் சேவைகளுக்காக அனைவராலும் தனியாக செலவிடமுடியாது. கூகுள் மேப் ஏற்கெனவே ஸ்மார்ட்போன்களில் இணைக்கப்பட்டே கிடைக்கிறது. எனவே கடும் போட்டிகளுடன்கூடிய மிகப்பெரிய சந்தையில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டிய சூழல் நிலவியது,” என்கிறார் ரோகன்.


MapmyIndia போர்டலின் எஸ்ஈஓ கூகுளை சார்ந்திருந்தார். அது கடினமாக காலகட்டமாக இருந்தாலும் நுகர்வோர் சேவையிலும் சிறந்த தயாரிப்பை வழங்குவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தது.


டெவலப்பர்களுக்கான இலவச தளத்தை MapmyIndia வழங்கியது தனித்துவமான சேவையாக அமைந்தது என்கிறார் ரோகன்.

“பெரிய மற்றும் சிறிய டெவலப்பர்களுக்கு எங்களது ஏபிஐ தளம் பிடித்திருந்தது. எங்கள் வரைபடம் இலவசமாகக் கிடைப்பதை அறிந்து எங்களை அணுகினார்கள். கூகுளின் கட்டணம் அதிகரித்தது. இதை மக்கள் உணரத் தொடங்கினார்கள்,” என்றார்.

வரும் நாட்களில் MapmyIndia தொடர்ந்து முதலீடு செய்து இந்த இலவச தளம் மூலம் டெவலப்பர்களுக்கு உதவ விரும்புகிறது. மேலும் பலரை பணியமர்த்தி அதன் தொழில்நுட்ப குழுவை வலுவாக்கவும் திட்டமிட்டுள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world