'ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்' - முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் கையெழுத்து!
தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கோவையில் பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை முதலமைச்சர் ஸ்டாலின் சிகாகோ நகரில் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை 500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் கையெழுத்தானது.
மேலும், Vishay Precision நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், Visteon நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், என மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சிகாகோ நகரில் 4.9.2024 அன்று ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் (Development & Global Support Centre) மற்றும் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலகின் முன்னணி காலணி மற்றும் விளையாட்டு ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான நைக்கி மற்றும் உலகின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான ஆப்டம் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக முதல்வர் முன்னிலையில், 5.9.2024 அன்று சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
லின்கன் எலெக்ட்ரிக்
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளையும் 42 உற்பத்தி இடங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை அலுவலகங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், லிங்கன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவபாதசுந்தரம் காஜா, முதுநிலை துணைத் தலைவர். கிரெக் டோரியா மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Vishay Precision
விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது, அங்கு ரெக்டிஃபையர்கள், டையோட்கள், MOSFET-கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின்தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்துள்ளது.
விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் ஷிர்வர் ஸ்டீபன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன் அவர்கள், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் ஒப்பந்தம்
விஸ்டியன் நிறுவனமானது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன்ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, விஸ்டியன் உலகளவில் 17 நாடுகளில் இயங்கி வருகிறது, இது பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது உலகளாவிய வாகன மின்னனுவியல் சப்ளையர் நிறுவனமாகும், இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது, இதில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள், டிஸ்ப்ளேக்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் ஆகியவை அடங்கும்.
விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், விஸ்டியன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர். சச்சின் லாவண்டே, துணைத் தலைவர் பிரான்சிஸ் கிம், இயக்குநர் ரியான் கசாரி மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர்.வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Edited by Induja Raghunathan