கொல்கத்தா பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பிற்கு நடமாடும் நூலகம் அமைத்தை அரசு சாரா நிறுவனம்!
’அப்னே ஆப் வுமன்’ நிறுவனத்தின் நடமாடும் நூலகத்தில் குழந்தைகளுக்காக கதை சொல்லும் அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
நீங்கள் முதல் முறையாக ஒரு பத்திரிக்கையைப் புரட்டிப் படித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முதல் முறையாக எப்போது கவிதை படித்தீர்கள் என ஞாபகம் இருக்கிறதா? புத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. புத்தகங்கள் வாயிலாக நாம் உலகை அறியலாம். இது அனைவருக்கும் கிடைக்கவேண்டிய ஒரு அனுபவம்.
இந்த நோக்கத்திற்காகவே ‘அப்னே ஆப் வுமன்’ என்கிற அரசு சாரா நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள பிகே பால் பார்க் பகுதியில் குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்கள் படிக்க புத்தகங்களை வழங்குகிறது. இதில் சிறப்பம்சம் என்ன என்கிறீர்களா? இவர்கள் சிகப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள். இந்த முயற்சியின் மூலம் படிப்பதில் இருக்கும் இன்பத்தை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறது இந்த நிறுவனம்.
குழந்தைக் கடத்தலை எதிர்த்தும் போராடும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகள் படித்து மகிழ்வதற்காக ஒரு மினிவேன் முழுவதும் புத்தகங்களை நிரப்பி எடுத்துச்செல்கிறது. ப்ரைட் அண்ட் ப்ரெஜுடைஸ், இந்தி மொழியில் எழுதப்பட்ட ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை என இந்த நடமாடும் நூலகம் அனைத்து வகையான புத்தகங்களையும் கொண்டிருப்பதாக ’தி டெலிகிராஃப்’ தெரிவிக்கிறது.
இந்தக் குழந்தைகள் புத்தகங்கள் படிக்கவேண்டியது அவசியம் என்பதை அப்னே ஆப் வுமன் வேர்ல்ட் புரிந்துகொண்டது. எனவே இந்நிறுவனம் அபிஜே ஆனந்த் குழந்தைகள் நூலகம், கோல் இண்டியா ஆகியவற்றுடன் இணைந்து ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற அபிஜே கொல்கத்தா இலக்கிய விழாவில் நடமாடும் நூலகத்தை அறிமுகப்படுத்தியது.
அபிஜே சுரேந்திரா குரூப் இயக்குனர் பிரீத்தி பால் இந்த முயற்சிக்காக 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது இந்த நடமாடும் நூலகம் சோனாகாச்சி மற்றும் கிட்டர்போர் பகுதியில் குழந்தைகள் வந்து புத்தகங்களை எடுத்து படிப்பதற்காக திங்கட்கிழமையும், புதன்கிழமையும் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளிகளின் குழந்தைகள் புத்தகங்கள் படிப்பதற்காக இந்த மினிவேன் டாப்சியா பகுதிக்கும் செல்கிறது.
புத்தகங்கள் மட்டுமின்றி கதை சொல்பவர்களும் தன்னார்வலர்களும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டு கதை சொல்லும் அமர்வுகளை ஏற்பாடு செய்கின்றனர். அப்னே ஆப் வுமன் வேர்ல்ட் நிறுவனரான ருசிரா குப்தா ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடன் உரையாடுகையில்,
”கதை சொல்லும் திட்டத்தில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த நடவடிக்கை குழந்தைகளிடையே பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும்,” என்றார்.
இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கையில்,
“நான் இதுவரை ஆங்கில புத்தகம் படித்ததே இல்லை. இதைப் படிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதிலுள்ள படங்கள் அற்புதமாக உள்ளது,” என்று தன் கையில் இருக்கும் புத்தகங்களைக் காட்டுகிறார்.
அதேபோல் மற்றொரு குழந்தையும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. “நாங்கள் தினமும் விளையாடுவதற்காக இங்கு வருவோம். இன்று நிலைமை மாறிவிட்டது. நாங்கள் நிறைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கிறோம். கதை சொல்கிறார்கள். எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA