ஜோத்பூரின் மசாலா வணிகத்தை உலகமெங்கும் மணக்கச் செய்யும் அம்மா மற்றும் 7மகள்கள்!
ஜோத்பூரைச் சேர்ந்த பகவந்தி மோகன்லால் ஆணாதிக்க மனோபாவத்தை தகர்த்தெறியும் வகையில் தனி ஆளாக ஏழு மகள்களை வளர்த்து ஆளாக்கி Spice Girls of India என்கிற மசாலா வணிகத்தை அவர்களது உதவியுடன் நடத்தி வருகிறார்.
ஜோத்பூரில் Spice Girls of India மிகவும் பிரபலம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் வெளிநாட்டவர்கள் இந்த பிராண்ட் மசாலாக்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
சர்வதேச பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் வலைப்பதிவர்களும் இந்த மசாலாக்களின் சிறப்பை வியந்து பாராட்டுகிறார்கள்.
இந்த மசாலாக்கள் மட்டும் தனித்துவமானதல்ல, இதன் பின்னணியில் இருக்கும் தொழில்முனைவோரும் தனித்துவமானவர்தான்.
பொதுவாக ஒரு பிராண்டின் வெற்றி என்பது ஒரு தொழில்முனைவரின் வெற்றியாகக் கருதப்படும். ஆனால் Spice Girls of India பிராண்டைப் பொருத்தவரை இது சாதாரண வெற்றியல்ல. சமத்துவத்தையும் மரியாதையையும் எதிர்நோக்கி ஒரு அம்மா நடத்திய போராட்டத்தின் வெற்றி. அதிலும் குறிப்பாக இவர் ஏழு பெண் குழந்தைகளின் அம்மா.
பகவந்தி மோகன்லால் அஜ்மீரில் பிறந்து வளர்ந்தவர். 22 வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. புகுந்த வீட்டினர் ஜோத்பூரில் இருந்தனர். 15,000 வரதட்சணைக் கொடுத்து பகவந்தியின் வீட்டினர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. பகவந்தியின் புகுந்த வீட்டினர் பெண் குழந்தைகளை சுமையாகவே கருதினார்கள். ஆண் வாரிசு இல்லை என்று கோபப்பட்டுள்ளனர்.
“அவர்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. குழந்தைகளுடன் வெளியேறிவிட்டோம்,” என்கிறார் பகவந்தி.
ஆரம்ப நாட்கள்
பகவந்தியின் கணவர் மோகன்லால், கிரானா ஸ்டோர் நடத்தி வந்தார். வீட்டில் பகவந்தி சமைக்கும் சாப்பாட்டை மோகன்லால் விரும்பிச் சாப்பிடுவார். சமையலுக்கு அவர் பயன்படுத்தும் மசாலாக்கள் பற்றி மோகன்லால் கேட்டுத் தெரிந்துகொண்டார். பகவந்தி, மோகன்லால் இருவரும் வெவ்வேறு வகையான மசாலாக்களைத் தாங்களே தயாரிக்கலாம் என தீர்மானித்தனர்.
மசாலா தயாரிக்கும் வேலை தொடங்கியது. இரவு வெகு நேரம் வரை கண்விழித்து வேலை செய்வார்கள். மறுநாள் காலை மோகன்லால் மெஹ்ரான்கர் கோட்டை அருகே ஒரு இடத்தில் தரைவிரிப்பை விரித்து மசாலாக்களை விற்பனை செய்யத் தொடங்கினார். இப்படியே சில நாட்கள் கடந்தன.
ஒருமுறை கோட்டையின் காவலர் ஒருவர் மோகன்லாலிடம் வந்தார். ஜோத்பூர் மன்னர் அழைத்து வரச் சொன்னதாகவும் உடனே வருமாறும் மோகன்லாலிடம் தெரிவித்துள்ளார்.
“என் கணவர் பயந்துவிட்டார். ஆனால் மன்னர் எங்களைப் பாராட்டத்தான் அழைத்தார் என்பது பிறகு தெரியவந்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் எங்களிடம் மசாலாக்களை வாங்கியுள்ளார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே மன்னருக்கு இதுபற்றி கடிதம் எழுதியுள்ளார். நகருக்கு பெருமை சேர்த்ததாகக்கூறி மன்னர் எங்களைப் பாராட்டினார். என் கணவருக்கு மெஹ்ரான்கர் கோட்டையிலேயே ஒரு பகுதியை 6,000 ரூபாய்க்கு வாடகைக்குக் கொடுத்தார்,” என்று அந்த சம்பவத்தை பகவந்தி நினைவுகூர்ந்தார்.
மோகன்லால் பகலில் மசாலா கடையில் விற்பனை செய்தார். மாலை நேரங்களில் தனது கிரானா ஸ்டோருக்கு சென்றார். இதுதவிர சுற்றுலாப் பயணிகளுடன் பேசுவதற்காக தினமும் 2 மணி நேரம் செலவிட்டு ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
விரைவில் இவர்களது மசாலாக்களை வெளிநாட்டவர்கள் விரும்பி வாங்க ஆரம்பித்தனர். அத்துடன் இந்த மசாலாக்கள் England Curry Organisation சான்றிதழ் பெற்றது.
பகவந்தி வணிகத்தைத் தொடர்ந்தார்
மசாலா வணிகம் சிறப்பாக நடந்து வந்த சமயத்தில் மோகான்லால் உயிரிழந்தார். பகவந்தி தன் வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டத்தை சந்திக்க நேர்ந்தது. கணவரின் இழப்பு; பெண் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு; கடையை தங்களிடம் ஒப்படைத்துவிடும்படி கேட்கும் புகுந்தவீட்டினர்; பகவந்தி சூழலை சமாளிக்க முடியாமல் திணறினார்.
”கடையை நான் தொடர்ந்து நடத்த முடிவெடுத்திருப்பதாக புகுந்த வீட்டினரிடம் கூறினேன். கோபப்பட்டார்கள். திட்டினார்கள். குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி கடையை கவனித்துக்கொள்ளமுடியும் எனக் கேள்வியெழுப்பினார்கள். எனக்கு என் குழந்தைகள் மட்டுமே முக்கியம் எனத் தோன்றியது. என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருந்தேன்,” என்கிறார்.
பகவந்தி தான் சொன்னதை செய்து காட்டினார். உஷா, பூனம், நீலம், நிக்கி, கவிதா, ரித்து, பிரியா ஆகிய ஏழு பேரும் பகவந்தியின் மகள்கள், இவர்கள் அனைவருமே நன்கு படித்தார்கள். பல மொழிகளைக் கற்றறிந்தார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து MV Spices நடத்தி வருகிறார்கள்.
அரைக்கப்பட்ட மசாலா பொருட்கள், அரைக்கப்படாத மசாலா பொருட்கள், டீ மற்றும் டீ மசாலா, கறி மசாலா என பல வகையான தயாரிப்புகளை விற்பனை செய்கிறார்கள்.
சில்லறை வர்த்தகக் கடை மூலம் விற்பனை செய்வதுடன் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் மசாலா 3$ முதல் 20$ வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் தவிர 12 பேர் வேலை செய்கிறார்கள். மாதம் 30 ஆர்டர் வரை பூர்த்தி செய்கிறார்கள்.
ஏழு மகள்களில் மூன்றாவது பெண்ணான நீலம் கூறும்போது,
“சிறு வயதில் என் அப்பாவும் அம்மாவும் நள்ளிரவைத் தாண்டியும் வெகு நேரம் மசாலாக்களை அரைப்பதைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் மசாலாக்களை கைகளாலேயே அரைக்கிறோம். போட்டியாளர் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தமாட்டோம். இதில் எங்களது தனித்துவம் அடங்கியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
பகவந்தி கூறும்போது,
”மோகன்லால் கடுமையான உழைத்து இந்த வணிகத்திற்காகப் பாடுபட்டார். அவரது முன்னெடுப்பை என்னால் கைவிடமுடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்துவேன். என் மகள்கள்தான் என் நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருக்கிறார்கள்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா