Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தெரு பைப்பில் குளியல், குடிசை வீடு, சைக்கிள் பயணம்: மத்திய அமைச்சர் ஆன ‘ஒடிசா மோடி’ன் எளிமையான வாழ்க்கை!

மோடியின் மத்திய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதாப் சந்திர சாரங்கியை மக்கள் ஒடிசாவின் மோடி என்று தான் அழைக்கின்றனர். தெருவோர பைப்பில் குளியல், சைக்கிளில் பயணம், குடிசை வீடு என எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரு பைப்பில் குளியல், குடிசை வீடு, சைக்கிள் பயணம்: மத்திய அமைச்சர் ஆன ‘ஒடிசா மோடி’ன் எளிமையான வாழ்க்கை!

Monday June 03, 2019 , 4 min Read

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அவருடன் 58 பேர் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது.

இந்த 58 அமைச்சர்களில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி தான். 64 வயதாகும் இவர், பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

sarangi

Photo courtesy : ANI

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவரது குடும்பம் ஏழ்மையானது. ஆனாலும், கஷ்டப்பட்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் பிரதாப் சாரங்கி. சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்ததால், ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை-எளியவர்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்யத் தொடங்கினார்.

ஏழை மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற ஆசையில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என முடிவெடுத்தார் சாரங்கி. இதற்காக துறவி ஆகவும் அவர் திட்டமிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார். ஆனால், தனிமையில் வசிக்கும் வயதான தாயை கவனித்துக் கொள்ளும்படிக் கூறி, அவரை திரும்பி அனுப்பி விட்டனர் அங்கிருந்தோர்.

இதனால் மீண்டும் ஒடிசா திரும்பிய சாரங்கி, துறவறம் கிடைக்காவிட்டால் என்ன, மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்வது என மனதில் உறுதி பூண்டார். அதன்படி, மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை அவர் தொடங்கினார்.

மக்களின் குறைகளைக் களைவதற்காக தனது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டார். மண் சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் அவரது வீட்டில் முறையான தண்ணீர் வசதிகூட இல்லை. தனது வீட்டிற்கு அருகேயுள்ள தெருவோர குழாயில் தான் அவர் தினமும் குளிக்கிறார். போக்குவரத்திற்கு சைக்கிளை மட்டுமே பயன்படுத்துகிறார்.

cycle

Photo courtesy: Timesnow

ஒரு கட்டத்தில் தனது சமூகசேவையின் எல்லையை விரிவு படுத்த நினைத்த சாரங்கி, நேரடி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 2004ம் ஆண்டு பலாசூர் பகுதியில் உள்ள நீலகிரி சட்டசபைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான அனுமதிச் சீட்டுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அது காணாமல் போனது. இதனால், அம்முறை அவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சாரங்கியின் மக்கள் நலனால் கவரப்பட்ட அத்தொகுதி மக்கள், அடுத்த தேர்தலிலும் அவரையே வெற்றி பெற வைத்தனர். இதனால், 2004 முதல் 2014ம் ஆண்டு வரை அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக அவர் பதவி வகித்தார்.

ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை, ’ஒடிசாவின் மோடி’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினர். அதோடு, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டவர் என்பதால், அவரை குருஜி என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். சாரங்கியின் தாய், சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்ததையடுத்து, தற்போது குடிசை வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

2014-ம் ஆண்டு பலாசூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். ஆனால், அம்முறை அவருக்கு வெற்றி வசப்படவில்லை. இந்நிலையில், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.

பலாசூர் தொகுதியில் இம்முறை சாரங்கியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் இரண்டு பேர் அதிக செல்வாக்கு கொண்டவர்கள். ஒருவர் பிஜுஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சிட்டிங் எம்.பி-யும் தொழிலதிபருமான ரபீந்திரகுமார் ஜெனா. பெரும் பணக்காரரான அவருக்கு சொந்தமாக செய்தித் தொலைக்காட்சி இருக்கிறது. ஜெனாவுக்கு ஆதரவாக, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கே நேரடியாக அத்தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் மக்களிடம் பிரபலமானவர் இவர். நபஜோதியின் சித்தப்பாவான சௌமியா ரஞ்சன் பட்நாயக், ஆளும்கட்சியான பிஜுஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்துவருகிறார். ஒடிசாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான ஈஸ்டர்ன் மீடியா லிமிட்டெட் (EML) ரஞ்சன் பட்நாயக்குக்குச் சொந்தமானது. அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் சம்பாத் (Sambad) மற்றும் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சியான கனக் டிவி (Kanak TV) ஆகியவை ஈஸ்டர்ன் மீடியாவுக்குச் சொந்தமானவை.

இப்படியாக பலம் பொருந்திய தனது போட்டியாளர்களுக்கு மத்தியில், தனது எளிமையால் மக்களைக் கவர்ந்தார் சாரங்கி. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான இவர் மீது இரக்கம் கொண்ட அந்த இயக்கம், தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோ ஒன்றை கொடுத்தது. அந்த ஆட்டோவிலேயே சென்று வாக்கு சேகரித்த அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. சாரங்கிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடியே அத்தொகுதிக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த காரணங்களால் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சாரங்கி வெற்றி பெற்றுள்ளார்.

modi

Photo courtesy : India ahead

மக்களவைக்குத் தேர்வான முதல் தடவையே அமைச்சராகவும் அவருக்கு அந்தஸ்து கிடைத்துள்ளது. பதவியேற்பு விழாவிற்காக ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு வந்த அவர், கூடவே தனது எளிமையையும் கையோடே கொண்டு சென்றிருந்தார். மற்ற அமைச்சர்களின் ஆடம்பர உடைகளுக்கு முன்னர் பழைய உடை, ஜோல்னா பை என தனித்துவமாக அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

சாரங்கியின் இந்த எளிமையைக் கண்டு பதவியேற்பிற்காக வந்திருந்த மற்ற தலைவர்களும், பிரபலங்களும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அதனால்தான் அவர் பதவி ஏற்க வந்தபோது வாழ்த்து கோ‌ஷமும், கரகோ‌ஷமும் அதிகமாக இருந்தது.

அவரது டெல்லி பயணக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் மட்டுமே பிரபலமாக இருந்த சாரங்கி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பிரபலமாகி இருக்கிறார்.

சாரங்கி ஒடியா மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதமும் சரளமாக பேசுவதில் வல்லவர். இதுவரை ஒருமுறைகூட வருமான வரி கட்டியது இல்லை இவர். காரணம் அந்தளவிற்கு அவருக்கு வருமானம் வந்ததில்லை. இதனை தனது வேட்புமனுவிலேயே அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இவரது பெயரில் வங்கிகளிலோ, தபால் அலுவலகத்திலோ சேமிப்புக் கணக்கு எதுவும் இல்லை. அதோடு, வாகனங்கள், வீடுகள், நிலங்கள் என்று எதுவும் இவருக்கு சொந்தமாகக் கிடையாது.

தனது மூதாதையர்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை பயிரிட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் தன்னால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கும் உதவி, தானும் வாழ்ந்து வருகிறார் சாரங்கி.

மூதாதையர் வகையில் மட்டும், தனக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாக தனது வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும், யாரும் எளிதில் அணுகும் வண்ணம் இருப்பது தான் இந்த ஒடிசா மோடியின் சிறப்பம்சம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். தனது ஏழ்மை நிலையிலேயே மக்களுக்காக மிகவும் பாடுபட்டவரான சாரங்கி, இன்று அமைச்சர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். இதனால் நிச்சயம் தங்களுக்கு இன்னும் நிறைய உதவிகள் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் உயரும் என நம்புகின்றனர் அவர்கள்.