2,000 கலைஞர்களின் ஆசான்; ஆண்களின் கோட்டையான 'யக்சகானா' கலையை முன்னெடுக்கும் பெண்!
ஆண்களின் கோட்டையாக இருந்த யக்சகானா நடனக்கலையின் ஒரு பெண் கலைஞராக எண்ணற்ற மேடையேறியதுடன், 2000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கலையினை கற்றுக் கொடுத்து கலையினை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றி வருகிறார் பிரியங்கா மோகன்.
ஆண்களின் கோட்டையாக இருந்த யக்சகானா நடனக்கலையின் ஒரு பெண் கலைஞராக எண்ணற்ற மேடையேறியதுடன், 2,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கலையினை கற்றுக் கொடுத்து கலையினை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்காற்றி வருகிறார் பிரியங்கா மோகன்.
பிரியங்கா கே மோகனின் குழந்தைப் பருவம், கடலோர கர்நாடகாவின் பாரம்பரிய நடன நாடகமான யக்சகானாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது.
ஆம், பெங்களூரில் பிறந்த அவர், இளம் வயதிலிருந்தே யக்சகானா கலைக்கு மத்தியில் வளர்ந்து வந்தார். ஏனெனில், அவரது வீடு யக்சகானா கலைஞர்களின் மையமாக இருந்தது. அவரது தந்தை, கே மோகன், 1970-களின் முற்பகுதியில், யக்சகானா வேரூன்றி பிரபலமடைந்திருந்த தட்சிண கன்னடாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.
பாரம்பரிய நடன-நாடக வடிவமான யக்சகானா கலை, நடனம், இசை, பாடல், உரையாடல் மற்றும் வண்ணமயமான ஆடைகளால் ஒருங்கிணைந்தது. பக்தி மற்றும் இதிகாச புராணங்களைச் சுற்றியுள்ள கதைகளை அடிப்படையாகக் கொண்டது. தீமைக்கு மேல் நன்மை என்ற பொதுவான செய்தியைக் கொண்டுள்ளது.
யக்சகானா கலையினை ஊக்குவித்துவந்த குடும்பத்தைச் சேர்ந்தவரான கே மோகன், தக்ஷிண கன்னடத்தில் இருந்து கலைஞர்களை டவுன் ஹால், ரவீந்திர கலாஷேத்ரா மற்றும் நகரின் பிற கலாச்சார மையங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.
பின், 1981ம் ஆண்டில், யக்சகானை பிரபலப்படுத்தவும், கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவர் முறையாக "யக்ஷதேகுல" என்ற அமைப்பை பதிவுசெய்தார்.
"சிறுவயதில் 2 அறைகளைக் கொண்ட எங்கள் வீட்டில் எந்த நேரத்திலும் 20 முதல் 30 கலைஞர்கள் இருப்பார்கள். அம்மாவும் பாட்டியும் அவர்களுக்கு சமைப்பார்கள். அப்படி, பல இதிகாச கதைகளுக்கு மத்தியில் வளர்ந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
ஆரம்பத்தில் ஆர்வமின்மை; பிறகோ, 2000 பேருக்கான ஆசான்!
பிரியங்காவின் தந்தைக்கு யக்சகானாவை முறையாக கற்க வாய்ப்பு கிடைக்காததால், அவரது மகள்கள் இருவரும் முறைப்படி கலையை கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
யக்சகானாவில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமிருந்ததால், பலர் அவரது எண்ணத்தை மறுத்தனர். இருப்பினும், அவரது மகள்கள் கலைஞர்களாக மாறாவிட்டாலும், யக்சகானாவை ஏதாவது ஒரு வழியில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
எட்டு வயதில், மோகன் முறையாக யக்சகானைக் கற்கத் தொடங்கினார். குழந்தைகளின் நிகழ்ச்சியான மக்கலமேளாவில் முதல் தொகுதி மாணவர்களுடன் அவர்கள் நிகழ்ச்சி செய்தனர். சகோதரிகள் இருவரும் பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பு, 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் பிறகு படிப்பு மற்றும் ஒததிகைகள், பின்னர் நிகழ்ச்சிகள் என பம்பரமாய் சுழன்று நகர்ந்தன.
"முதலில் நானும், என் சகோதரியும் கற்க ஆரம்பித்தோம். நாங்கள் யக்சகானாவை கற்பது எல்லோருக்கும் தெரிய வந்தது. அக்கம்பக்கத்தில் இருந்து மற்ற குழந்தைகளும் சேர்ந்தனர். எனது தந்தை மக்கள் கற்க ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கலையினை ஊக்குவிப்பதற்காகவும் 25 ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்காமல் கற்று கொடுத்தார்," என்று நினைவு கூர்ந்தார்.
இன்ட்ரோவெர்ட் ஆன பிரியங்கா, தொடக்கத்தில் கலையினை கற்றுக் கொள்வதில் சிரமத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும், அக்கதாபாத்திரமாகவே மாறி, அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். அவரது சகோதரியும் யக்சகானாவில் சிறந்து விளங்கியதால், அவருக்கு வேறு வழியில்லாமல் போனது. சில சமயங்களில், கலைஞர்கள் யவரேனும் வெளியே சென்றுவிட்டால் அந்தஇடத்தை நிரப்பும் பொறுப்பு பிரியங்காவை சேரும்.
அந்த சமயத்தில், கலையின் மீதான ஆர்வமின்மை மற்றும் 10ம் மற்றும் 12ம் வகுப்பை முடிக்க படிப்பில் கவனம் செலுத்துவதற்காக அவருக்கு பிரேக் கிடைத்தது. அந்த இடைவெளி கலையை பற்றிய உணர்தலுக்கு வழிவகுத்தது.
"படிப்பில் நாட்டம் செலுத்த எனக்கு கிடைத்த பிரேக், பல புரிதல்களை ஏற்படுத்தியது. கலையை மதிப்பிட ஆரம்பித்தேன். கலை குறித்த பார்வை மாறியது. மேலும், முழு கவனத்துடன் கலையினை கற்றுக் கொள்ளவும் விரும்பினேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, எங்களது அமைப்பில் இருந்த மூத்த கலைஞர் ஒருவரிடம் கலையை கற்கத் தொடங்கினார்," என்று பகிர்ந்தார்.
ஒரு கலைஞனாக தன்னை நிலைநிறுத்துவது அவருக்கு கடினமாக இருந்தது. ஆனால், கற்பித்தல் முற்றிலும் வேறுபட்ட உலகமாக இருந்தது. சுய சந்தேகம் இருந்தபோதிலும், அவர் 2000ம் ஆண்டில் அவரது 19 வயதில் யக்சகானா கற்பிக்கத் தொடங்கினார். கலை மற்றும் கல்வியின் மீதான அவரது ஆர்வத்தை ஒருங்கிணைக்க "டீச் ஃபார் இந்தியா" நிறுவனத்தில் பணியையும் மேற்கொண்டார்.
இதுவரை, மோகன் 2,000 பேருக்கு மேற்பட்டோருக்கு கலையை கற்பித்துள்ளார். மேலும் இத்துறையில் உள்ள சில பெண் குருக்களில் பிரியங்காவும் ஒருவர். இருப்பினும், சமூகம் ஒரு பெண் குருவை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் பிடித்தது. ஆனால், அவரது தந்தையின் காரணமாக அவரது பயணம் எளிதாகியது. ஒரு கலைஞராக, அவர் சுபத்ரா, துரோணர், அபிமன்யு மற்றும் பலவிதமான ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
"ஒரு பெண் தன்னை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டும். 50-60 குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்தபோது தான் திருப்புமுனை ஏற்பட்டது. இதற்குப் பிறகு, கலைஞர்களின் சமூகத்திலிருந்து என்னை நோக்கிய பார்வையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டேன்," என்றார்.
எல்லை மீறாமல் புதுமை படைக்கும் யக்சகானா!
கோயில்களில் கலை கச்சேரிகள் நிகழ்த்தப்படும் போது, சில சடங்குகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றபடுகின்றன. அது போன்ற சமயங்களில் ஒரு பெண் கலைஞர் மேளாவின் ஒரு பகுதியாக இருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று மோகன் விரிவாகக் கூறுகிறார். இருப்பினும், சடங்குகளுக்கு வெளியே, கலை நிறைய புதுமைகளை கண்டுள்ளதாக தெரிவித்தார்.
"கோவிட்-க்கு முந்தைய நாட்களில் சமூக காரணங்களைப் பற்றி பேச யக்சகானாவைப் பயன்படுத்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் யக்ஷதேகுலம் இணைக்கப்பட்டது. எச்1என்1 பரவியபோது, கிராமங்களுக்குச் சென்று அதைப் பற்றி பேசினோம். சமீபத்தில், 60 ஆண்டுகால ஜிஎஸ்டி பற்றி பேச வருமான வரித்துறை எங்களை அணுகியது. யக்ஷகானாவில் புதுமை படைத்தவர்களில் எனது தந்தையும் ஒருவர்," என்று பெருமையுடன் பகிர்ந்தார்
யக்ஷகுலம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 7,000 நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், ஒவ்வொரு முறையும், அமைப்பாளர்கள் கட்டணத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
ஆனால், காந்தாரா திரைப்படம் வெளியாகி கலைஞர்களுக்கு உதவ வேண்டிய ஒரு மாற்றத்தையும் அதன் தேவை மற்றும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. யக்சகானா மட்டுமின்றி, தற்போதைய தலைமுறையினருக்கு மிகவும் பொருத்தமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் பல்வேறு கலை வடிவங்களை உருவாக்க கலைஞர்களின் கூட்டான “துவரிதாவை” உருவாக்குவதில் பிரியங்கா தீவிரமாக கவனம் செலுத்துவதற்காக அவரது முழுநேர வேலையையும் கைவிட்டுள்ளார்.
"நாங்கள் கலை வடிவத்தில் கவனம் செலுத்த விரும்புகிறோம். அதன் மதிப்பை அதிகரிக்க விரும்புகிறோம். மேலும், இளைஞர்கள் அதை முழுநேரமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்குள் எவ்வாறு ஆர்வத்தை ஏற்படுத்துவது என்பதைப்பற்றி சிந்தித்து வருகிறோம். என் தந்தைக்கும் எனக்கும் நீண்ட கால இலக்கு, கலையினை கற்க மற்றும் ஆராய்ச்சியில் மக்கள் மூழ்குவதற்கான ஒரு மையத்தை நிறுவுவதாகும்," என்று கூறி முடித்தார் பிரியங்கா.
கர்நாடக இசைக்கான புதிய குறியீடுகள்;இந்திய இசையில் புரட்சி செய்யும் ரமேஷ் விநாயகம்!