Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நெட்ஃப்ளிக்ஸின் ‘செக்ஸ் எஜூகேஷன்’- பாலியல் கல்வியில் ஒரு சரியான நகர்வு!

நெட்ஃப்ளிக்ஸின் ‘செக்ஸ் எஜூகேஷன்’- பாலியல் கல்வியில் ஒரு சரியான நகர்வு!

Wednesday January 30, 2019 , 4 min Read

இந்த தலைமுறைக்கே ஆன மன அழுத்தம், பதட்டம் உண்டாக்கிய தனிமை, ‘நெட்ஃப்ளிக்ஸ்’ போன்றோரால் ஆறுதல் கிடைக்கவே கிடைக்காது என என்னை உறுதியாக நம்ப வைத்திருக்கிறது. தொடர்ந்து படங்களாக பார்த்துக் கொண்டிருக்கும் போது இடையே ‘செக்ஸ் எஜூகேஷன்’ சீரீஸின் விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. முதல் முறை பார்த்த போது ‘எதையாவது விற்றாக வேண்டும் என்றால் அதில் பாலுறவு காட்சிகளை உட்புகுத்தும்’ டிரெண்ட் நெட்ஃப்ளிக்ஸிலும் இருக்கிறது போல, இதை பார்க்க நமக்கு ஒரு காரணமும் இருக்கப் போவதில்லை என்றும் நினைத்துக் கொண்டேன்.

Image Courtesy : Zimbio

ஆனால், நண்பர் ஒருவர் அதைப் பற்றிப் பேசியதால் பார்க்கத் தொடங்கினேன். பார்த்துக் கொண்டிருக்கும் போது அதன் தாக்கத்தை முழுமையாக உணர முடியவில்லை. பார்த்து முடித்து அப்படியே மனம் காட்சிகளை அசை போட்டுக் கொண்டிருக்கும் போது தான், இப்படி ஒரு நேர்மையான எழுத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை எனத் தோன்றியது.

இங்கிலாந்தில் ஒரு பள்ளியில் ஆறாவது ஃபார்மில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தான் நாயகர்கள். அவர்களுடைய பாலியல் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள், சந்தேகங்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் கதை.

ஒரு எபிசோட்டில் மேவ் (முன்னணி பாத்திரம்)  என்பவளிடம் ‘ உனக்கு என்ன தான் பிடிக்கும்?’ என அவளுடைய பாய்ஃப்ரெண்டு கேட்கும் போது ‘சிக்கலான பெண் கதாபாத்திரங்கள்’ என்று பதில் சொல்வாள். ‘செக்ஸ் எஜூகேஷன்’ சீரீஸில் இருக்கும் பெண் பாத்திரங்களில் முதன்மையானவர்கள் எல்லாருமே ‘சிக்கலான பெண் பாத்திரங்களாக’வே இருப்பார்கள். எதற்காக பெண் பாத்திரங்கள் குழப்பமானவையாக, சிக்கலானவையாக இருக்க வேண்டும்?

ஏனென்றால், பெண்கள் எப்படியானவர்கள் என ஆண்கள் எழுதிருப்பது அத்தனையுமே வெறும் ஸ்டீரியோடைப்புகளாக மட்டுமே இருக்கிறது. அதுவும் தமிழ் திரைப்படைப்புகளில் எல்லாம் ‘லூசுப் பொண்ணு’, ‘திமிரு பிடிச்ச பொண்ணு’, ‘அமைதியான பொண்ணு’ என மூன்றே முன்று வகை பாத்திரங்களை தான் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை உடைக்க – ஆண் பாத்திரங்களை எழுதும் போது எவ்வளவு விவரங்களை சேர்த்து எழுதியிருக்கிறார்களோ அதே அளவு விவரங்களை பெண் பாத்திரங்களை எழுதும் போதும் சேர்த்து எழுத வேண்டும் என்று தோன்றும்.

அந்த விவரங்கள் எல்லாம் பொதுப்புத்தியின் யூகங்களை/ ஜட்ஜ்மெண்டுகளை மிஞ்சியதாக இருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் பாத்திரங்களை எல்லாம் ‘ சிக்கலான பெண் பாத்திரங்கள்’ என்று மேலோட்டமாக சொல்லிவிட்டாலும், யதார்த்தத்தில் அவர்கள் எளிமையான பெண்களாகவே இருக்கிறார்கள்.

மேவ், ஏமி, ஓலா, லில்லி, ஜீன் என வரும் பெண் பாத்திரங்கள் எல்லாருமே “சிக்கலான பெண் பாத்திரங்கள்”. ஒரே நேரத்தில் வலிமையாகவும், பலவீனமாகவும் இருப்பவர்கள்.

இவர்கள் மாதிரியான பாத்திரங்கள் இனி நமக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என யோசிக்கும் அளவு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் காதல் தோன்றச் செய்திருக்கிறது திரைக்கதை. திரைக்கதையின் பெரும் பங்கை எழுதியிருப்பது லாரி நுன். எட்டு எபிசோடுகள் இருக்கும் சீரீஸில் ஒரே ஒரு எபிசோடில் மட்டுமே ஃப்ரெட்டி சைபோர்ன் எனும் ஆண் எழுத்தாளர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அல்லாமல் முழுக்க முழுக்க சோஃபி குட்ஹார்ட், லாரா நீல், லாரா ஹண்டர், பிஷா கே அலி ஆகிய பெண்களாலே எழுதப்பட்டிருக்கிறது இந்த சீரியஸ்.

உண்மையில், இதை பெண்கள் தான் எழுதியிருக்க வேண்டும். ஆண்கள் எழுதியிருந்தால் நிச்சயமாக ஆண்களின் ஃபேன்டஸியான பாலியல் கல்வியை தான் பார்த்திருக்க முடியும். அதற்காக, இதில் ஆண்களின் அனுபவங்களோ, பார்வைகளோ இயல்பாக இல்லை என்று குறை சொல்லிவிடவும் முடியாது. எல்.ஜி.பி.டி.க்யூ சமுகத்தை சேர்ந்த பாத்திரங்கள், முழுக்க முழுக்க வெள்ளை முகங்களே இல்லாமல் வெவ்வேறு இனங்களை சேர்ந்த பாத்திரங்கள் என அத்தனை தரப்பினரையும் உட்படுத்தி எழுதியிருப்பது புதுமையானது தான்.

’செக்ஸ் எஜூகேஷன்’ கருக்கலைப்பை குறித்து முன் வைக்கும் கருத்துமே இதுவரை பார்க்காததாகவே இருக்கிறது. கருக்கலைப்பு என்பதே ஒரு உயிர்க்கொலை தான் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையை பல படங்களில் பார்த்திருப்போம். ‘ஜூனோ’வில் கூட மனம் மாறும் பள்ளி மாணவி குழந்தை பெற்றுக் கொண்டு அதை தத்துக் கொடுப்பதை தானே பார்த்தோம் ?! ஆனால், கருக்கலைப்பு செய்வது அந்த பெண்ணினுடைய முடிவு மட்டும் தான், கருக்கலைப்பு உயிர்க்கொலை அல்ல, கருக்கலைப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் முட்டாள்தனமானவை, பாலுறவின் போது பாதுகாப்பு உபயோகிக்காத பட்சத்திலும் கருக்கலைப்பு எனும் முடிவை எடுக்க ஒரு பெண்ணுக்கு முழு உரிமையும் உள்ளது என்பதை எல்லாம் தெளிவாக பேசுகிறது ‘செக்ஸ் எஜூகேஷன்’.

பதின் பருவத்தினர் பலருமே தங்களுடைய நண்பர்கள் செய்யும் அத்தனையையும் தானும் செய்தால் தான் ‘கெத்து’ எனும் மனநிலையில் இருப்பவர்கள் தான். பேக், சைக்கிள், ஃபோன் என க்ளாஸ்மேட்களோடு ஒப்பிட்டு பார்த்து பார்த்து தான் வீட்டில் வாங்கக் கேட்பார்கள். அது போலவே தான் ‘காதல்’ எனும் யோசனை அறிமுகமாவதும். இந்த peer pressure காரணமாக, விபரீதங்களை உணராமல் எதையாவது முயற்சித்துப் பார்த்திருப்போம்.

லில்லியும் இதே வகை தான். அவள் அறிமுகமாவதில் இருந்தே பாலுறவு கொள்ள ஒரு துணையைத் தேடிக் கொண்டே இருப்பாள்– அது குறித்து பேசும் போது

‘என்னன்னு தெரியல.. எல்லாரும் என்னவிட முன்னாடி போயிடுவாங்கன்னு பயமா இருக்கு’ என்பாள். அப்படியொன்றும் அவள் பின் தங்கி விடப் போவதில்லை என்பதை இறுதியில் உணர்ந்தும் கொள்வாள். இதுவுமே ஒரு முக்கியமான பாடம் தான் இல்லையா?

பொதுவாக அவதூறு பரப்பும் முயற்சியில் தனிப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்பட்டால் அதை எதிர்க்க நாம் செய்யும் முதல் முயற்சியே ‘அது என்னுடையது இல்லை’ என்று சொல்வது தானே? எதிர்ப்பதனால் இல்லை, அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதினால் தான் அவமானம் உண்டாகாமல் இருக்கும் என்பதை யாரும் நமக்குச் சொல்லிக் கொடுத்தது இல்லையே! அதைச் சொல்லிக் கொடுத்து நம் உடலை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ‘நச்’ என்று அடித்து சொல்கிறது ‘செக்ஸ் எஜூகேஷன்’.

இதெல்லாமே மேலோட்டமாக தெரியும் கருத்துக்கள் மட்டுமே. ஸ்ட்ரிக்டான ஹெட்மாஸ்டாரின் பையன் தன்னம்பிக்கை இல்லாமல் திணறுவது, முற்றிலும் நேர்மையாக இருக்காத தெரபிஸ்ட் அம்மா, பார்க்க கோபக்காரியாக இருந்தாலும் இன்னொரு பெண்ணிற்கு துயரம் எனும் போது முதல் ஆளாக நின்று உதவும் மேவ் – என உண்மையில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவு நுணுக்கங்கள், விவரங்களோடு இருக்கிறது செக்ஸ் எஜூகேஷன் சீரீசில்.

இதில் பத்து சதவிகிதமாவது இந்திய பதின்பருவத்தினருக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என இறைஞ்சுவதை தவிர வேறு கோரிக்கைகள் இல்லை.