மீண்டு வந்த நிதின் காமத்; வர்த்தகம், வாழ்க்கை பற்றி மனம் திறந்த ஜீரோதா நிறுவனர்!
ஜனவரியில் வாத பாதிப்பிற்கு உள்ளான பிறகு, டெக்ஸ்பார்க்ஸ்- 2024 நிகழ்ச்சியில் முதல் முறையாக நேரடியாக உரையாடியவர் வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கும், கட்டுப்பாடு விதிகளுக்கு மத்தியில் உறுதியான நிதி நிட்ப வர்த்தகத்தை உருவாக்குவது பற்றி பகிர்ந்து கொண்டார்.
நிதின் காமத், ஸ்டார்ட்-அப் உலகின் ஒரு முன்னோடி என்பது நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆன்லைன் பங்கு வர்த்தகத் துறையில் முன்னோடி என்ற வகையில், நிதின் காமத்தின் ஜீரோதா, பாரம்பரிய நிறுவனங்கள் பலவற்றை மாற்றத்திற்கு உள்ளாக்கி, அபார வளர்ச்சி கண்டுள்ளது.
2024 நிதியாண்டில் அதன் விற்றுமுதல் ரூ.8320 கோடி மற்றும் லாபம் ரூ.4,700 கோடியாக உள்ளது. ஆனால், நிதின் காமத் பற்றி பேசும் போது, நிதி அல்லது வர்த்தகம் மட்டுமே கவனிக்க வேண்டியவை அல்ல.
ஜனவரி மாதம், பக்கவாத பாதிப்பிற்கு உள்ளான பிறகு கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக பொதுவெளி உரையாடலில் பங்கேற்ற நிதின் காமத், வாழ்க்கை, இழப்பு, இருத்தல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு, கட்டுப்பாடு விதிகள் அதிகரித்து வரும் சூழலில், உறுதியான நிதிநுட்ப வர்த்தகத்தை உருவாக்குவது பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
"வாதம் உங்களை சில காலம் முடக்குகிறது. 1 முதல் 2 மாதங்கள் வரை, வாழ்க்கை பற்றி எனக்கு பல கேள்விகள் எழுந்தன. இதே போல நிரந்தரமாக இருப்பேன் என நினைத்தேன். அதற்கு பழகி கொள்ளத் தயாரானேன். ஆனால், நிலைமை சற்று மேம்பட்டு, இரண்டு வாரங்களில் பயிற்சி செய்யத் துவங்கினேன்,” என்று டெக்ஸ்பார்க்ஸ் பெங்களூரு 2024 நிகழ்ச்சியில், யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில் அவர் கூறினார்.
"அது வாதம் தான், அது நிகழ இருந்தது, நிகழ்ந்தது” என்றவர் சிறிது இடைவெளி விடுக்கிறார். ஆனால் இப்போது வாரம் ஐந்து நாள் பணிக்கு திரும்பிவிட்டேன். எல்லாம் இயல்பாகி விட்டன. என்ன மாறியது என்றால், குடிப்பதை நிறுத்திவிட்டு, பயணம் செய்வதை தவிர்க்கத் துவங்கியுள்ளேன்,” என்கிறார்.
ஜீரோதா நிறுவனம் தற்போது, 5.66 கோடி அளவிலான பங்கு, பத்திரங்களை கையாள்கிறது. இது நம்ப முடியாதது. கடந்த நான்கு ஆண்டுகளில் வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ள விதம் இப்படி உணர வைக்கிறது, என்கிறார்.
"உண்மையில் மகத்தான வெற்றிக்கு மத்தியில் இருக்கிறோம். பங்கு சந்தை நிகழும் போது, அது எவ்வளவு காலம் நீடிக்கும் எனத்தெரியாது. நீடிக்கும் வரை நீங்கள் பயன் பெற விரும்புவீர்கள்,” என்று மேலும் சொல்கிறார்.
தினசரி செயல்பாடுகளில் கவலை அளிக்கும் அம்சம் எதுவும் இல்லை, என்கிறார் காமத். ஏனெனில், ஜீரோதா மோசமான நாளை அரிதாகவே சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் அதிக சில்லறை முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். 2016ல் டிமேட் கணக்கு எண்ணிக்கை 2.4 கோடியாக இருந்தது 2024 ஆகஸ்ட்டில் 17.1 கோடியாக அதிகரித்துள்ளது.
"வர்த்தகம் சரிவுக்குள்ளான நேரமே இல்லை. வர்த்தகம் பலவீனமாகும் போது அல்லது சந்தை சரியும் போது என்ன செய்வேன் என்று தெரியவில்லை," என்கிறார்.
இருப்பினும், புரோக்கிங் சேவையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடு விதிகள் பற்றி அவர் தான் பெரும்பாலும் முதலில் குரல் கொடுக்கிறார்.
"எங்கள் வர்த்தகத்தில் இடர் தான் முன்னணியில் நிற்கிறது. பத்து ஆண்டுகள் தொடர்ந்து பணம் சம்பாதித்து, ஒரே நாளில் இழக்கலாம்,” என்கிறார்.
யூக முன்பேர வணிகம் தொடர்பாக அக்டோபர் முதல் செபி கொண்டு வர உள்ள புதிய நெறிமுறைகள், ஜீரோதா போன்ற தள்ளுபடி வர்த்தக மேடைகளுக்கு வருவாய் குறைப்பை ஏற்படுத்தலாம் என நிதின் காமத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
"புதிய கட்டுப்பாடு விதிகள் காரணமாக, அடுத்த ஆண்டு வருவாய் 30-40% குறையலாம் என தெரிவித்தவர், ஜீரோதாவை பொருத்தவரை, உச்சத்தை தொட்டுள்ளோம். மொத்த புரோக்கரிங் துறையும் வருவாயில் உச்சம் தொட்டுள்ளது,” என்கிறார்.
எனவே, பல நிறுவனங்கள் புரோக்கரிங் தவிர துணை சேவைகளில் விரிவாக்கம் செய்கின்றன. ஜீரோதாவும், கடன் சேவை (ஜீரோதா கேபிடல்), காப்பீடு, மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதிநுட்ப பிரிவுகளில் விரிவாக்கம் செய்து வருகிறது.
"நாங்கள் 100 சதவீதம் இருக்க விரும்பாத பரப்புகளில் ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் 60 சதவீதமாக இருந்து, நிறுவனர்கள் அவர்கள் விரும்பிய விதத்தில் வளரும் தொழில்முனைவு சுதந்திரம் அளிக்க விரும்புகிறோம். நிதி மற்றும் வாடிக்கையாளர்கள் நோக்கில் ஆதரவு அளிக்கிறோம்," என் காமத் விளக்கம் தருகிறார்.
"நிறுவனம் பெரிதாகும் போது ஊழியர்களையும், அணிகளையும் நியமித்து வளர்ச்சியை பிரதியெடுக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், உங்களுக்கு தொழில்முனைவு ஆற்றல் தேவை. நாங்கள் அந்த வழியில் தான் செல்கிறோம்,” என்கிறார்.
பொது வெளியீடு பற்றி கேட்டால், எல்லா ஸ்டார்ட் அப்களும் இதில் ஆர்வம் செலுத்தும் நிலையிலும், காமத் தனக்கு இதில் உடன்பாடில்லை என்கிறார்.
"நாங்கள் பட்டியலிட விரும்பாததற்கான காரணங்களில் ஒன்று, பட்டியலிடப்பட்டதும் நீங்கள் ஏதேனும் ஒன்றாகி விடுகிறீர்கள். ஆண்டுதோறும், வர்த்தகம், வருவாய், லாபத்தில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறது. மூலதனம் திரட்டாமலேயே இந்த இடத்தில் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம். இதே முறையில் வளர விரும்புகிறோம். இது மிகுந்த சுதந்திரம் அளிக்கிறது. தினமும், மாதந்தோறும், காலாண்டுதோறும் வருவாய், லாபம், பற்றி கவலைப்படுவதில் இருந்து விடுவிக்கிறது,” என்கிறார்.
"இந்தியாவில் லாபகரமான, நீடித்த வர்த்தகம் உருவாக்க நீண்ட காலம் தேவை. 7 அல்லது 10 ஆண்டுகளில் யாரேனும் உங்களை வெளியேற வற்புறுத்தினால், அது சரியாக வராது என்பவர் நிதானமாக இருந்து போட்டியில் வெல்லலாம் என்கிறார். வாழ்க்கையில் மட்டும் அல்ல வர்த்தகத்திலும் தான்!
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan