உயர் பதவி அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பிய Meta - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
உலகிலேயே முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம் பற்றிய தகவல் தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம் பற்றிய தகவல் தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முதலே மெட்டா தீவிர பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.
மெட்டா இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குநர் அவினாஷ் பந்த் மற்றும் மீடியா பார்ட்னர்ஷிப்களின் இயக்குநர் மற்றும் தலைவரான சாகேத் ஜா சௌரப் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது, வணிகம் மற்றும் செயல்பட்டு பிரிவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, “மார்ச் 2020ம் ஆண்டு முதல் மெட்டா இந்தியாவில் மார்க்கெட்டிங் இயக்குநராக பணியாற்றி வந்த அவினாஷ் பந்த், பிராண்ட் மேனேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், விளம்பர மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் திறமையானவராக விளங்கியுள்ளார். அதேபோல், 2018 முதல் மெட்டா இந்தியாவில் பணியாற்றி வரும், சாகேத் ஜா சௌரப் இந்தியாவில் உள்ள ஸ்டுடியோக்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஏஜென்சிகளுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றை திறம்பட கண்காணித்து வந்துள்ளார். இவர்களுடைய பணிநீக்கம் சந்தைப்படுத்துதல், தளப்பாதுகாப்பு, பொறியியல், நிரல் மோலாண்மை, பெருநிறுவன தொடர்பு, தனியுரிமை உள்ளிட்ட டஜன் கணக்கான வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12 மாதங்களில், மெட்டா நிறுவனம் இந்தியாவில் அதிக பணி நீக்கங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம், மெட்டா இந்தியாவின் இயக்குநரும் பார்ட்னர்ஷிப் தலைவருமான மணீஷ் சோப்ரா தனது பொறுப்பில் இருந்து விலகினார். கடந்த நவம்பரில், மெட்டா இந்தியாவின் தலைவர் அஜித் மோகன், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் போட்டி நிறுவனமான ஸ்னாப்பில் சேர பதவி விலகினார்.
வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் கடந்த ஆண்டு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இப்படி மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த இந்திய நிர்வாகிகள் பதவி விலகி வருவது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.