கிராமப்புற மாணவர்கள் ரோபோடிக்ஸ் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்கும் ‘ரோபோடெக்ஸ் இந்தியா’
ரோபோடெக்ஸ் இந்தியா இந்தியா முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்றவற்றைக் கற்பதில் இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரோபோடெக்ஸ் இண்டர்நேஷனல் என்கிற அமைப்பு ரோபோடிக்ஸ் பிரிவில் மாணவர்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. 2001-ம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2018-ம் ஆண்டு 'ரோபோடெக்ஸ் இந்தியா’ (Robotex India) என்கிற லாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார் பாயல் ராஜ்பால். நகர்புறம், கிராமப்புறம், பழங்குடியினப் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு STEAM, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஐஓடி ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
”இந்தியாவில் ரோபோடிக்ஸ், கோடிங் போன்றவை கல்லூரி மாணவர்களுக்கே கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார் ரோபோடெக்ஸ் இந்தியா இயக்குநர் மற்றும் 'ஹேக் தி கிரைசிஸ்’ நிறுவனர் பாயல்.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது. இந்த மாணவர்கள் ஏராளமான புதுமையான கண்டுபிடிப்புகளை வடிவமைத்துள்ளனர்.
செயல்பாடுகள்
புனேவைச் சேர்ந்த ரோபோடெக்ஸ் இந்தியா 2018-ம் ஆண்டு முதல் முறையாக ரோபோடெக்ஸ் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தியது. உலகளவில் பங்கேற்ற மாணவர்களுக்கு நிகராக இந்திய மாணவர்கள் பங்கேற்றனர். 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களிடமிருந்து பிராஜெக்ட்ஸ் பெறப்பட்டன.
இவர்களில் எட்டு வயது மாணவர் ஒருவர் பாயலிடம் சென்றார். ஆங்கில மொழியைத் தவிர்த்து உள்ளூர் மொழியில் விளக்கமளிக்கலாமா எனக் கேட்டுள்ளார். அந்தச் சிறுவன் விவசாயம் தொடர்பான ரோபோ உருவாக்கியிருந்தார். விதைகளை விதைக்கும் இந்த ரோபோ விவசாயிகளின் 25 சதவீத நேரத்தை மிச்சமாக்கக்கூடியது.
இந்த சிறுவனின் அம்மா வீட்டு வேலை செய்கிறார். அந்த வீட்டு உரிமையாளரின் மகன் இந்த சிறுவனுக்கு ரோபோவை கொடுத்துள்ளான். உடனே சிறுவன் யூட்யூப் மூலம் கற்றுக்கொண்டு கோட் உருவாக்கி ரோபோபின் அசைவுகளை உருவாகியுள்ளான்.
அப்போதுதான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினப் பகுதிகள், அரசுப்பள்ளிகள் போன்ற இடங்களில் ரோபோடெக்ஸ் இந்தியா தொடங்கவேண்டும் என்று பாயல் முடிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். மாணவர்களால் பல்வேறு முன்வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சிகள் பலரது கவனத்தைப் பெற்றதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் உதவ முன்வந்தன.
கிராமப்புற குழந்தைகளுக்கு ரோபோடிக்ஸ்
முதல் முறையாக மகாராஷ்டிராவின் கோடேகான் பகுதியில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 20 பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமாக கற்றுக்கொண்டதாக பாயல் குறிப்பிடுகிறார்.
ரோபோடெக்ஸ் மேலும் ஆறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு 2019 சாம்பியன்ஷிப்பில் மாணவர்கள் எண்ணிக்கை இருமடங்கானது.
“மாணவர்களின் பெயர்களைக் கூப்பிடுவதற்கு முன்பு, அவர்கள் பெட்டியில் இருந்து ரோபோவை ஒரு பொக்கிஷம் போல் எடுத்து மிகவும் கவனமாக கையாண்டதைப் பார்த்தபோது கண்கள் பனித்துப்போனது,” என்கிறார் பாயல்.
மெய்நிகர் வடிவில் பயிற்சி
“ஜில்லா பரிஷத் அமைப்பின் சிஇஓ-வும் கல்வித் துறையும் எங்கள் நோக்கத்திற்கு உதவினார்கள்,” என்கிறார் பாயல்.
ரோபோடெக்ஸ் இந்தியா மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 11,000 மாணவர்களுக்கு தற்போது பயிற்சியளித்து வருகிறது.
இவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் மெய்நிகர் வடிவில் பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் நேரலை வகுப்பு முடிந்த பிறகு LMS மூலம் பயிற்சி வீடியோக்களை பார்க்க தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.
2021 சாம்பியன்ஷிப் ஆன்லைன் டிஜிட்டல் போட்டியாக நடக்க உள்ளது. சுற்றுச்சூழல், விவசாயம், கோவிட் தொற்றுக்கு பிறகான பொருளாதார புத்தாக்கம், நிலைத்தன்மை, கல்வி, அறிவியல் ஆகிய பிரிவுகளின்கீழ் போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் ரோபோடிக்ஸ் மற்றும் கோடிங் சார்ந்த புதுமையான பிராஜெக்டுகளை மாணவர்கள் காட்சிப்படுத்துவார்கள்.
ஹேக்கதான் மாடலில் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு ரோபோடெக்ஸ் இந்தியா வெற்றியாளர்கள் ரோபோடெக்ஸ் ஏசியா மற்றும் ரோபோடெக்ஸ் இண்டர்நேஷனலில் பங்கேற்பார்கள்.
பயிற்சியின் தாக்கம்
“20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளோம்,” என்கிறார் ரோபோடெக்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மனீஷா சவந்த்.
ரோபோடெக்ஸ் இந்தியா குழுவில் இணைந்துள்ள 50 ஊழியர்களும் 100 தன்னார்வலர்களும் பயிற்சியளிக்கிறார்கள்.
ஏழை மாணவர்களைச் சென்றட்டைய Teach for India போன்ற என்ஜிஓ-க்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உதவியுள்ளனர்.
தற்போது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி பெறப்படும் நிலையில் ‘ரோபோடெக்ஸ் ஃபார் ரூரல்’ பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்ய ஆரம்பத்தில் தனது சொந்த சேமிப்பை செலவிட்டுள்ளார் பாயல்.
“கார்ப்பரேட் மூலம் நிதியுதவி கிடைப்பதுடன் ஊழியர்களும் தன்னார்வலப் பணிகளில் பங்களிக்கிறார்கள். Ficci Flo, Rotary போன்ற அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டுகின்றன. இதனால் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எங்களால் பயிற்சியளிக்க முடிந்தது,” என்கிறார் பாயல்.
சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
“பெரும்பாலான பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பகல் நேரங்களில் மொபைல் போனைக் கொடுக்கமுடிவதில்லை. இதனால் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது சவாலாக இருந்தது. எனவே மாலை 6 மணிக்கு மேல் வகுப்பு ஏற்பாடு செய்தோம்,” என்கிறார்.
லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு அதிக டேட்டா தேவைப்படும் என்பதால் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ள குழுவினர் உதவியுள்ளனர்.
“குழந்தைகளின் ஆர்வத்தைத் தக்கவைக்க வகுப்புகளை சுவாரஸ்யமான முறையில் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது,” என்கிறார் ரோபோடெக்ஸ் இந்தியா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆயுஷ் ஜோஷி.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், STEAM போன்றவற்றை எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து குழந்தைகளும் கற்றுக்கொள்வதை உறுதிசெய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ரோபோடெக்ஸ் இந்தியா.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா