ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர், இன்று சுந்தர் பிச்சை வீட்டை வாங்கியது எப்படி?
ஒரு காலத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீட்டை, ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நபர் வாங்கியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?... உழைப்பும், விடாமுயற்சியும் எதையும் சாத்தியமாக்கும் என்பதை நிரூபித்து காட்டியுள்ள சென்னை இளைஞரின் தன்னம்பிக்கையூட்டும் கதை இது...
ஒரு காலத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த பூர்வீக வீட்டை, ஒரு காலத்தில் ஒரு வேளை உணவிற்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இளைஞர் வாங்கியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
உழைப்பும், விடாமுயற்சியும் எதையும் சாத்தியமாக்கும் என்பதை நிரூபித்து காட்டியுள்ள சென்னை இளைஞரின் தன்னம்பிக்கையூட்டும் கதை இது...
சுந்தர் பிச்சை வசித்த வீடு:
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை இளம் வயதில் பெற்றோருடன் வசித்து வந்த சென்னை அசோக்நகரில் உள்ள அவரது இல்லம் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டில் தான் சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூருக்கு செல்லும் முன்பு வரை வசித்து வந்துள்ளார். அவர் பள்ளிக்குக் கூட இந்த வீட்டில் இருந்து தான் சென்று வந்துள்ளார்.
அப்படிப்பட்ட விவிஐபி பேக்ரவுண்ட் கொண்ட 1 1/2 கிரவுண்ட் இடத்தை, ஒரு காலத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த இளைஞர் ஒருவர் தற்போது வாங்கியிருக்கிறார். வறுமையில் வளர்ந்து இன்று பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் மணிகண்டன் என்பவர் தான் சுந்தர் பிச்சையின் வீட்டை கோடிகளைக் கொடுத்து வாங்கியுள்ளார்.
யார் இந்த மணிகண்டன்?
மணிகண்டன், தென்காசியில் உள்ள விவசாயக் குடும்பத்தில் 10 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர். வறுமையான குடும்பச் சூழ்நிலை காரணமாக சில சமயங்களில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் 1992ம் ஆண்டு கையில் வெறும் 60 ரூபாயுடன் சென்னை வந்தடைந்துள்ளார். வெறும் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த மணிகண்டன, படிப்படியாக பல தொழில்களை செய்து தற்போது பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக உயர்ந்து நிற்கிறார்.
எந்த அளவிற்கு என்றால் உலகமே போற்றும் தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
மணிகண்டனுடன் தினந்தோறும் நடைபயிற்சிக்கு செல்லும் நண்பர் ஒருவர் தான் அசோக் நகரில் சுந்தர் பிச்சையின் வீடு விற்பனைக்கு வர உள்ளதாக கூறியுள்ளார். முதலில் இதைக் கேள்விப்பட்ட போது மணிகண்டன் நண்பர் தன்னிடம் விளையாடுகிறார் என நினைத்துள்ளார். ஆனால், மறுநாளே அந்த நண்பர் மணிகண்டன் சுந்தர் பிச்சையின் பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் பெற்றோர் அவரிடம் நடந்து கொண்டது குறித்து கூறுகையில்,
“அவர்களின் பணிவான அணுகுமுறையைக் கண்டு வியப்படைந்தேன். சுந்தர் பிச்சையின் அம்மா அவர் கையால் எனக்கு ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார். அவருடைய தந்தை முதல் சந்திப்பிலேயே எனக்கு ஆவணங்களை வழங்கினார். உண்மையில், அவரது தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார், மேலும், ஆவணங்களை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் செலுத்தினார்," என்கிறார்.
பல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுந்தர் பிச்சை வாழ்ந்த வீட்டை வாங்க போட்டி போட்டுள்ளன. இருப்பினும், முதல் சந்திப்பிலேயே மணிகண்டனின் அணுகுமுறை பிடித்துப் போனதால் சுந்தர் பிச்சையின் பெற்றோர் அதனை அவருக்கு கொடுக்க முன்வந்துள்ளனர்.
அதுவும் சந்தை மதிப்பில் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, மணிகண்டனுக்கு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். வீட்டின் ஆவணங்களை மணிகண்டனிடம் ஒப்படைக்கும் போது சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சை கண்ணீர் வடித்த உருக்கமான தருணமும் அரங்கேறியுள்ளது.
"சுந்தர் பிச்சை நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார், அவர் வாழ்ந்த வீட்டை வாங்கியது என் வாழ்நாளிலேயே பெருமைக்குரிய சாதனையாகும்.”
கட்டிடத்தொழிலாளியாக சென்னையில் வாழ்க்கையை ஆரம்பித்த நபர் ஒருவர், இன்று உலகின் முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்த சிஇஓ வாழ்ந்த வீட்டை கோடிக்கணக்கில் செலவழித்து வாங்கியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
31.17 ஏக்கர் பரப்பளவு; 2,400 கோடி ரூபாய் மதிப்பு - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீடு!