Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அரக்கு திரவம் வளர்ப்பு வணிகத்தில் 3 லட்சம் ஈட்டும் பழங்குடி சமூகப் பெண்!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுஷானா அரக்கு திரவம் குறித்து பயிற்சி எடுத்துக்கொண்டு அதில் ஈடுபட்டு இன்று அரக்கு வணிகம் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளார்.

அரக்கு திரவம் வளர்ப்பு வணிகத்தில் 3 லட்சம் ஈட்டும் பழங்குடி சமூகப் பெண்!

Monday April 26, 2021 , 2 min Read

சுஷானா குரியா ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக சிறு விவசாய நிலம் உள்ளது. ஆனால் போதிய வருவாய் இல்லை. இவர் அரக்கு திரவம் குறித்து முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு அதில் ஈடுபட்டார். இன்று அரக்கு வணிகம் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் சராசரிக்கும் அதிகமாகவே மழைப்பொழிவு இருக்கும். அதிகளவில் நீர்நிலைகளும் உண்டு. இருப்பினும் சிறு நிலங்களை வைத்துள்ள விவசாய குடும்பங்கள் விவசாயம் மூலம் ஈட்டும் வருவாய் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.

1

விவசாயிகளுக்கு நிலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. இங்குள்ள கட்டமைப்பு வசதிகளும் மோசமாகவே உள்ளது. இவர்களால் சந்தையை அணுகமுடிவதில்லை. இப்படிப் பல காரணங்கள் இவர்களது நிலையை மேலும் மோசமாக்குகிறது.


எனவே விவசாயிகள் போதிய வருவாய் ஈட்ட கிராமங்களை விட்டு வெளியேறி வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


சுஷானாவின் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு பேர். இவரும் இவரது கணவரும் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் மூலம் ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டுமே வருவாய் கிடைக்கும். மற்ற நேரங்களில் நிலம் தரிசாகவே இருக்கும். அந்த சமயங்களில் இவர்கள் இருவரும் தினக்கூலிகளாக வேலை செய்வார்கள். இப்படி இவர்களால் ஒரு வருடத்தில் 25,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.

திருப்புமுனை

2017-ம் ஆண்டு Torpa Rural Development Society for Women (TRDSW) மற்றும் Edelgive ஆதரவுடன் ராஞ்சியில் உள்ள Indian Institute of Natural Resins and Gums (IINRG) மையத்தில் அரக்கு பிராசஸ் செய்வது குறித்த ஒரு வார கால பயிற்சியில் சுஷானா பங்கேற்றார். இவருடன் 21 பழங்குடியினர் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்கள். இது சுஷானாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


அரக்கு என்பது அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒரு திரவம். அரக்குப் பூச்சிகள் மரங்களில் வாழும். அரக்குப் பூச்சிகளிடமிருந்து வெளிப்படும் திரவம் மரக்கிளைகளில் படிந்திருக்கும். இந்தக் கிளைகளில் இருந்து அரக்கை சுரண்டி எடுப்பார்கள். இந்தப் பிசின் மெழுகு, காஸ்மெடிக்ஸ், மருந்து என பல இடங்களில் பயன்படுகிறது.

”அரக்கு வருடம் முழுவதும் உற்பத்தி செய்யக்கூடிய பொருள். அதிக நேரமோ வேலையாட்களோ தேவைப்படாது. சரியான நேரத்தில் செயல்முறையைத் தொடங்கினால் போதுமானது. இதன் மதிப்பு என்னவென்று என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் தெரியாது,” என்கிறார் சுஷானா.

அரக்கு வளர்ப்பு மற்றும் வணிகம்

சுஷானா பயிற்சி முடிந்த பிறகு குசுமி வகை அரக்கை ஏழு இலந்தை மரங்களில் வளர்க்கத் தொடங்கினார். அரக்கு தயாரானதும் மொத்த அறுவடையையும் அடுத்த ஆண்டிற்கான விதையாக எடுத்து சேமித்து வைத்தார்.


இலந்தை மற்றும் கும்பாதிரி மரங்களில் அவரால் அதிகளவில் வளர்க்க முடிந்தது. படிப்படியாக அறுவடை அதிகரித்தது. தற்போது 25 இலந்தை மரங்களில் இருந்தும் 5 கும்பாதிரி மரங்களில் இருந்தும் சுஷானா அரக்கு அறுவடை செய்கிறார். இவரது குடும்பத்தினரும் தற்போதும் இந்த வணிகத்தில் உதவி வருகிறார்கள்.


இதுவரை ஐந்து முறைக்கும் மேலாக அறுவடையை விற்பனை செய்துள்ளார். அரக்கு வணிகம் மூலமாக மட்டுமே 3,00,000 ரூபாய் சம்பாதித்துள்ளார்.

”கடந்த மூன்றாண்டுகளில் எங்கள் வருவாய் மும்மடங்காக அதிகரித்திருக்கிறது,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
ஜார்கண்ட்

மற்றவர்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளிக்கிறார்

சுஷானா தன்னுடைய நலனில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பு மற்ற பழங்குடியினப் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். அவர்களும் நிதிச் சுதந்திரம் பெறவேண்டும் என்று விரும்பினார்.

“பெண்கள், குறிப்பாக பழங்குடியினப் பெண்கள் சொந்த காலில் நிற்பதும் குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பங்களிப்பதும் எளிதான செயலாக இருந்ததில்லை,” என்கிறார்.

இன்று சுஷானா தனது பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரக்கு வளர்ப்பில் பயிற்சியளித்துள்ளார்.


ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷ் ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா