பிச்சையெடுத்தே ரூ.7.5 கோடி சொத்து: மும்பையில் வாழும் உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்!
உலகிலேயே மிகவும் பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்ற நபர். இவரது சொத்து மதிப்பைக் கேட்டு தலை சுற்றிப் போய் கிடைக்கின்றனர் மக்கள்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை, நன்றாக படித்தவர்கள், பணக்காரர்கள் என பல விசயங்களில் உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்த நம் நாடு, இப்போது வித்தியாசமான ஒரு முதலிடத்தால் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
ஆம், 'உலகிலேயே நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர்' இந்தியாவில்தான் வசித்து வருகிறார் என்பதுதான் அது. பணக்கார பிச்சைக்காரர் என்றதும் ஏதோ லட்சங்களில் அவர் சொத்து சேர்த்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு. அவரது லெவலே வேறு.
கோடிகளில் சொத்து சேர்த்துள்ள அவரது குழந்தைகள் மிகப் பெரிய கான்வெண்ட்டில் படித்துள்ளனர். இன்னும் அவரது சொத்து விபரங்களைக் கேட்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மும்பை பிச்சைக்காரர்
பல கோடிகளுக்கு அதிபதியான அந்த பிச்சைக்காரரின் பெயர் பாரத் ஜெயின். கடந்த 30 ஆண்டுகளில் நீங்கள் மும்பைப் பகுதியில் ரயிலில் சென்றிருந்தால் கட்டாயம் அவரை பார்த்திருப்பீர்கள். ஏனெனில், அங்குள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்தான் இவர் யாசகம் கேட்டு வருகிறார்.
சமீபகாலமாக இவரது நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த சிலர், இவரை பின்தொடர்ந்து கண்காணித்த போதுதான், பாரத் ஜெயின் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பது தெரியவந்துள்ளது.
இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி எனக் கூறப்படுகிறது. மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பரேல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் பாரத் ஜெயின். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் அவருக்கு இரண்டு வீடுகள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.1.2 கோடி எனவும் கூறப்படுகிறது. வெளியில் சென்று வர ஒரு சொகுசு காரும் அவரிடம் உள்ளதாம்.
2 கடைகளுக்குச் சொந்தக்காரர்
பிச்சையெடுத்து சேர்த்த பணத்தில் தானேவில் சொந்தமாக இரண்டு கடைகளையும் நடத்தி வருகிறாராம் பாரத் ஜெயின். அதில் ஒரு கடைக்கு வாடகையாக தலா ரூ.30 ஆயிரம் இவருக்கு மாதந்தோறும் வருமானம் வருகிறதாம்.
இது தவிர நாளொன்றுக்கு தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின், அதன் மூலம் மட்டும் சராசரியாக ரூ.2500 வரை சம்பாதித்து வருகிறாராம். இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ.7 கோடியே 50 லட்சம் என தகவல்கள் கூறுகின்றன.
லட்சக்கணக்கில் மாத வருமானம் கிடைப்பதால், கோடீஸ்வரராக உயர்ந்த பின்னும் பிச்சையெடுப்பதை கைவிட மறுக்கிறாராம் இவர். அவரது மனைவியும், பிள்ளைகளும் பலமுறை சொல்லியும்கூட கறாராக நோ சொல்லி விட்டாராம். கடைசி காலம் வரை பிச்சையெடுத்தே வாழ வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக, சிறுவயதில் படிக்க முடியாமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பாரத் ஜெயின், தனது பிள்ளைகளை மும்பையில் உள்ள மிகப்பெரிய கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். அவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுவும் ஒரு தொழில்!
பாரத் ஜெயின் மட்டுமல்ல இந்தியாவில் பலர் பிச்சையெடுப்பதையே லாபகரமான தொழிலாக மாற்றி கோடீஸ்வர பிச்சைக்காரர்களாக இருந்துவருகின்றனர். கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது 16வது வயதிலிருந்து பிச்சை எடுப்பதை ஒரு வேலையை செய்து வருகிறார். அப்போதிலிருந்து பிச்சை எடுத்து லட்சக்கணக்கான ரூபாயை சேர்த்துள்ளதாகவே ஏற்கனவே ஊடகங்களில் செய்தி வெளியானது.
அதேபோல், மும்பையின் சாலைகளில் பிச்சையெடுத்து வரும் கீதா சார்னி என்பவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருப்பதாகவும், அதில் தன் சகோதரனுடன் வசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. கீதா பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,500 சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர், இன்று சுந்தர் பிச்சை வீட்டை வாங்கியது எப்படி?