26 ஆண்டுகளில் 5,000 பெண்களை பாலியல் தொழிலில் இருந்து மீட்டுள்ள அரசு சாரா நிறுவனம்!
பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை மீட்டுள்ளது.
இந்திய நீதித்துறை அமைப்பின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துவது குற்றமாகும். இருப்பினும் இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து நடந்துவருகிறது. மும்பையில் ’ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன்’ என்கிற அரசு சாரா நிறுவனத்தின் நிறுவனரான திரிவேணி ஆச்சார்யா என்கிற சமூக ஆர்வலர் பல்வேறு பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு வருகிறார்.
ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன் 90-களில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மும்பை, புனே, டெல்லி, ஆக்ரா, பீஹார், ராஜஸ்தான் என இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை மீட்டுள்ளது.
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் Edex Live உடனான உரையாடலில் திரிவேணி தனது ஃபவுண்டேஷன் பெண்களை மீட்டது குறித்து விவரிக்கும்போது,
”எங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் முதலில் அதை கண்காணித்து போலீஸிடம் தெரிவிப்போம். பின்னர் அவர்களை மீட்போம். பெண்களுக்கு 25 வயதானதும் அவர்கள் இந்த வணிகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். எனவே எப்போதும் இளமையான கன்னிப் பெண்களுக்கே தேவை உள்ளது. புதிதாக ஒரு பெண் கொண்டு வரப்பட்டால் எங்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்படும். அவர்கள் ’புதிய பிராடக்ட்’ என்றழைக்கப்படுகின்றனர்,” என்றார்.
பெண்கள் அதிக மேக் அப்புடன் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பயந்து காணப்படுவதையும் பார்த்ததுமே அவர்கள் புதிது என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும் என்கிறார் திரிவேணி. இந்த அரசு சாரா நிறுவனத்தின் உளவாளிகள் இந்தப் பெண்களிடம் முதலில் பேசுவார்கள். ஏனெனில் இவர்களை சட்டப்பூர்வமாக மீட்பதற்கு இவர்களது சம்மதத்தைப் பெறுவது முக்கியம்.
இவர்கள் இந்தத் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டால் போலீஸிடம் எஃப்ஐஆர் பதிவு செயப்படும்.
முயற்சியின் துவக்கம்
திரிவேணியின் கணவர் பாலகிருஷ்ண ஆச்சாரியா ராணுவத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அதிலிருந்து ஒய்வு பெற்றார். பின்னர் 1993-ம் ஆண்டு திரிவேணியும் அவரது கணவரும் மும்பைக்கு மாற்றலாயினர். 55 வயதான திரிவேணி பத்திரிக்கையாளராக பணியாற்றினார். அவரது பணி நிமித்தமாக ஒரு முறை ஆசியாவின் மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒன்றான கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஃபால்க்லேண்ட் ரோடு பகுதிக்குச் சென்றிருந்தார்.
திரிவேணி ’ஏஷியன் ஏஜ்’ உடனான உரையாடலில் கூறும்போது,
”எனக்கு பாலியல் தொழில் பற்றியோ மனித கடத்தல் பற்றியோ எதுவும் தெரியாது. சாலையில் சில பெண்கள் அடர்ந்த நிறத்தில் லிப்ஸ்டி போட்டுக்கொண்டு கவர்ச்சியான ஆடைகளுடன் நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் விருப்பத்துடன் இதில் ஈடுபட்டிருப்பதாக நினைத்தேன். என்னுடைய கணவர்தான் இதுகுறித்த தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்,” என்றார்.
ஒருமுறை ரக்ஷாபந்தன் சமயத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் ராக்கி கட்டிக்கொள்ள பாலிவுட் நட்சத்திரம் சுனில் தத் சென்றிருந்த நிகழ்வு குறித்து பதிவு செய்ய திரிவேணி சென்றிருந்தார். அப்போது 14 வயது சிறுமி ஒருவரை சந்தித்தார். அவர் அங்கிருந்த பெண்களில் யாரோ ஒருவரின் மகளாக இருப்பார் என எண்ணினார். ஆனால் அந்தச் சிறுமியை நேபாலில் இருந்து வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
”இதுபோன்ற நிலையில் உள்ள மற்ற பெண்களுக்கு உதவவேண்டும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்தோம். எனவே என் கணவரும் நானும் பெண்களை மீட்கும் பணியில் முழுநேரமாக ஈடுபடத் தொடங்கினோம். மக்களுடன் தொடர்பில் இருக்கவும் நிதித் தேவைக்காகவும் நான் பணியைத் தொடர்ந்தேன்,” என திரிவேணி தெரிவிக்கிறார்.
அப்போதிருந்து திருவேணி தலைமையில் இயங்கி வரும் Rescue Foundation அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு பெண்களை காப்பாற்றி வருகிறது.
மீட்கப்பட்ட பிறகான நடவடிக்கைகள்
பெண்கள் இந்தப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதும் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு ஹெச்ஐவி, கருத்தரிப்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்தப் பெண்கள் தாங்கள் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்காக ஆலோசனைகளும் முறையான ஊட்டச்சத்தும் வழங்கப்படுகிறது.
16 வயதிற்குட்பட்ட பெண்கள் மீட்கப்பட்டால் அவர்கள் குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்படுகின்றனர்.
இந்த அரசு சாரா நிறுவனம் மீட்கப்பட்ட பெண்கள் குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது. நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் இதன் போக்கை கண்காணிக்கிறது. ஒருவேளை குழந்தைகள் கடத்தப்படுவதன் பின்னணியில் அவர்களது குடும்பங்கள் இருப்பது தெரிய வந்தால் சிறுமிகளுக்கு 18 வயதாகும் வரை தங்குமிடங்களிலேயே பாதுகாக்கபடுகின்றனர்.
பின்னர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்குள்ள இந்த என்ஜிஓ-வின் பார்ட்னர்கள் இந்தப் பெண்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA