'$100 மில்லியன் சொத்து’ - எலைட் பட்டியலில் ஜெஃப் பெசாஸ், எலன் மஸ்க் உடன் இணைந்த முகேஷ் அம்பானி!
100 பில்லியன் டாலர்கள் அளவில் சொத்து மதிப்பு உயர்ந்ததால் கிடைத்த கெளரவம்!
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி இப்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் ஆகியோருடன் ’எலைட் கோடீஸ்வரர்கள் பட்டியலில்’ இணைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் 23.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்து ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்திருக்கிறது.
இந்த உச்சம் காரணமாக, 100 பில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைந்திருக்கிறார் முகேஷ்.
100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை கடந்த கோடீஸ்வரர்கள் இதுவரை 10 பேர் உள்ளனர். இந்தப் பட்டியலில் 11வது ஆளாக இணைந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர் குறியீட்டின் படி, அம்பானியின் சொத்து மதிப்பு இப்போது 100.6 பில்லியன் டாலராக உள்ளது. வாரன் பஃபெட், ஸ்டீவ் பால்மர், லேரி எலிசன், செர்ஜி பிரின், மார்க் ஜூக்கர்பர்க், லேரி பேஜ், பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலன் மஸ்க் ஆகிய பத்து பேர் இதுவரை எலைட் கோடீஸ்வரர்களாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே, மூன்று ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர் அளவில் ‘கிரீன் எனர்ஜி' எனப்படும் பசுமை ஆற்றலில் முதலீடு செய்யும் திட்டத்தை ஜூன் மாதம் அம்பானி வெளியிட்டிருந்தார். கடந்த மாதம் அவரது நிறுவனம் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டத்தை தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டம் இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும் மற்றும் 2047க்குள் இந்தியா எரிசக்தியில் தன்னிறைவை அடைய ஏற்றுமதி செய்யும் அரசின் லட்சியங்களுடன் ஒத்துப்போகிறது என்பதால் வரவேற்பு காணப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கூட தனது 75 வது சுதந்திர தின உரையில்,
“இந்தியா முன்னேற, ஆத்மநிர்பர் பாரதத்திற்கு, ஆற்றல் சுதந்திரம் அவசியம். இந்தியா சுதந்திரம் பெறும் 100 வது ஆண்டு கொண்டாடும் போது ஆற்றல் சுதந்திரமாக இருக்கும் என்று இந்தியா உறுதிமொழி எடுக்க வேண்டும்," என்று பேசியிருந்தார்.
அதற்கு உயிர்கொடுக்கும் வகையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டம் அமையும் என்று அம்பானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலக்கரி சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மூலமாக அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி, இந்த ஆண்டு தனது செல்வத்தில் 39.5 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.