2021 தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம்?
2021 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி சதவிகிதம் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
5 முனைப் போட்டியாக அரசியல் கட்சிகள் களம் கண்ட தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக கட்சிக்கே பிரதான முக்கியத்துவம் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் 3வது இடத்தை பிடிக்கப் போகும் கட்சி எது என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது.
159 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது, திமுக தனித்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தேர்தல் களம் கண்ட அரசியல் கட்சிகளின் பலம் எப்படி இருக்கிறது என்பதை கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளை வைத்துப் பார்க்கலாம்.
கடந்த தேர்தலை விட 2021 தேர்தலில் திமுகவின் பலம் கூடி இருக்கிறது.
- 2016ம் ஆண்டில் 31.6% வாக்குகளைப் பெற்றிருந்த அந்தக் கட்சியானது இந்தத் தேர்தலில் 1 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்து 421 வாக்குகளைப் பெற்று 37.70% என தனது வாக்கு வங்கி சதவிகிதத்தை உயர்த்தி இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. அதிமுக, பாமகவின் கோட்டையான வடமாவட்டங்களில் இந்த முறை அந்தக் கட்சிகளின் கூட்டணி எடுபடவில்லை, அந்த வாக்குகள் திமுகவின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன.
- அதிமுக கடந்த முறை வைத்திருந்த 40 சதவிகித வாக்கு வங்கியில் இருந்து சரிந்து 33.29% வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியானது 1 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கொங்கு மண்டலத்தை தக்க வைத்துக் கொண்டாலும் அதிமுகவின் கோட்டையான பல மாவட்டங்களில் அந்தக் கட்சி மக்களின் செல்வாக்கை இழந்ததே இந்த சரிவிற்கான காரணமாகத் திகழ்கிறது.
- இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 4.28%,
- பாட்டாளி மக்கள் கட்சி - 3.81%
- இந்திய கம்யூனிஸ்ட் - 1.09%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.85%
- பாஜக - 2.63%, விசிக- 1.3%,
- முஸ்லிம் லீக்- 0.48%,
- நாம் தமிழர் கட்சி 6.6%,
- அமமுக - 2.4% வாக்குகளையும்
- மற்றவை 14.46 சதவிகிதம் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
- தேமுதிக - 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பதனால் அந்தக் கட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது. 2016ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆக இருந்தது. 2019 எம்பி தேர்தலில் 2.19 சதவீதமாக குறைந்து, இன்று அக்கட்சி தன்னுடைய முரசு சின்னத்தையும் இழக்கக் கூடிய அபாயத்தில் உள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் நோட்டாவைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.
தமிழகத்தில் நோட்டாவின் வாக்கு சதவீதம் 0.77 ஆகும். அது போல் தேமுதிக அதைவிட குறைவாக 1 லட்சத்து 95 ஆயிரத்து 610 வாக்குகள் பெற்று 0.43 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே வைத்திருக்கிறது. அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் டெபாசிட்டை கூட இழந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு இந்தத் தேர்தல் சற்றே நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, தமிழ்த் தேசியம்' என அடிப்படைக் கொள்கைகளை வகுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி, வழக்கமான அரசியல் பாதையிலிருந்து விலகி, தனித்துக் களம் காண்பது அந்தக் கட்சியின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெளிப்பாடே நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 29 லட்சத்து 58 ஆயிரத்து 454 வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை 6.85 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
முதல் முறையாக தேர்தல் களம் கண்டாலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 லட்சத்து 58 ஆயிரத்து 847 வாக்குகளைப் பெற்று 2. 45 சதவிகித வாக்கு வங்கியை தனது வசமாக்கியுள்ளது. கோவை தெற்று தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் முதல் தேர்தலிலேயே வெற்றிக்கு மிக அருகில் வந்து ஆயிரத்து 100 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.