கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தமிழகப் பெண்கள்...!

வாழ்வாதாரத்திற்காக தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து கடற்பாசி சேகரிப்பதுடன் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கின்றனர் இப் பெண்கள்.

கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தமிழகப் பெண்கள்...!

Friday March 01, 2019,

2 min Read

நம்மில் பலருக்கு கடலுக்கு அடியில் இருக்கும் அற்புதமான உலகை ஆராய ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் விளையாட்டு சிறந்த வழியாகத் தோன்றும். இதைப் பலர் சாகசம் நிறைந்த விளையாட்டாகப் பார்க்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக உள்ளது.

தமிழகத்தின் சின்னபாலம் என்கிற பகுதியைச் சேர்ந்த 20 முதல் 60 வயது வரையிலும் உள்ள சுமார் 300 பெண்கள் மன்னார் வளைகுடாவில் இருக்கும் தீவுகளை ஒட்டியுள்ள ஆழ்கடல் பாறைகளில் வளரும் கடற்பாசியை சேகரிக்க ஆழ்கடலுக்குள் செல்கின்றனர். இவர்கள் தங்களது தினசரி வருவாய்க்கு கடற்பாசி அறுவடையையே சார்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

எனினும் ஸ்கூபா டைவிங் செய்வதற்கான பிரத்யேக உடையோ ஆக்சிஜன் சிலிண்டரோ இவர்களிடம் இல்லை. புடவை அணிந்தவாறே ஆழ்கடலுக்குள் செல்கின்றனர்.

கடலில் எழும் அலைகளை துணிந்து எதிர்கொண்டு ஆழ்கடலுக்குள் செல்லும் இந்தப் பெண்கள் தங்களது பாதங்களை பாதுகாக்க ரப்பர் செருப்புகளையே அணிந்துகொள்கின்றனர். கடற்பாசியை வெறும் கைகளால் சேகரிப்பது ஆபத்தானது என்பதால் விரல்களில் துணியை சுற்றிக்கொண்டும் முகமூடி அணிந்துகொண்டும் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். ஆழ்கடலில் கடற்பாசியை சேகரிக்க முதுகில் ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துச் செல்கின்றனர் என ’ஃப்ரண்ட்லைன்’ தெரிவிக்கிறது.

கடற்பாசி சேகரிப்பவர்கள் குழுவிற்கு தலைமை வகிக்கும் எஸ் பகவதி ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்கையில்,

“நாங்கள் என்ன உடை உடுத்தியிருக்கிறோமோ அத்துடனே நீரில் இறங்குகிறோம். கடற்பாசியை அறுவடை செய்யும்போது கைகளில் கால்களிலும் காயம் ஏற்படும். எங்களது மூட்டுகளையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உடைகள், கையுறைகள், ஷூக்கள் போன்றவை அவசியம்,” என்றார்.

ஆழ்கடலில் உள்ள பாறைகள், கற்கள் போன்ற கடினமான பரப்புகளில் வளரும் பல வகையான கடல் தாவரங்கள் மற்றும் பாசிகளை கடற்பாசி என்கிற பொதுவான பெயரில் அழைக்கிறோம். 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இது 26 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தையாக மாற சாத்தியம் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடற்பாசி பெரும்பாலும் காஸ்மெடிக்ஸ் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படும் நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் அழியாமல் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே 2002-ம் ஆண்டு கடற்பாசியை அறுவடை செய்ய அரசாங்கம் தடைவிதித்தது. இதுபற்றி பகவதி கூறுகையில்,

“தீவு இருக்கும் பகுதியின் அரை கிலோமீட்டர் ஆரத்திலேயே பெரும்பாலான கடற்பாசி இருக்கும். நாங்கள் தீவுப் பகுதிக்கு செல்லவிடாமல் தடை செய்தால் எங்களால் எப்படி அறுவடை செய்யமுடியும்? எங்களது குடும்பத்தை எப்படிப் பராமரிக்கமுடியும்?” என்றார்.

எனவே இந்தப் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும் கடற்பாசி சேகரிப்பவர்கள் சங்கம் என்கிற கூட்டமைப்பை அமைத்தார் லட்சுமி மூர்த்தி. அவர் கூறுகையில்,

”நாங்கள் அறுவடையை மாதத்திற்கு 12 நாட்களாக குறைத்துக்கொண்டோம். அதாவது ஒவ்வொரு பௌர்ணமி நாளில் துவங்கி ஆறு நாட்கள் அறுவடை செய்யப்படும். பின்னர் ஒன்பது நாட்கள் இடைவெளி விடப்படும். அதன் பிறகு அமாவாசையிலிருந்து மீண்டும் அறுவடை செய்யப்படும். மீண்டும் ஒன்பது நாட்கள் இடைவெளி விடப்படும். இதனால் கடற்பாசி மீண்டும் உற்பத்தியாகி ஒட்டுமொத்த அறுவடை அதிகரிக்கும்,” என்றார்.

”ஆழ்கடலில் இறங்கும் இந்தப் பெண்களுக்கு உதவ 2014-ம் ஆண்டு தமிழக அரசாங்கம் பயோமெட்ரிக் கார்டுகளை வழங்கியது. இது அவர்களை தனிப்பட்ட மீனவர் குழுவாக அடையாளப்படுத்திக்கொள்ள உதவும். அதுமட்டுமின்றி அதிகாரிகள் அவர்களது பணியில் குறுக்கிடுவதையும் தடுக்கும்,” என்றார்.

லட்சுமியின் முயற்சிகளுக்காக அவருக்கு 2016-ம் ஆண்டு கலிபோர்னியாவில் சீகாலஜி விருது வழங்கப்பட்டது. லட்சிமி தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை ஏழைக் குடும்பங்களுக்கு பள்ளி கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கினார்.

இந்தத் தொழில் எளிதானதல்ல. இந்தத் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்க இளம் தலைமுறையினருக்கு படிப்பு அவசியம் என்கிறார் லட்சுமி.

கட்டுரை : THINK CHANGE INDIA