சென்னையில் செல்லப் பிராணிகளுக்கான பல்நோக்கு சிறப்பு கால்நடை மருத்துவமனை!
சிறுவயது முதல் செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்ட சி.கே.ரங்கநாதன், சென்னையில் உள்ளோர் தங்களின் பெட்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வசதியாக தன் கனவு முயற்சியாக இந்த புதிய கால்நடை மருத்துவமனையை நிறுவியுள்ளார்.
கவின்கேர் நிறுவனரும், பிரபல தொழில்முனைவருமான சி.கே. ரங்கநாதனின் புதிய முயற்சியாக செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 'சாஞ்சூ' (Sanchu hospital) பல்நோக்கு சிறப்பு கால்நடை மருத்துவமனை சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.
சிறுவயது முதல் செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்ட சி.கே.ரங்கநாதன், சென்னை நகரில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்கள் பெட்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வசதியாக தன் கனவு முயற்சியாக இந்த புதிய கால்நடை மருத்துவமனையை நிறுவியுள்ளார்.
அதிநவீன பல்நோக்கு மருத்துவமனையான ’சாஞ்சூ கால்நடை மருத்துவமனை’யில், நிபுணத்துவமிக்க டாக்டர்கள், நவீன வசதிகள், தனித்துவமிக்க சேவைகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
சென்னை அடையாறில் 7500 சதுர அடி இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கால்நடை மருத்துவமனை அறிமுக விழா நேற்று நடைப்பெற்றது. தன்னுடைய செல்லப்பிராணியும் தான் வளர்க்கும் நாய் உடன் இந்த அறிமுக விழாவை பத்திரிகையாளர்கள் முன்னிலை நடத்தினார் ரங்கநாதன். அவரைத்தொடர்ந்து பல சிறுவர், சிறுமிகளும் தங்களின் பெட் டாக், பூனை, பறவைகளுடன் கேட்வாக் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
சாஞ்சூ விலங்குகள் மருத்துவமனை துவக்க விழாவில் பேசிய சி.கே.ரங்கநாதன், இதனை துவக்குவது எனக்கு தனிப்பட்ட முறையில் அர்த்தமுள்ளதாகவும் மிகுந்த மன நிறைவையும் தருகிறது என்றார். மேலும் பேசிய அவர்,
”இங்கு செல்லப்பிராணிகளுக்கான தோல் மருத்துவம், பல் மருத்துவம், இருதயவியல், உள் மருத்துவம், நரம்பியல், அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு, அத்துடன் அவசர மற்றும் சிக்கலான பராமரிப்பு சேவைகள் ஆகியவை குறைவான கட்டணத்தில் அளிக்கப்படும். இங்கு 24 மணி நேரமும், 365 நாட்களும் சிகிச்சை அளிக்கப்படும்,” என தெரிவித்தார்.
கூடுதலாக இந்த மருத்துவமனையில், ஸ்பா மற்றும் சலூன், வாகன வசதி, செல்லப்பிராணிகள் தொடர்பான விபரங்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி, அவைகளை அங்கு தங்க வைக்கும் வசதி, பெட் சூப்பர்மார்க்கெட் உள்ளன என்றார்.
3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கால்நடை மருத்துவமனையில், நாய், பூனை, பறவைகள் மற்றும் சிறு பிராணிகள் அனைத்துக்குமான உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவச் சேவைகளையும் அளிக்கப்படும்.
மருத்துவமனை துவங்குவதற்கு முன் கால்நடை சிகிச்சை குறித்த ஆராய்ச்சிகள், தேவையான கட்டமைப்பு மற்றும் வல்லுனர்கள் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர் ரங்கநாதன் நிறுவிய குழுவினர்.
சென்னை மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கவர் வண்ண பறவைகள், பலவிதமான நாய்கள், குதிரைகள், நெருப்புக் கோழிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளிட்ட பிராணிகளுக்கு வெற்றிகரமாக இக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
இங்கு சிறந்த நிபுணத்துவமிக்க டாக்டர்கள் குழு உள்ளது. பல சிக்கலான நோய்களுக்கு சிறப்பாக அளிக்கப்பட்ட சிகிச்சையின் வெற்றி கண்டதன் காரணமாக, இந்த சாஞ்சூ கால்நடை மருத்துவமனை துவக்கத்திற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது. இந்த சேவையை உலகம் முழுவதும் உள்ள அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் விரிவுப்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது சி.கே.ரங்கநாதன் தனது குழுவினருடன் இணைந்து www.sanchuanimalhospital.com என்ற இணைய தளத்தை துவக்கி வைத்ததோடு, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் மருத்துவமனையை தொடர்பு கொள்ள, +919445160101 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.