போட்டது $1 பில்லியன்; எடுத்தது $100 பில்லியன்! - மார்க்கின் ‘இன்ஸ்டா’ வியூக வெற்றி!
அன்று மார்க்கின் தொலைநோக்குப் பார்வையால் இன்று இன்ஸ்டாகிராமின் நிகர மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.
2012-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் அப்போது வளர்ந்து கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை 1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது பலரையும் புருவத்தை உயர்த்தியது.
பிரபலமாகாத வெறும் 3 கோடி பயனர்களை மட்டுமே கொண்டிருந்த ஒரு சமூக வலைதளத்தை மார்க் போன்ற ஒருவர் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்குவது எவ்விதத்தில் அவருக்கு லாபம் தரும் என்பதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்த பலரது கேள்வியாக இருந்தது. அப்போது இன்ஸ்டாகிராமில் பணியாற்றிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 13 மட்டுமே.
ஆனால், காலத்தை கொஞ்சம் வேகமாக ஓட்டிப் பார்த்தால், அன்று மார்க்கின் தொலைநோக்குப் பார்வையால் இன்று இன்ஸ்டாகிராமின் நிகர மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது என்பதை அறியலாம். வரலாற்றில் மிகவும் லாபகரமான ஒரு நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
2012 வாக்கில் உலக அளவில் நம்பர் ஒன் சமூக வலைதளமாக ஃபேஸ்புக் கோலோச்சிக் கொண்டிருந்தது. அப்போது ஸ்மார்ட்போன்கள் பெரியளவில் பிரபலமாகாத கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி வாயிலாகவே ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
துல்லிய கணிப்பு
அப்படியான ஒரு சூழலில், டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்டம் என்பது முழுக்க முழுக்க செல்போன் வாயிலாகத்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார் மார்க் ஜுக்கர்பர்க்.
ஸ்மார்ட்போன்களின் வருகை, இனி மெல்ல கணினி பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை உணர்ந்த அவர், அதற்கு சரியான தளம் இன்ஸ்டாகிராம் என்பதை புரிந்து கொண்டார்.
அந்தக் காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஃபேஸ்புக், ட்விட்டரை விட மிகக் குறைந்த வருவாயை ஈட்டிக் கொண்டிருந்தாலும், இன்ஸ்டாகிராமில் பயனர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. மேலும், அதன் எளிமையான பயன்பாடும், பயனர் உள்ளீடுகளும் அவரை கவர்ந்தன.
மார்க்கை பொறுத்தவரை இன்ஸ்டாகிராமை வாங்குவது என்பது பத்தோடு பதினொன்றாக ஒரு செயலியை கையகப்படுத்தவதல்ல. அது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தவதாக இருந்தது.
மிகச் சிறந்த உத்தி
அந்தக் காலகட்டத்தில் ஃபேஸ்புக் தளத்துக்கு கடும் போட்டியாக விளங்கிய ட்விட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளோடு தொடர்ந்து ஈடுகொடுத்த ஓடவேண்டும் என்றால் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக்கோடு இணைக்க வேண்டியது கட்டாயமானது.
இப்படியாக இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்குடன் இணைக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் தளமாக மாற்றப்பட்டதும், இளம் தலைமுறை பயனர்களின் எண்ணிக்கையும் கூடியது. மேலும், பயனர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும் அம்சங்களும் அதிகம் பேரை ஈர்த்தது. எனவேதான் இன்ஸ்டாகிராமை வாங்கும் மார்க்கின் முடிவு மிகச் சிறந்த வியாபார உத்தியாக போற்றப்படுகிறது.
இன்று இன்ஸ்டாகிராம் என்பது வெறும் சமூக வலைதள ஜாம்பவான் மட்டுமின்றி, ‘மெட்டா’ நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டும் ஒரு தளமாகவும் விளங்குகிறது.
உலகம் முழுவதும் 200 கோடி பயனர்களை கொண்டுள்ள இத்தளம், சமூக ஊடக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியிருக்கிறது. இன்றைய Gen Z இளைஞர்களை பொறுத்தவரை ஃபேஸ்புக், எக்ஸ் எல்லாம் வயதானவர்கள் பயன்படுத்துவதாக மாறியிருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் மட்டுமே.
இன்று இன்ஸ்டாகிராமின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இது மெட்டாவின் சந்தை மதிப்பான 1.47 டிரில்லியன் டாலரில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும்.
லாபம் ஒருபுறமென்றால், இன்னொருபுறம் எதிர்கால ‘டிரெண்டை’ கணித்து அதற்கேற்ப துணிச்சலுடன் தன்னுடைய முதலீடுகளை செய்யும் மார்க் ஜுகர்பர்க்கின் திறன்மிகு ஆளுமையையும் இது உறுதி செய்துள்ளது.
26 வயதில் ரூ.416 கோடிக்கு அதிபதி... டிஜிட்டல் உலகின் ‘இன்பாக்ஸ் மேன்’ கிஷன் பகாரியா!
Edited by Induja Raghunathan