‘முர்மு’ பழங்குடிகளுக்கு உதவும் ஜோடி: தரமான தேன் விற்பனையில் மாதம் ரூ.5 லட்சம் டர்ன்ஓவர்!
மும்பையில் வசிக்கும் திரான்கூர், அம்ரிதா ஷர்மா தம்பதி பழங்குடி மக்களிடமிருந்து பெறப்படும் தேனை நாடு முழுவதும் கொண்டு சேர்த்து மாதம் 5 லட்ச ரூபாய் டர்ன்ஓவர் செய்கின்றனர்.
இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்கிற பெருமைக்குரியவர் திரவுபதி முர்மு. இவர் பதவியேற்ற பிறகு முர்மு பழங்குடியினர், மக்களிடையே அதிக கவனம் பெற்றிருக்கின்றனர்.
பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளை மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வருவதை மறுப்பதற்கில்லை. அதேபோல், ‘The Best India Company’ என்கிற ஸ்டார்ட் அப் பழங்குடியினருடன் நெருக்கமாக இணைந்திருந்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறது.
The Best India Company தேன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறது. காடுகளில் இருக்கும் சுத்தமான தேனை முர்மு பழங்குடியினரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டு இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.
மும்பையில் வசிக்கும் திரான்கூர் தனது மனைவி அம்ரிதா ஷர்மா உடன் இணைந்து இந்த வணிகத்தைத் தொடங்கியிருக்கிறார். கொரோனா சமயத்தில் தொடங்கப்பட்ட இந்த வணிகம் முர்மு பழங்குடியினருக்கு வாய்ப்பளித்து உதவி வருகிறது.
தொடக்கம்
திரான்கூர், மீடியா மற்றும் விளம்பர நிறுவனங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்கவர். இவரது மனைவி அம்ரிதா ஷர்மா ராணுவத்தில் பணியாற்றியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து கொரோனா சமயத்தில் தேன் வணிகத்தில் ஈடுபட முடிவு செய்தார்கள்.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25,000 ரூபாய் முதலீட்டுடன் வணிகத்தை தொடங்கினார்கள். இன்று இதன் மாதாந்திர டர்ன்ஓவர் 5 லட்ச ரூபாய்.
முர்மு பழங்குடியினரின் ஒருங்கிணைப்பு
பீஹாரின் போத்கயா பகுதியில் பிறந்த திரான்கூரின் The Best India Company நிறுவனம் இந்த நிலையை எட்ட முர்மு பழங்குடியினர்தான் காரணம். அவர்கள் அளிக்கும் ஆதரவே இந்த நிறுவனத்தை வெற்றியடையச் செய்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் முர்மு பழங்குடியினரும் பல ஆண்டுகளாக காடுகளிலிருந்து தேனை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி அவர்களால் விற்கமுடியவில்லை. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் யாரும் உதவவில்லை.
The Best India Company இவர்கள் தேனை விற்பனை செய்ய ஒரு சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இன்று The Best India Company காடுகளில் இருக்கும் தேனை முர்மு பழங்குடியினரிடமிருந்து பெற்றுக்கொண்டு நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. இப்படி இருதரப்பினரும் இந்த முயற்சியால் பலனடைந்து வருகின்றனர்.
ஐடியா உதித்த தருணம்
கொரொனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு மக்கள் தங்கள் அன்பானவர்களை வீடியோ காலில் மட்டுமே பார்க்க முடிந்தது. அதுபோலத்தான் திரான்கூர் தனது தங்கையையும் தங்கையின் கணவரையும் வீடியோ காலில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தங்கையின் வீட்டு சமையலறை அலமாரியில் இருந்த தேன் ஜார் திரான்கூரில் கண்ணில் பட்டது. அதுபற்றி விசாரித்தபோது ஹசிமரா காட்டில் வாழும் முர்மு பழங்குடியினரிடமிருந்து அதை வாங்கியதாக திரான்கூரில் தங்கை சொல்லியிருக்கிறார்.
திரான்கூர் அதை ஆர்டர் செய்து வாங்கினார். அதன் தரத்தைப் பார்த்து வியந்து போனார். இத்தனை தரமான தயாரிப்பை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடாது என யோசித்தார். இதுபற்றிய கூடுதல் தகவல்களைத் திரட்டினார்.
முதலில் தேனை வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தார். எல்லோருக்கும் திருப்தியாக இருந்ததை அடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேன் வணிகத்தைத் தொடங்கினார்.
அப்பாவிடம் கிடைத்த உந்துதல்
திரான்கூருக்கு 11-12 வயதிருக்கும்போது அவரது அப்பா கல்வி சம்பதமாக செயல்பட்டு வந்த ஒரு என்ஜிஓ உடன் இணைந்து பணியாற்றி வந்தார்.
பீஹாரின் தோங்கேஸ்வரி பகுதியில் பள்ளி கட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதி அவரது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் இருந்தது. அந்த நாட்களில் இந்த இடத்தை சென்றடைய குறிப்பிட்ட இடம் வரை பேருந்து வசதி இருக்கும். அதன் பிறகு, கிட்டத்தட்ட 6-7 கி.மீ வரை நடந்து செல்லவேண்டும். பல சந்தர்ப்பங்களில் திரான்கூரின் அப்பா தோங்கேஸ்வரி பகுதியிலேயே இருந்துவிடுவார். அப்போதெல்லாம் திரான்கூர் அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம்.
வீட்டிலிருந்து இவ்வளவு தொலைவு சென்று இத்தனை கஷ்டப்படவேண்டிய அவசியமென்ன என்று ஒருமுறை திரான்கூர் அவரது அப்பாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரது அப்பா,
“இன்னும் ஒரு சில நொடிகள் மட்டுமே நாம் உயிர் வாழப்போகிறோம் என்று நமக்கு தெரியவருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் வாழ்க்கையில் நாம் ஏதோ ஒன்றை நினைத்து பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழவேண்டும்,” என பதிலளித்திருக்கிறார்.
இந்த வார்த்தைகளே திரான்கூருக்கு ஊக்கமளித்திருக்கிறது. இதுவே பழங்குடி மக்களின் மேம்பாட்டைப் பற்றி யோசிக்கவும் செயல்படவும் உந்துதலளித்திருக்கிறது.
தேனின் இயற்கையான சுவை
மாம்பழம், கடுகு என வெவ்வேறு சுவைகளில் The Best India Company தேன் விற்பனை செய்கிறது. ஆனால், இந்த சுவை இயற்கையானது. தேன் எந்தப் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்டதோ அதன் இயற்கையான மணம் அந்த தேனில் இருப்பதாக திரான்கூர் தெரிவிக்கிறார்.
இயற்கையான சுவை கொண்ட சுத்தமான, தரமான தேனை The Best India Company அமேசான் போன்ற மின்வணிக தளங்கள் மூலமாவும் சொந்த வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது.
கட்டுரை உதவி: ஹிந்தி யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா