மைசூர்பாக் + ஐஸ்கீரிம் = மைசூர்பா ஐஸ்கீரிம்: தீபாவளிக்கு வெளிவந்த புது டிஷ்!
கோவையைச் சேர்ந்த பிரபல பேக்கரியான அன்னபூர்ணாவும், பூமராங் ஐஸ்கீரிம் நிறுவனமும் இணைந்து தீபாவளிக்காக மைசூர்பாக் பாதி... ஐஸ்கீரிம் மீதி... கலந்து செய்த கலவை இது என்று ‘மைசூர் ஐஸ்கீரிமை’ தயாரித்துள்ளன.
புத்தாடைகள், படபட பட்டாசுவிற்கு பிறகு தீபாவளிகளை முழுமை பெற செய்பவை இனிப்புகள். வீட்டில் செய்யப்படும் முறுக்கு, அதிரசம், தட்டைகளுக்கிடையே பல ஸ்வீட்ஸ்களை கொண்டு அலங்கரிப்பதற்காக மக்கள் கூட்டம் பேக்கரிகளை நோக்கி படையெடுத்தனர். ஆயினும், அதே போரீங் லட்டு, ஜிலேபியா என்பவர்களுக்காகவே சுத்தமான நெய் மணம்கொண்ட மைசூர்பாக்கின் சுவையினை ஐஸ்கீரிமுக்குள் கொண்டுவந்து ‘மைசூர்பா ஐஸ்கீரிமை’ அறிமுகப் படுத்தியுள்ளது கோவையின் இருபெரும் பிரபல உணவு நிறுவனங்களான அன்னபூர்ணாவும், பூமராங்கும்.
“இரண்டு பெரும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகள் அல்லது நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு தயாரிப்பை உருவாக்குவதன் மூலம், இரு நிறுவனங்களது வலிமைகள் பகிர்ந்து கொள்ளப்படும். எங்களது வளர்ச்சிக்கான உத்தியும் அதுவே. ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் கோ பிராண்டிங்கில் ஈடுப்பட்டுள்ளது. ஏன், கோவையில் பிரபலமான பிராண்டோடு இணைந்து நாமொரு தயாரிப்பை உருவாக்கக்கூடாது என்பதே ‘மைசூர்பா ஐஸ்கீரிம்’ உருவாக்கலுக்கான ஆரம்பம். அதில் ஏன் ‘அன்னபூர்ணா’வை தேர்ந்தெடுத்தோம் என்று கேட்டால், அன்னபூர்ணாவுக்கும் பூமராங்கும் இடையேயான உறவு 20 ஆண்டுகளுக்கும் மேலானது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா கோயம்புத்தூரில் பூமராங்கின் முதல் கிளையை துவங்கிய போது, அன்னபூர்ணா ஓட்டலின் நிறுவனர்களில் ஒருவரான கே.தாமோதரசாமி தாத்தா அப்பாவுக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். ஹோட்டல்களுக்கு ஸ்கூப் ஐஸ்கீரிம்களை வழங்கத் தொடங்கியபோது, அன்னபூர்ணா தான் எங்களது முதல் வாடிக்கையாளர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இரு குடும்பங்களுக்கும் இடையே வலுவான நட்பு நீடிக்கிறது. அன்னபூர்ணாவின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஜெகனிடம், ‘சுத்தமான நெய் ஐஸ்கீரிம்’ தயாரிப்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அன்னபூர்ணாவின் மைசூர்பாகு கோவை மக்களுக்கு நன்கு பரீட்சயம். சோ,
”மைசூர்பாகுவின் சுவை யினையே ஐஸ்கீரிமில் கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தோம்,” என்று கூறினார் பூமராங் ஐஸ்கிரீமின் நிர்வாக இயக்குனரான தருண் வாஞ்சிமுத்து.
சிட்னியில் உணவு அறிவியல் பட்டம் முடித்த அவர், கடந்த ஆண்டு தொழில்நுட்ப இயக்குநராக நிறுவனத்தில் இணைந்து பணி மேற்கொண்டு வருகிறார். நான்கு ஆண்டு பட்டம் முடித்து, கோகோ- கோலா கம்பெனியில் பணிபுரிந்துள்ளார்.
“மைசூர்பா ஐஸ்கீரிமின் சரியான சுவையினை கொண்டுவர 3 மாதங்களாகியது. அன்னாபூர்ணா அதன் மைசூர்பாவின் பக்குவத்தை ஐஸ்கீரிம் தயாரிப்பதற்கு ஏற்றவாறு மாற்றியது. இது கூட்டு முயற்சியால் உருவாகியது. கடந்த திங்கட்கிழமை மைசூர்பா ஐஸ்கீரிமை அறிமுகம் செய்தோம். மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
பூமராங்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் சுவைத்த அனைத்துத் தயாரிப்புகளும் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சோ, மக்களுக்கு பூமராங்குடன் நிறைய நாஸ்டால்ஜியா மொமண்ட்கள் உள்ளது. மைசூர்பாகுவின் சுவையில் ஐஸ்கீரிமை சுவைப்பது அவர்களுக்கு புதுமையான அனுபவமாக இருப்பதாக தெரிவித்தனர்.
”இரு பிராண்ட் சேர்ந்து ஒரு தயாரிப்பை உருவாக்கியதில், பூமராங்கின் வாடிக்கையாளர்களுக்கு அன்னபூர்ணாவின் தயாரிப்பினை ருசிக்கும் அனுபவமும், அன்னபூர்ணாவின் வாடிக்கையாளர்களுக்கு பூமராங்கின் ஐஸ்கீரிம்களை ருசிக்கும் அனுபவமும் கிடைக்கும்,” என்றார் தருண்.
நாவில் வைத்தவுடன் கரைந்தோடி, சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பூமராங் அளிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, ‘ஐஸ்கீரிம் பர்கர்’, ‘ரூபி ப்ரவுனி வித் ஐஸ்கீரிம்’, ‘ஐஸ்கீரிம் நகெட்ஸ்’, ஆகிய புதுமையான ரெசிப்பிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1997ம் ஆண்டு கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியம் அருகில் பூமராங்கின் முதல் கிளை தொடங்கப்பட்டது. இன்று, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை என 15 மாவட்டங்களில் அதன் கிளைகளை நிறுவி, பெரும் பிராண்ட்டாக வளர்ந்துள்ளது. தவிர, அவர்களது தயாரிப்புகளை அங்கீகரிக்கும் விதமான ‘சிறந்த வெண்ணிலா ஐஸ்கீரிம்’, ‘சிறந்த சாக்லேட் ஐஸ்கீரிம்’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
“அப்பாவிற்கு அடுத்து அம்மா கவிதாமணியும் தொழிலுக்கு காலடி வைத்தார். இருவரும் இத்தாலியில் உள்ள ஜெலாட்டோ பல்கலைகழகத்தில் ஐஸ்கீரிம் தயாரிப்பு கோர்ஸ் படித்தனர். 2015ம் ஆண்டு ‘உலக ஜெலோட்டா டூர்’ போட்டியில் இந்தியாவின் சார்பாகவும் இருவரும் கலந்து கொண்டு, பரிசு பெற்றனர். இன்றும் ஒவ்வொரு நாளும் நேற்றையை விட சிறந்ததாக இருக்கும்வகையில் உழைத்து கொண்டிருக்கிறோம்,” என்று முடித்தார் தருண்.
ஜில்லென்ற கோவையில் குளுகுளு ஐஸ்கீரிமில் தனி முத்திரை பதித்துவரும் பூமராங்கின் சுத்தமான நெய் ஐஸ்கீரிமான ‘மைசூர்பா ஐஸ்கீரிமை’ இந்த தீபாவளியில் குடும்பத்தோடு ருசித்து மகிழுங்களேன்...