பகலில் படிப்பு; மாலை பாத்திரம் கழுவும் வேலை; இரவு கால் சென்டர்: மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஆட்டோ டிரைவர் மகள்!

By malaiarasu ece|13th Feb 2021
மன்யா சிங் மிஸ் இந்தியா 2020 அழகுபோட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கனவுகளை நிஜமாக்க உண்மையில் கடின உழைப்பு ஒன்றே பொதுமானது. நம்பிக்கையுடன் லட்சியத்தை நோக்கி பயணித்தால் போதும் நிச்சயம் ஒருநாள் உங்களால் லட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு உதாரணம் மன்யா சிங்.


ஆம்! ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகளான மன்யா சிங், அண்மையில் மும்பையில் நடைபெற்ற வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகுப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங்கின் குடும்பம், அவரது தந்தையின் ஆட்டோ தொழிலை நம்பியே இருந்தது. மன்யாவின் குழந்தை பருவம் என்பது மற்றவர்களைப் போல அழகாகவும், அமைதியாகவும் இருந்திருக்கவில்லை. போராட்டமும், கவலையும் நிறைந்ததாகவே இருந்தது. 


அவருடைய போராட்டம் என்பது உணவு மற்றும் இருப்பிடத்திற்கானதாக இருந்தது. தனது ஆரம்பக் காலங்களில் அவர், நிறையவே கஷ்டங்களை அனுபவித்தார். எத்தனையோ நாட்கள் சரியான உணவு இல்லாமலும், தூக்கம் இல்லாமலும் அவதிப்பட்டுள்ளார்.

மிஸ் இந்தியா

ஃபெமினா மிஸ் இந்தியா அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 2020ம் ஆண்டு மன்யாவின் பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தது. அதில் மன்யா அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது.


தனது 14 வயதில் மன்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தனது படிப்பை முடித்த அவர். பல்வேறு வேலைகளுக்குச் சென்று, இப்போது இருக்கும் இந்த இடத்தை அடைந்துள்ளார். அதற்கு அவருடைய கடின உழைப்பே காரணம் எனத் தெரிவித்திருந்தது.


அந்த பதிவில்,

“நான் உணவு மற்றும் தூக்கம் இல்லாமல் பல இரவுகளைக் கடந்திருக்கிறேன். மதிய நேரத்தில் பல மைல்கள் வெயில், மழையில் நடந்து சென்றிருக்கிறேன். இருப்பினும், என் கனவுகளைத் தொடர, என் ரத்தமும், வியர்வையும், கண்ணீரும் ஒன்றிணைந்து செயல்பட்டன. ஆட்டோ ஓட்டுனரின் மகள் என்பதாலேயே என் பதின்பருவத்தில் முழுவதும் வேலை செய்வதிலேயே கழிந்தது. இதனால் எனக்கு பள்ளியில் சேர ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னிடம் இருந்த உடைகள் அனைத்தும் கிழிந்த நிலையில் தான் இருந்தன. நான் பல நாட்கள் புத்தகங்களுக்காக ஏங்கினேன்.”

ஆனால் அதிர்ஷ்டம் எனக்கு ஆதரவாக இல்லை. இறுதியாக எனது பெற்றோர் சிறிய நகை ஒன்றை அடமானம் வைத்து எனது தேர்வுக் கட்டணத்தை செலுத்தினார்கள். நான் பட்டம் பெற வேண்டும் என்பதற்காக இதைச் செய்தார்கள்.

எனக்காக எனது அம்மா நிறையவே கஷ்பட்டார். அவர் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் நான் என்னுடைய 14வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அந்த கால கட்டத்தில் நான் பகலில் படிக்கச் சென்றுவிட்டு, மாலை நேரங்களில் பாத்திரங்களைக் கழுவும் வேலைக்கும், இரவில் கால் சென்டர் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.
மிஸ் இந்தியா
”ஆட்டோவுக்கு கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்த பல மைல் தூரம் நடந்தே சென்றிருக்கிறேன். நான் மிஸ் இந்தியா 2020 அரங்கில் இன்று நின்று கொண்டிருக்கிறேன். உங்கள் கனவுகளை தொடர நீங்கள் உறுதியுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை என் தந்தை, என் அம்மா, என் தம்பி மற்றும் இந்த உலகத்திற்கு உலகுக்கு உணர்த்தியிருக்கிறேன்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மன்யா இந்த பரிசுத் தொகையை தனது குடும்பத்திற்கு கொடுத்து உதவ விரும்புவதாகவும், மேலும் மாடலாகவே தனது வாழ்க்கையை தொடர விரும்பவுவதாகவும் தெரிவித்துள்ளார்.