முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ இயக்குனராக ராஜினாமா: ஆகாஷ் அம்பானி தலைவராக அறிவிப்பு!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்படுவதாக நிறுவன இயக்குனர் குழு அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்படுவதாக நிறுவன இயக்குனர் குழு அறிவித்துள்ளது. இயக்குனர் குழுவில் இருந்து முகேஷ் அம்பானி விலகியதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு அங்கமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விளங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பொறுப்பை குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி இயக்குனராக விலகியதை அடுத்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலில்,
முகேஷ் அம்பானி 27ம் தேதி விலகியதை அடுத்து ஆகாஷ் அம்பானி தலைவராக நியமிக்கப்படுவதை இயக்குனர் குழு ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி இதுவரை நிறுவன இயக்குனர் குழுவில் இயக்குனராக இருந்தார்.
மேலும், முக்கிய மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய நிர்வாக இயக்குனராக பங்கஞ் மோகன் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். ரமீந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி.செளத்ரி இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொறுப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தில் இளம் தலைமுறை அதிக பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டு வருவதாக கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி கூறியிருந்தார். வாரிசுகளிடம் வர்த்தக நிர்வாகத்தை ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
தகவல் உதவி: பிடிஐ | தமிழில்: சைபர் சிம்மன்