Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தேர்தலுக்கு பிறகு உயரும் மொபைல் ரீசார்ஜ் கட்டணம்? - YS தமிழ் Explainer

தற்போதுள்ள கட்டணத்தில் சுமார் 15 முதல் 17 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் பேக் கட்டணத்துக்கான விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டண உயர்வு தற்போதுள்ள கட்டணத்தில் சுமார் 15 முதல் 17 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2019 மற்றும் 2021 இடையிலான காலகட்டத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை டெலிகாம் நிறுவனங்கள் உயர்த்தி இருந்தன. அதன் பிறகு, கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில் குறைந்த தொகை கொண்ட பேக்குகளை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Indian Telecom Industry

இந்திய டெலிகாம் சந்தை

உலக அளவில் இன்று அதிக டிமாண்ட் உள்ள சந்தைகளில் ஒன்று டெலிகாம். தொலைபேசி அழைப்பு தொடங்கி இணையதள இணைப்பு வரையில் அதன் சேவை நீள்கிறது. மக்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் அதன் வேகம் பல மடங்கு கூட்டியது. தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள, பணம் அனுப்ப/பெற, இணையதள சேவை, வீடியோ அழைப்புகள் என கையடக்க கணினியை போல மாறிவிட்டது மொபைல் போன்களின் பயன்பாடு. 

அதே நேரத்தில், உலக அளவில் டெலிகாம் சந்தையில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது இந்தியா. 2ஜி முதல் 5ஜி வரையில் டெலிகாம் நிறுவன சேவைகளை கோடான கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் என நான்கு நிறுவனங்கள் டெலிகாம் சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. இதில் அதிக பயனர்கள் அடிப்படையில் முன்னணியில் இருப்பது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான். 

குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை பரவலாக விரிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. உலக அளவில் 5ஜி சேவை பயன்பாட்டில் 14-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?

இந்திய டெலிகாம் சந்தையை இரண்டு வகையாக பிரிக்கலாம். அது ‘ஜியோவின் வரவுக்கு முன்’ மற்றும் ‘ஜியோவின் வரவுக்கு பின்’ என சொல்லலாம். ஏனெனில், இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 2016-க்கு ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு ஜியோவின் வருகை காரணமாக இருந்தது. ஜியோவின் வருகை காரணமாக ‘இன்டர்நெட் (டேட்டா) + அன்லிமிடெட் கால்ஸ் (தொலைபேசி அழைப்பு) + குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்)’ என அனைத்தையும் உள்ளடக்கி ‘ஆல் இன் ஒன் ரீசார்ஜ் பேக்’ என்ற முறை பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. 

சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இதே வகையிலான ரீசார்ஜ் பேக்கினை ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு அறிமுகம் செய்தன. அதே நேரத்தில், ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மொபைல் நெட்வொர்க் இன்கம்மிங் இணைப்பு துண்டிப்பு போன்ற நடைமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

லைஃப்டைம் இன்கம்மிங் வேலிடிட்டி எனச் சொல்லி விற்பனை செய்யப்பட்ட ப்ரீபெய்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு இது கசப்பான அனுபவத்தை தந்தது. இதற்கென குறைந்தபட்ச கட்டணத்தில் பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. நாட்கள் கடந்த நிலையில் அந்த குறைந்தபட்ச கட்டண பேக்குகளின் விலையும் ஏற்றம் கண்டன. 

கடந்த 5 ஆண்டு காலத்தில் 18 முதல் 20 சதவீதம் வரையிலான வளர்ச்சியை இந்திய டெலிகாம் துறை கண்டுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் முறை அதிகரிப்பு, இணையதள சேவை பயன்பாடு போன்றவை இதற்கு அடிப்படை காரணம். அதேநேரத்தில், இந்தியாவில் கடந்த 2022ல் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தபோதும் ரீசார்ஜ் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த சூழலில்தான்,

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரையில் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களிடமிருந்து டெலிகாம் நிறுவனங்கள் ஈட்டும் சராசரி வருவாய் கூடும் என தெரிகிறது. அந்த வகையில் ரூ.300 என்ற கட்டணத்தில் உள்ள ரீசார்ஜ் பேக்கின் விலை ரூ.351 என அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
Telecom

தற்போது பயன்பாட்டில் உள்ள பேக் விவரம் (ப்ரீபெய்டு)

இன்டர்நெட் + அன்லிமிடெட் கால்ஸ் + எஸ்எம்எஸ் இதில் அடங்கும் - ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ போன்ற நிறுவன பயனர்கள் ரூ.239-க்கு ரீசார்ஜ் செய்தால் ‘தினமும் 1.5 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ் + தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் வேலிடிட்டி’ பெறலாம். இதற்கு நாள் ஒன்றுக்கு பயனர் செலவிடும் தொகை ரூ.8.53. இதில் ஜியோவை தவிர மற்ற இரண்டு நெட்வொர்க் பயனர்களுக்கு சிறப்பு ஆஃபர் இருந்தால் மட்டுமே இந்த ரீசார்ஜை செய்ய முடியும். இல்லையென்றால் ரூ.265 (ஏர்டெல்), ரூ.269 (வோடபோன் ஐடியா) ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதற்கான பலன்கள் மாறும். 

ஜியோவில் குறைந்தபட்ச பேக் ரூ.209. இதன் மூலம் ‘தினமும் 1 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ் + தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் வேலிடிட்டி’ பெறலாம். இதற்கு ஆகும் செலவு ரூ.7.46. 

அளவான இன்டர்நெட் (மொத்தமாக 2ஜிபி) அன்லிமிடெட் கால்ஸ் + 300 எஸ்எம்எஸ் கொண்ட பேக் - ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் ரூ.179 பேக் உள்ளது. மொத்தமாக 2ஜிபி இன்டர்நெட் + அன்லிமிடெட் கால்ஸ் + 300 எஸ்எம்எஸ், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு பயனர் செலவிடும் தொகை ரூ.6.35. (ஜியோவில் இந்த வகை பேக் இல்லை). இதே போல 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.155 பேக் ஒன்றும் உள்ளது. அதற்கு தினமும் ஆகும் செலவு ரூ.6.45. 

இது தவிர வோடபோன் ஐடியா நெட்வொர்க்கில் ரூ.99 பேக் உள்ளது. அதில் ‘பேச பேச’ பைசா குறையும். 15 நாட்கள் வேலிடிட்டி. இதற்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.6.60. 

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரையில் ரூ.107 குறைந்தபட்ச ரீசார்ஜ் பேக் உள்ளது. இதில் சுமார் 4 மணி நேரம் அவுட்கோயிங் அழைப்பு மேற்கொள்ள முடியும். 35 நாட்கள் வேலிடிட்டி. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி நெட்வொர்க் பெருவாரியாக அறிமுகம் செய்யப்படவில்லை. இது தவிர பயன்பாட்டிற்கு பிறகு கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்டும் பயன்பாட்டில் உள்ளது.


Edited by Induja Raghunathan