2 ஆண்டுகள் நோ ஃபேஸ்புக், நோ சோஷியல் மீடியா: ஐஏஎஸ் தேர்வில் 14ம் இடம் பிடித்துள்ள அங்கிதா!
அரசு பொதுத் தேர்வுகளில் மிகக் கடினமான தேர்வு UPSC தேர்வு; அத்தேர்வில் தேர்ச்சிபெற்று முதன்மையில் இருக்கும் ஐஏஎஸ் பதிவியை எட்டிப்பிடிப்பது என்பது சாதரணமான செயல் அல்ல.
பொதுவாகவே தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்றால் சில தியாகம் செய்ய வேண்டும். அதிலும் இது போன்ற கடினமான தேர்வுகள் என்றால் பலவற்றை இழக்க வேண்டும் அப்படி 2 வருடமாக சமூக வலைத்தளத்தைப் புறக்கணித்து தீவிரமாக படித்து UPSC தேர்வில் இந்தியளவில் 14 ஆம் இடம் பிடித்துள்ளார் அங்கிதா.
ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா, ஹிந்து கல்லூரி டெல்லி பல்கலைகழகத்தில் பி எஸ்சி முடித்துள்ளார். அதன் பின் ஐஐடி டெல்லியில் மேல் படிப்பை முடித்த இவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனால் தேர்வுக்கு தன்னை தயார் செய்து UPSC தேர்வை மேற்கொண்டார். முதல் முயற்சி அவருக்கு தோல்வியை தந்துதுள்ளது.
தன் கனவை நினைவாக்க முழு முயற்சி தேவை என முடிவு செய்த அங்கிதா, தன் கவனத்தை முழுவதும் படிப்பிற்கு செலுத்த சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார். இரண்டு வருடம் படிப்பில் மட்டுமே கவனம் இருந்ததால் இன்று இந்திய அளவில் 14 ஆம் இடம் பிடித்துள்ளார்.
“இரண்டு வருடம் சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருக்க முக்கியக் காரணம் படிப்பில் எந்தவித தடையும் ஏற்படக்கூடாது என்பதற்கு தான்...” என்கிறார்.
இன்றைய இளைஞர்களுக்கு சமூக வலைதளமே வாழ்வாகிவிட்டது, இண்டர்நெட்டும், சமூக வலைப்பக்கமும் இல்லாத ஒருவரைக் கூட நாம் காண முடியாது. எதுவுமே இல்லை என்றால் கூட ஸ்மார்ட்ஃபோனை எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் எதோ ஒன்றை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தச் சூழலில் இரண்டு வருடம் வலைப்பக்கங்கள் பக்கம் வராமல் படிப்பில் கவனம் செலுத்தியதே இவருக்கு சவாலாக இருந்திருக்கும்.
அதுமட்டுமின்றி 4 வருடத்திற்கும் முன் ஓர் விபத்தில் தன் தாயை இழந்துவிட்டார், கணக்காளராக இருக்கும் இவரது தந்தை சத்யவானின் உந்துதலால் இன்று வெற்றிபெற்றுள்ளார் அங்கிதா.
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு சத்யவான் அளித்த பேட்டியில்,
“எப்பொழுதும் படிப்பில் முதன்மையாகவே இருப்பார் அங்கிதா, படிப்பு மட்டுமன்றி விளையாட்டு போன்ற மற்ற செயல்களிலும் பங்கேற்றுக்கொள்வார். இன்று எங்கள் குடும்பத்திற்கு இன்னும் பெருமை சேர்த்துவிட்டாள்,” என பெருமிதம் கொள்கிறார்.
கவனமும், முடித்தாக வேண்டும் என்ற முனைப்புமிருந்தால் எந்த போட்டியிலும் வெற்றிபெறலாம்!
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்