பிசியாக டிவியில் நியூஸ் வாசித்த வசந்த், இன்று சுடச்சுட ‘கறி இட்லி’ விற்பனை செய்யும் தொழில்முனைவர்!
தொலைகாட்சியில் பிசியாக நியூஸ் வாசித்துக் கொண்டிருந்த வசந்த் சுப்ரமணியன், இன்று அதைவிட பிசியாக சுடச்சுட கறி இட்லி விற்றுக்கொண்டிருக்கிறார். ஓஹ்! அப்போ பார்ட் டைம்மா இத பண்றாரா? இல்ல, சும்மா பொழுதுபோக்குக்காக இதைச் செய்கிறாரா? என்றுதானே கேட்கிறீர்கள்?
இல்லை, இல்லை... வசந்த் தனது நீண்ட நாள் கனவை மெய்பிக்க ஊடகத்தை விட்டு, முழுநேர தொழில்முனைவர் ஆகி, செய்திகளை படித்த கைகளால் இப்போது இட்லி கறியை சர்வ் செய்து விற்பனையில் அசத்தி வருகிறார் நம்ம வசந்த்.
மீடியா டு தொழில்முனைவு
ஒருவருக்கு தொழில்முனைவு ஆசை மனதின் அடி ஆழத்தில் தோன்றிவிட்டால் போதும், நீருக்குள் இருக்கும் பந்துபோல அந்த ஆசை எப்படியும் மேலே வந்துவிடும். நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் உங்களால் அந்த இடத்தில் இருக்க முடியாது.
மீடியா துறையில் பிரபலமாக இருந்த வசந்த் மற்றும் அவருடைய மனைவி மிருளாளினி ஆகியோர் இணைந்து ’நயம் கறி இட்லி கடை’ என்னும் உணவகத்தை சென்னை முகப்பேரில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
இரவு மட்டுமே செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில், மாலை 6.30 மணிக்கே கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. பார்சல், அங்கேயே சாப்பிடுபவர்கள் என கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததை நம்மால் பார்க்கமுடிந்தது.
வசந்த் மீடியாவில் இருந்து வெளியேற என்ன காரணம், ஏன் அசைவ உணவகம்? அடுத்த கட்ட திட்டம் என்ன? நிதி என பல விஷயங்களை பகிர்ந்து கொண்ஆர்.
ஏன் வேலையை விட வேண்டும்?
இன்ஜீனியரிங் முடித்து மீடியாவில் வேலை செய்தேன். மீடியா என்பது நல்ல வேலை என்பது மாற்றுக்கருத்து கிடையாது. ஊடகத்தில் நல்ல அனுபவம் கிடைத்தது, பல விஷயங்களை செய்ய முடிந்தது. ஆனால்,
“மீடியாவின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. நாம் தனியாக எதுவும் செய்யாவிட்டால் ஒரு பெரிய கேரியரை உருவாக்க முடியாது என்பதும் தெரிந்தது. பிஸினஸ் குடும்பத்தில் இருந்து வந்ததால் தொழில் தொடங்கலாம் என யோசித்தேன். நமக்கத் தெரிந்தது மீடியாதான். ஆனால் மீடியாவில் இல்லாமல் வேறு தொழில் செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் உணவு எனக்குத் தோன்றியது,” என்றார்.
எங்கள் வீட்டில் ஆண்கள் சமைப்பது என்பது புதிது கிடையாது. அப்பா சமைப்பார். அதனால் நானும் சமைப்பேன். என்னால் அதிக நபர்களுக்கு சமைக்க முடியும். மேலும், உணவு என்பது முக்கியமாது. பிடித்த ருசியான உணவை கொடுத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள். சைவ உணவில் பல வகையான உணவுகள் இருக்கிறது. ஆனால், அசைவ உணவில் பெரிய ரெஸ்டாரண்ட்கள் மட்டுமே உள்ளன. சிறிய அளவில் தரமான அசைவ உணவுகள் இல்லை என்பதால் அதில் கவனம் செலுத்தியதாக விளக்கினார்.
ஆரம்பம் எளிதாக இல்லை
வேலையை விடலாம் என முடிவெடுத்துவிட்டேன். இரவில் மட்டும்தான். நானே சமைத்துவிடுவேன் என எல்லா திட்டமும் சரியாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தம்போது பல சிக்கல்கள் இருந்தன.
“எப்படி சமைக்க வேண்டும் என்பது பிரச்சினையில்லை. ஆனால் எவ்வளவு சமைப்பது, எத்தனை நபர்களுக்கு சமைப்பது என்பது தினமும் மாறிக்கொண்டே இருக்கும். தவிர பணியாளர்கள் கிடைக்கவில்லை. பணியாளர்கள் இருந்தாலும் அவர்களை எப்படி கையாளுவது என்பதில் பல சிக்கல்கள் இருந்தன.”
சுமார் 2.5 லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்திருப்பேன். 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த கடையை தொடங்கினேன்.
ஆரம்பத்தில் தினமும் உணவு வீணாகும். சில மாதங்கள் நஷ்டம் இருந்தது. நஷ்டத்தை எப்படி குறைப்பது, பொருட்களை எப்படி மொத்தமாக வாங்குவது எந்த அளவுக்கு சமைப்பது என தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன், என்கிறார்.
இப்போது சுமார் 1000 ரூபாய் அளவுக்கு பொருட்கள் வீணாகும். ஆனால் இது தவிர்க்க முடியாது. பொருட்கள் வீணாவதை மொத்தமாக குறைக்கத் திட்டமிட்டால் விற்பனையும் குறையும். இப்போதைக்கு சுமார் 6 லட்ச ரூபாய்க்கு மாத விற்பனை இருக்கிறது. லாபம் என பார்த்தால் சில ஆயிரங்கள் இருக்கிறது,” என்றார் வசந்த்.
அடுத்த கட்டம்?
இப்போதைக்கு ’நயம் கறி இட்லி’ கடையின் சுவையை மக்கள் விரும்பத் தொடங்கி இருக்கிறார்கள். எங்கள் கடைக்கு அவ்வப்போது ஒரு சொகுசு கார் வந்து நிற்கும். டிரைவர் வந்து போனை கொடுப்பார். ஆர்டர் எடுத்துகொள்வேன். ஒரு நாளில் கடையில் கூட்டம் குறைவாக இருந்த சமயத்தில் அந்த கார் வந்தது. அப்போது டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன்.
தென் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவர் எங்கள் வாடிக்கையாளர். எப்படியோ எங்களது பெயர் தெரிந்திருக்கிறது. சென்னை வரும்போதெல்லாம் எங்கள் கடையில் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுதவிர ஆவடி உள்ளிட்ட தொலை தூரத்தில் இருந்தும் மக்கள் வருகிறார்.
இப்போதைக்கு, இட்லி கறி மற்றும் அசைவ உணவுவகைகள் பல இங்கே கிடைக்கிறது. நின்று கொண்டே சாப்பிடும் வசதிதான் உணவகத்தில் இருக்கிறது. அதனால் பார்சல் விற்பனை அதிகமாக இருக்கிறது. மக்கள் பலரும் விரும்புவதால் உட்கார்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற இடத்தை பார்த்துவருகிறோம். அப்போது மேலும் பலரை சென்றடைய முடியும்.
அதனை தொடர்ந்துதான் மதியத்துக்கான உணவகத்தை ஆரம்பிக்க முடியும். அதேபோல காலையில் பலரும் அசைவ உணவை சாப்பிடுவதில்லை. அதனால், காலையில் கொடுக்க வேண்டும் என திட்டமிடுகிறோம். உதாரணத்துக்கு இட்லி-மீன்குழம்பு உள்ளிட்ட எளிமையான உணவுகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அதனால் முழுநேர உணவமாக மாற்ற வேண்டும் என்பதே திட்டம் என்றார்.
இதுவரை, தனிநபர் கடையாகத்தான் நடந்துவருகிறது. இதனை நிறுவனமாக மாற்ற வேண்டும். சிலர் எங்களுக்கு பிரான்ஸைசி கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். இதுபோல பல திட்டங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும் என வசந்த முடித்தார்.
மீடியா என்பது போதை என்று சொல்லுவார்களே, அதிலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள் என கேட்டதற்கு,
“செய்தி வாசிக்கிறேன் என்பது என்னுடைய வேலை என்பதைத் தவிர வேறு எதனையும் புத்திக்குள் ஏற்றிக்கொள்ளவில்லை அதனால் எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் எனக்கு இன்னும் மீடியா பர்சன் என்னும் அடையாளம் இருக்கிறது. பலரும் என்னை அப்படிதான் அறிந்துகொள்கிறார்கள். விரைவில் நயம் கறி இட்லியின் நிறுவனர் என அறிந்துகொள்ளும் அளவுக்கு உழைக்க வேண்டும்,” என்று கூறி நமக்கு விடை கொடுத்தார் வசந்த்.