பனைமரத் தூணில் வேய்ந்த குடிசைகள்; வாடிவாசல் தோற்ற நுழைவாயில்; மதுரையில் களைகட்டும் பாரம்பரிய உணவகம்!
சற்றே சிந்தியுங்கள்... நீங்கள் சென்ற ஒரு ஹோட்டலுக்கு எக்காரணத்திற்காக உங்கள் மனம் மீண்டும் செல்ல விரும்புகிறது? நிச்சயம் உணவின் தரமும், அதன் ருசியும். அதற்கடுத்தது..? உணவகத்தின் உள் கட்டமைப்பு. ஆம், ஹோட்டலின் உள் அலங்காரத்தின் வசீகரத்தால் ஏற்பட்ட சூழலின் அழகு, உங்கள் மனதை அப்படியே ஆட்படுத்திக் கொண்டிருக்கும். எங்கு திரும்பினும் எத்திசையிலும் ஹோட்டல் கதவுகள் திறந்தே இருப்பினும் அப்படியாப் பட்ட மனஅமைதியை ஏற்படுத்தி உள்ளத்துக்கு விருந்தளிக்கும் சூழலைக் கொண்ட உணவகங்கள் வெகு சிலவே. அந்த வெற்றிடத்தை நிரப்பும் விதமாய் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் மதுரையில் சிறப்பாய் செயல்பட்டு வருகிறது ’வாடிவாசல்’ எனும் பாரம்பரிய உணவகம்!
மதுரை அண்ணாநகரில் ஒரு கிளையும், விளக்குத்தூணில் மற்றொரு கிளையும் கொண்டு செயல்படும் உணவகத்தின் நுழைவாயில், ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமான வாடிவாசல் போன்றே பனை மரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காளைச் சிலை, மாட்டுவண்டி, ஏர் கலப்பை, போன்றவை வந்தோரை வரவேற்கும் வகையில் முகப்பிலே அமைந்திருக்க, குடும்பமாய் அமர்ந்து உண்ண பனை மரத்துத் தூணில், புற்கள் கொண்டு வேயப்பட்ட குடிசைகளும், குழந்தைகள் விளையாடுவதற்காக இடமும் ஒதுக்கப்பட்டு, மதுரையில் வீக்கெண்ட்டை மகிழ்வாய் கழிக்கக்கூடிய ஒரு இடமாக அமைந்துள்ளது ’வாடிவாசல் உணவகம்’.
இத்தனை அழகியல் ஒருசேர அமைந்ததற்குக் காரணம் உணவகத்தின் உரிமையாளரே ஒரு ஆர்கிடெக். ஆம், ஆர்கிடெக்கான ராஜசிவசுந்தரின் ‘மாத்தியோசி’ ஐடியாவில் சகோதரர் மற்றும் நண்பருடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது இவ்வுணவகம்.
“என் பேரு ஜெகவீரநாதன். அண்ணன் ராஜசிவசுந்தர். பரமக்குடி தான் சொந்தஊர். கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் மதுரையில் வந்து செட்டிலாகிய கூட்டுக்குடும்பம் எங்களுடையது. கன்ஸ்டரக்ஷன் கம்பெனி தான் முதலில் துவங்கினோம். அப்படியே சின்ன சின்னதா சில ரீடெய்ல் ஷாப்களும் நடத்திவந்தோம். ரியல் எஸ்டேட் பிசினஸ் மந்தம் பிடிக்கத் தொடங்கிய போது, மாற்றுத்தொழில் தொடங்க எண்ணி பார்ட்னர் பாலாஜியுடன் சேர்ந்து ஆரம்பித்தது தான் வாடிவாசல்,” என்கிறார் வாடிவாசலின் ஒன் ஆப் தி உரிமையாளர் ஜெகவீரநாதன்.
2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட உணவகத்திற்கான துவக்கப்புள்ளி ஜல்லிக்கட்டு போராட்டமே. மாநிலமெங்கிலும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் களைக்கட்டிய சமயத்தில், உணவினை சமைத்தும், உதவுவோர்களிடமிருந்து உணவினை பெற்றும் மதுரையில் போராடிய தோழர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார் ஜெகன் அண்ட் கோ. அதன் தாக்கத்தால் உணவகத்திற்கு ‘வாடிவாசல்’ என்று பெயரிட்டுள்ளனர்.
பெயருக்கு ஏற்றார் போல் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், கிராமிய சூழலில் உணவகத்தினை அமைக்கத் தீர்மானித்துள்ளனர்.
“நாங்கள் அடிப்படையிலே உணவு விரும்பிகள். ஆனா, நாங்க எதிர்பார்த்த சூழலில் அமைந்த உணவகம் மதுரையில் எதுவும் இல்லை. எங்களது எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்குமோ அந்த மாதிரி ஒரு உணவகம் திறக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். உணவகத்திற்கான வடிவமைப்பை தயாரித்தபின், அதனை செயல்படுத்த நிறைய இடங்கள் தேடி அலைந்தோம்.
பனைமரங்களை வெட்டக்கூடாது என்ற சட்டம் உள்ளது. அதனால், பட்டு போகி விழுந்த பனைகளை தேடினோம். லாரி எடுத்துக் கொண்டு 3 நாட்கள் மானாமதுரை, பரமக்குடி முழுவதும் சுற்றி திரிந்து 20 பனைகளை சேகரித்து அவற்றை குடில்களுக்கு தூண்களாக்கினோம். மேற்கூரை வேய 10 அடி உயர மலைப்பகுதியில் விளையும் மஞ்சம்புற்களை 3 லாரியில் கிருஷ்ணகிரியிலிருந்து கொண்டுவந்து, அங்கிருந்தே கூரை வேய ஆட்களையும் கூட்டிட்டு வந்தோம்.
தீம் சார்ந்திருக்க ஒரு காளைச் சிலை அமைக்கலாம் என்று திட்டமிட்டோம். தெர்மாக்கோலிலே காளைச் சிலையை, கோயில் சிற்பங்களுக்கு வண்ணம் பூசும் கலைஞர் ஒருவர் ஸ்பெஷலாக செய்து கொடுத்தார். அவரே, கரலாக்கட்டை ஒன்று தெர்மாக்கோலில் டூபிளிகேட் செய்யலாம் என்று ஐடியா கொடுத்தார். அதன்படி, ஒரிஜினல் கரலாக்கட்டை, டூபிளிகேட் ஒன்றும், இளவட்டக்கல் ஒன்றும் செய்தோம்.
”சாப்பிடவர பெரியவங்களுக்கும் ஃபன் ஆக்டிவிட்டி இருக்கணும்னு நினைச்சு தான் பண்ணோம். அதே மாதிரியே ஓட்டலுக்குவர எல்லாருமே இளவட்டக்கல் தூக்கி என்ஜாய் பண்ணாங்க,” என்று அவர்கள் பார்த்து பார்த்து பலரிடமும் ஆலோசனைக் கேட்டு கட்டியதை ரசித்து ரசித்து கூறினார்.
வங்கி லோன், நகைக் கடன், இடம் விற்று பெரும் முதலீட்டை பல வழிகளில் திரட்டி, 30 லட்ச ரூபாயுக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். எச்செயலுக்கும் நெகட்டிவ் கருத்தை முன்வைப்பவர்கள் இருப்பது சகஜமே. அத்தனை அழகியலுடன் கட்டப்பட்ட வாடிவாசல் உணவகத்தின் கட்டமைப்பை முன் நிறுத்தியும் எதிர்மறையான கருத்துகள் வந்துள்ளன.
“மதுரையின் மெயினான இடங்களில் ஒன்றான அண்ணாநகரில் இடம் கிடைத்தும். அதில், குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்காமல், நிறைய இருக்கை வசதிகளை அமைத்திருக்கலாம்னு சொன்னாங்க. அதுவும் சரி தான். ஆனா, மதுரையில் எண்டர்டெயின்மென்ட் இடங்கள் பார்த்தா ரொம்ப குறைவு. ஓட்டல் போகுறதையே அவுட்டீங்காக பிளான் பண்ணி வருவாங்க. அவங்களுக்கு முழு அனுபவத்தை கொடுக்கும் முயற்சில் தான் நாங்கள் துவங்கினோம்,” என்றார்.
ஓட்டலின் தோற்றத்திற்காக எடுத்துக் கொண்ட அதே மெனக்கெடல்களை மெனு கார்ட் வடிவமைப்பதிலும் காட்டியுள்ளனர். ஓட்டல் மெனுக்களில், மெயின் டிஷ், சைடு டிஷ் என்று பிரித்து தலைப்பிடும் இடங்களில் எல்லாம் சினிமா பட ஃபேமஸ் கவுண்டர்களை தலைப்பாக வைத்துள்ளனர்.
அப்படி, ‘சோறு - சோறு, குழம்பு- குழம்பு’ என்ற பகுதியில், சோறு, குழம்பு, ரசம், மோர் உள்ளிட்ட ஐட்டங்களும், ‘ஃபிகர் முக்கியமா பீசு முக்கியமா’ என்ற பகுதியில் பிரியாணி வகைகளும் வரிசைக்கட்டுகின்றன. ‘பொங்கி பொறிச்சது’ என்ற பெயரில் பிரைடு ரைஸ் வகைகள், ‘சாத்வீகம்’ பிரிவில் மிக்ஸடு வெஜ் கர்ரி, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் வெஜிடபிள் உள்ளிட்ட சைவ வகைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முதலில் ஓட்டலுக்கு வரும் எவரும் மொத்த மெனு கார்டையும் வாசித்த பின்னரே, ஆர்டர் கொடுக்க வைக்கிறது மெனு கார்டின் கான்செப்ட்.
“இந்த மெனு கான்செப்ட் நிச்சயம் மக்களுக்கும் புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் என நினைத்தோம். அதேபோல், தொடங்கிய போது மெனு கார்டின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரலாக ஷேராகியது,” என்றார்.
கான்செப்ட்டுக்கு மட்டுமன்றி, உணவுகளின் சுவைக்கும் முதல் முக்கியத்துவம் அளித்து நோ அஜினோமோட்டா, வீட்டம்மாக்கள் அரைத்த மசாலாக்கள், சுத்தமான செக்கு எண்ணெய், கொண்டு சமைக்கின்றனர். நாட்டுமாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து தயிரெடுத்துக் கொள்கின்றனர். அவருடைய அம்மா மற்றும் ஆச்சியின் வழிகாட்டுதலில் முக்கியமான டிஷ்களை அவருடைய சித்தியே சமைக்கிறார்.
தொடக்கத்தில் பிராய்லர் கோழி, புரோட்டோக்களை தவிர்த்து மெனு டிசைன் செய்துள்ளனர். ஆனால், மதுரையில் புரோட்டா இல்லாமல் ஓட்டல் தொழில் செய்வது கடினம் என்பதை உணர்ந்த பின், கஸ்டமர்களுக்கு இரண்டாம் சாய்சாக கொடுத்துள்ளனர். ஓட்டலின் வெளிப்புறத்தில் இளநீர், பழச்சாறு, கருப்பட்டி கலந்த ஜூஸ் ஷாப் ஒன்றை நிர்வகித்து வருகின்றனர். மனம் விரும்பி, அபராத உழைப்பிட்டு ஒரு தொழிலை செய்கையில், அத்தொழிலும் நமக்கு நிச்சயம் நியாயம் செய்யும். வாடிவாசலின் முதல் மாத பிசினசே டாப் கியரில் சென்றது.
“எந்த ஓட்டல் புதிதாக தொடங்கினாலும் எல்லோருக்குமே அந்த ஓட்டலில் டேஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அதனால், முதல் மாதத்தில் ஓட்டலை தேடி வந்த கட்டுக் கடங்காத கூட்டத்தை பார்த்து எந்தவொரு அடுத்தகட்ட முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. தீபாவளி முடிந்தபின் வரும் மந்தநிலை மாதத்தை கடக்கும் வரை ஒவ்வொரு நாளும் எங்களது படிப்பினை நாட்களாகவே கருதிக்கொண்டோம்.
இன்று வரை அந்த முதல் மாதத்தில் வந்த கஸ்டமர்களின் எண்ணிக்கையை தொட முடியவில்லை. ஆனால், அவர்களில் 40% பேர் எங்களது ரெகுலர் கஸ்டமர்கள் ஆகிவிட்டனர்,” என்று அவர் கூறுகையிலே அவர்கள் வகுத்த திட்டத்திலிருந்த தெளிவு வெளிப்பட்டது.
முதல் கிளையில் கிடைத்த பட்டறிவால், அடுத்த எட்டே மாதங்களில் விளக்குத்தூணில் மற்றொரு கிளையையும் தொடங்கி வெற்றிகரமாய் நடத்தி வருகின்றனர்.
“ஓட்டல் தொழில் பொறுத்தவரை தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. சாப்பாட்டு வீணாகாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு குறித்த நேரத்தில் உணவுகளை தயாரிப்பது சவாலாக உள்ளது. இந்த ஓட்டலுக்குச் சென்று தான் இன்று சாப்பிட வேண்டும் என்று கஸ்டமர்கள் விரும்பும் பிராண்ட் ஆக நிலைக்க 4 ஆண்டுகளுக்கு மேலாகும். அதற்காக, ‘உணவின் ருசியில் மாற்றமே இருக்காது’ என்ற அளவுக்கு எங்களைத் தயார்படுத்தி வருகிறோம்.
”தொழிலில் நிலைத்து நிற்கவே அதிகம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் அண்ணாநகரில் துவங்கிய போது, அந்த சாலையிலிருந்த ஒரே ஓட்டல் எங்களுடையது. இன்று 60 ஓட்டல்கள் முளைத்துள்ளன. போட்டிகள் ரொம்பவே அதிகம். இதுவரை அண்ணாநகர் கிளையில் வார நாட்களில் 60 பில்களும், வீக்கெண்டில் 120 பில்களும் பதிவாகி வருகின்றன,” என்றார்.
இரு ஓட்டல்களுக்கு மத்தியில் ‘கிராமிய டிரிப்’ என்ற பெயரில், தென்னந்தோப்புக்குள் பம்ப் செட் குளியலுடன் குடும்பத்துடன் நாட்டுக்கோழி சாப்பாட்டை உண்டு வரும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். “சிவகங்கை சாலையில் பூவந்தி எனும் கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து ‘கிராமிய டிரிப்’ என்ற கான்செப்ட்டை கொண்டு வந்தோம். நிறைய பேருக்கு தோப்புக்குள்ள பம்ப் செட்டில் குளித்து, சாப்பிடனும்னு விருப்பம் இருக்கும்.
”வீக்கெண்ட் என்றாலே மால், சினிமானு மாறிபோகிய சமயத்தில், இப்போ உள்ள தலைமுறையினருக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் கிராமிய டிரிப் செயல்படுத்தினோம். தோப்பில் 6 நாட்டு பசுமாடுகள், 30 - 40 ஆடு, நாட்டுக்கோழிகள் எல்லாம் வளர்க்கிறோம். ஒரு குடும்பம் புக் பண்ணாங்கன்னா, நாட்டுக்கோழிகளை சமைத்து பரிமாற ஆட்கள் இருக்கிறார்கள். பம்ப் செட்டில் குளித்து, தோப்புக்குள் விளையாடி பொழுதைக் கழிக்கலாம்” என்றார்.
உணவுத் துறைக்குள் அடி எடுத்து வைத்த ஒரு ஆண்டுக்குள்ளே, மதுரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள வாடிவாசலுக்கு இயக்குனர் தங்கர் பச்சன், அமீர் மற்றும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் போன்ற செலிபிரிட்டி கஸ்டமர்களும் உண்டு.
“நண்பர்கள் உட்பட பலர் பிரான்சைஸ் முறையில் வேறு மாவட்டங்களில் உணவகத்தை துவங்க விருப்பம் தெரிவிக்கின்றனர். பிராண்டிங்கில் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காகிக் கொண்டு அடுத்த முடிவு எடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளோம். இப்போது, ராம்நாடு மற்றும் சென்னையில் கிளைகளை துவங்குவதற்கான வேலையில் இறங்கியுள்ளோம்,” என்று எதிர்கால கனவுகளோடு கூறி முடித்தார் அவர்.
மதுரை பக்கட்டு போனா ஜாலியா வாடிவாசலுக்கு போயிவாருங்களேன்!!